பிரதமர் அலுவலகம்

பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் 2020 பெருநிறைவு நிகழ்வில் பிரதமரின் உரை தமிழாக்கம்

Posted On: 01 AUG 2020 7:08PM by PIB Chennai

மிகச்சிறந்த தீர்வுகளுக்காக நீங்கள் பணியாற்றுகிறீர்கள். நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வளிக்க மட்டும் நீங்கள் உதவவில்லை தகவல்திரட்டு, டிஜிட்டல்மயம், உயர்தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பான இந்தியாவின் விருப்பங்களை வலுப்படுத்தவும் உதவுகின்றீர்கள்.

 

நண்பர்களே, கடந்த நூற்றாண்டுகளில் மிகச்சிறந்த விஞ்ஞானிகளை, மிகச்சிறந்த தொழில்நுட்பாளர்களை, தொழில்நுட்ப நிறுவனத் தலைவர்களை உலகுக்கு வழங்கியிருப்பதற்கு நாம் எப்போதும் பெருமிதம்கொள்கிறோம். ஆனால் இது 21ஆம் நூற்றாண்டு, வேகமாக மாறிவரும் உலகம் என்பதால் அதேபோன்ற தீவிரமான பங்களிப்பைச் செய்வதற்கு சாத்தியமான வேகத்தில் இந்தியா தாமாகவே மாற்றம்பெற வேண்டும்.

இந்தச் சிந்தனையோடு, புதிய கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, வடிவமைப்பு, வளர்ச்சி ஆகியவற்றுக்கு உகந்த சூழலை விரைவாக நாட்டில் மேம்படுத்துவது அவசியம். 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்துடன் தரமான கல்வி குறித்து இப்போது அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 21ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்கின்ற கல்விமுறை அதேஅளவுக்கு முக்கியமானது.

பிரதமரின் இணையவழி கற்றல்திட்டம் அல்லது அடல் புதிய கண்டுபிடிப்பு இயக்கம், நாட்டில் அறிவியல் உணர்வை அதிகரிக்கப் பல துறைகளில் கல்வி உதவித்தொகை விரிவாக்கம், அல்லது விளையாட்டுத் திறமைக்கு நவீன வசதிகள் மற்றும் நிதி ஆதரவு, ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள் அல்லது இந்தியாவில் உலகத் தரத்திற்கு 20 உயர்தகுதி நிறுவனங்களை உருவாக்கும் இயக்கம், இணையவழி கல்விக்குப் புதிய ஆதாரவளங்களை உருவாக்குதல் அல்லது பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் போன்ற இயக்கங்கள் என எதுவாக இருந்தாலும் இத்தகைய முயற்சிகள் இந்தியாவின் கல்வியை மேலும் நவீனமாக்கவும், இதன் திறமைகள் வாய்ப்புகள் பெறுவதை உறுதிசெய்யவும் மேற்கொள்ளப்படுகின்றன.

 

நண்பர்களே,

இந்த அடிப்படையில் ஒருசில நாட்களுக்குமுன் நாட்டின் புதிய கல்விக் கொள்கை அறிவிக்கப்பட்டது. 21ஆம் நூற்றாண்டு இளைஞர்களின் சிந்தனை, தேவைகள், நம்பிக்கைகள், விருப்பங்களைக் கருத்தில்கொண்டு இந்தக் கொள்கையை உருவாக்க மாபெரும் முயற்சி செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு, நாடு முழுவதும் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு முனையிலும் விரிவான விவாதங்களும் கலந்தாலோசனைகளும் நடத்தப்பட்டன.

உண்மையான உணர்வில் புதிய இந்தியாவின் கல்விக் கொள்கை இந்தியாவின் கனவுகளையும், எதிர்கால இந்தியத் தலைமுறைகளின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பிதிபலிக்கிறது. ஒவ்வொரு பிராந்தியத்தையும், ஒவ்வொரு மாநிலத்தையும் சேர்ந்த அறிஞர்களின் கண்ணோட்டங்களை இது கொண்டுள்ளது. எனவே இது வெறும் கொள்கை ஆவணம் மட்டுமல்ல 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிப்பதுமாகும்.

 

நண்பர்களே, தங்களுக்கு விருப்பமில்லாத பாடத்தின் அடிப்படையில் தாங்கள் மதிப்பிடப்படுவதாகப் பல குழந்தைகள் உணர்வதை இப்போதும்கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஒட்டுமொத்த சூழலாலும் அவர்கள் அழுத்தப்படுகின்றனர்; இதைத்தொடர்ந்து மற்றவர்கள் தெரிவுசெய்யும் பாடங்களை அவர்கள் படிக்கத் தொடங்குகின்றனர். நன்கு கல்விகற்ற மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாட்டில்  இந்த அணுகுமுறையே உள்ளதால் அவர்கள் படித்த பெரும்பாலானவற்றால்  அவர்களுக்கு எந்தப்பயனும் இல்லை. நிறைய பட்டங்கள் பெற்றபிறகும் அவர் முழுமையடையாததாக உணர்கிறார். அவருக்குள் இருக்கவேண்டிய நம்பிக்கையில் குறைபாடு இருப்பதாக அவர் உணர்கிறார். இது அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைப் பயணத்தையும் பாதிக்கிறது.

 

நண்பர்களே, புதிய கல்விக் கொள்கை மூலம் இந்த அணுகுமுறையை மாற்ற முயற்சி செய்யப்படுகிறது. முன்பிருந்த குறைபாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கல்விமுறையில் முறைப்படியான சீர்திருத்தங்களுக்கும் கல்வியின் நோக்கம், உள்ளடக்கம் என இரண்டிலும் மாற்றம் ஏற்படுத்தவும் இப்போது முயற்சி செய்யப்படுகிறது. 

