வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன

Posted On: 12 AUG 2020 12:56PM by PIB Chennai

தெருவோர வியாபாரிகளுக்கான பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் முறை ஆரம்பிக்கப்பட்ட  2020 ஜூலை 2 ஆம் தேதியிலிருந்து, 41 நாட்களுக்குள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன. பிரதமர் ஸ்வநிதி திட்டத்திற்கு தெருவோர வியாபாரிகளிடையே கணிசமான அளவு வரவேற்பு உள்ளது கோவிட் 19 பொது முடக்க காலத்திற்குப் பிறகு, தங்கள் வியாபாரத்தை மீண்டும் துவங்குவதற்காக, திருப்பிச் செலுத்தக்கூடிய அளவிலான, பணி மூலதனக் கடன் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்த தெரு வியாபாரிகளுக்கு, இந்தக் கடன் திட்டம் உற்சாகம் அளித்துள்ளது.

 

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் பிரதமர் ஸ்வநிதி திட்டம் துவங்கப்பட்டது. கோவிட் 19 பொது முடக்க காலத்திற்குப் பிறகு தங்கள் வியாபாரங்களை மீண்டும் துவங்குவதற்காக, நகர்ப்புறங்களிலும், நகர்ப்புறங்களை சுற்றியுள்ள பகுதிகளிலும், கிராமப்புறப் பகுதிகளிலும் உள்ள சுமார் 50 லட்சம் பேர் வியாபாரிகளுக்கு, ஓராண்டு காலத்திற்கான பிணை இல்லாக் கடனாக பத்தாயிரம் ரூபாய் வரை பணி மூலதனக் கடன் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கடனை முறையாக திருப்பி செலுத்துபவர்களுக்கு, வட்டி மானியம் ஆண்டொன்றுக்கு 7 சதவிகிதம் வழங்கப்படும். குறிப்பிட்ட பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் செய்பவர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1,200 ரூபாய் ரொக்கம் அவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும். முறையாக கடனை திருப்பி செலுத்துபவர்கள், அடுத்த கட்ட கடன் பெறுகையில் கடன் தொகை அதிகரித்து பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

 

இந்த “நானோ தொழில் முனைவோர்” தெருவோர வியாபாரிகளுக்கு அவர்களது வாயிலிலேயே வங்கிகளைக் கொண்டுவர, பிரதமர் ஸ்வநிதி திட்டம் திட்டமிட்டுள்ளது. இதற்கென வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நுண் நிதி அமைப்புகள் போன்ற, அமைப்புகளும், தனியார், பொதுத்துறை வங்கிகள், மண்டல கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான வங்கிகள் ஆகியவையும் இச் சேவையில் ஈடுபடும். தெருவோர வியாபாரிகள் முறையான நகர்ப்புற பொருளாதாரத்தில் ஒரு பகுதியாக இடம் பெறும் வகையில், அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடைய கடன் விவரங்கள் பற்றிய தரவுகளை டிஜிட்டல் தங்களில் பதிவிடுவது மிக முக்கியமாகும்.

 

இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தெரு வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதை ஊக்குவிப்பதற்காக, கடன் வழங்கும் அமைப்புகளுக்கு (சி ஜி டி எம் எஸ் இ) சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உறுதி நிதிய டிரஸ்ட் மூலமாக போர்ட்போலியோ அடிப்படையில் படிப்படியான கியாரண்ட்டி வழங்கப்படுகிறது.

*****



(Release ID: 1645313) Visitor Counter : 553