 

நண்பர்களே,

21ஆம் நூற்றாண்டு அறிவின் சகாப்தமாகும். கற்றல், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பில் கவனத்தை அதிகரிப்பதற்கான தருணம் இது. இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை இதைத்தான் மிகச்சரியாக செய்திருக்கிறது. உங்களின் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக அனுபவத்தைப்  பயனுள்ளதாகவும் பரந்த அடிப்படையுள்ளதாகவும் உருவாக்க இந்தக் கொள்கை விரும்புகிறது; உங்களின் இயல்பான ஆர்வங்களில் உங்களுக்கு வழிகாட்டும் ஒன்றாக இருக்கிறது.

 

நண்பர்களே, இந்தியாவின் மிகச்சிறந்தவர்களில் அறிவார்ந்தவர்களிடையே நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் தீர்வுகாண முயற்சிசெய்த முதல் பிரச்சனையாகவும் இந்த ஹேக்கத்தான் இருக்கவில்லை. கடைசியானதாகவும்  இருக்கவில்லை. நீங்களும் உங்களைப்போன்ற இளைஞர்களும் மூன்று செயல்கள் செய்வதை நிறுத்தக் கூடாது என்று நான் விரும்புகிறேன்: கற்றல், கேள்விகேட்டல், தீர்வுகாணுதல்.

நீங்கள் கற்கும்போது, கேள்விகேட்பதற்கான அறிவைப் பெறுகிறீர்கள். நீங்கள் கேள்விகேட்கும்போது தயக்கங்களிலிருந்து வெளியேறி பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வழிமுறைகளை அடைகிறீர்கள். இதைச் செய்யும்போது நீங்கள் வளர்கிறீர்கள். உங்களின் முயற்சி காரணமாக நமது தேசம் வளர்கிறது. நமது கோள் வளம்பெறுகிறது.

 

நண்பர்களே, இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை இந்த உணர்வுகளையே பிரதிபலிக்கிறது. பள்ளிக்குப் பிறகும் முடிந்துவிடாத பள்ளிக்கூட பையின் சுமையிலிருந்து வாழ்க்கைக்கு உதவும் கற்றலை ஊக்குவிக்கும்; வெறுமனே மனப்பாடம் செய்வதிலிருந்து செயல்பாட்டுச் சிந்தனையை ஏற்படுத்தும். பல ஆண்டுகளாகக் கல்விமுறையின் வரம்புகள் மாணவர்களின் வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.இனியும் தொடரக்கூடாது! தேசிய கல்விக் கொள்கை இளைய இந்தியாவின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. இது நடைமுறையை மையமாகக் கொண்டதல்ல; மக்களை மையமாகக் கொண்டது, எதிர்காலத்தை மையமாகக் கொண்டது.

 

நண்பர்களே,

இந்தக் கொள்கையில் மிகவும் வியக்கத்தக்க விஷயங்களில் ஒன்று பலதுறை கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதாகும். இந்தக் கோட்பாடு வரவேற்பைப் பெற்றுவருகிறது, சரியாகவும் செய்யப்பட்டுள்ளது. ஒரு அளவு, அனைவருக்கும் பொருத்தமாக இருப்பதில்லை. ஒரு பாடம் நீங்கள் யார் என்பதைத் தீர்மானிக்காது. புதிதாக சிலவற்றைக் கண்டறிவதற்கு எல்லைகள் எதுவும் இல்லை. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய அறிஞர்களுக்கான பல  உதாரணங்களை மனிதகுல வரலாறு கொண்டுள்ளது.

அது ஆரியபட்டாவாக, லியனார்டோ டா வின்சியாக, ஹெலென் கெல்லராக, குருதேவ் தாகூராக இருக்கலாம். கலைகள், அறிவியல், வணிகம் ஆகியவற்றுக்கு இடையேயான சில பாரம்பரிய இணக்கங்களை இப்போது நாம் கைவிட்டுவிட்டோம். சிலருக்கு ஆர்வம் இருந்தால் கணிதத்தையும் இசையையும் இணைத்து அல்லது கோடிங் மற்றும் வேதியியலைச் சேர்த்து அவர்கள் கற்கலாம். சமூகத்தால் மாணவரிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதைவிட, அந்த மாணவர் எதை விரும்புகிறாரோ அதைப் படிப்பதில் கவனம் செலுத்துவதை இது உறுதி செய்யும். பலதுறைப் படிப்புகள் உங்களைக் கட்டுப்படுத்துவதாக இருக்கலாம். நடைமுறையில் அது உங்களிடம் நெகிழ்ச்சியை உருவாக்கும். 

 

தேசிய கல்விக் கொள்கையில் நெகிழ்வுத் தன்மைக்கு அதிமுக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இளநிலை பட்டப்படிப்பு அனுபவம் மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் பயணமாக இருக்கலாம். கல்வி வங்கியில் செலுத்துகை எனும் ஆதாயங்களை மாணவர்கள் பெறுவார்கள்; அவர்களின் கல்விச் செலுத்துகை அனைத்தும் மொத்தமாகசேரும். இறுதிப் பட்டத்தில் இவை கணக்கிடப்பட்டு மாற்றப்படும். நமது கல்விமுறையில் இத்தகைய நெகிழ்வுத்தன்மை நீண்டகாலத் தேவையாக இருந்தது. இந்த அம்சத்தை தேசிய கல்விக் கொள்கை  கணக்கில்கொண்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

நண்பர்களே,

ஆரம்பக் கல்வி தொடங்கி கல்வி எளிதாகக் கிடைக்க தேசிய கல்விக் கொள்கை பெரிதும் உதவும். 2035க்குள் மொத்த சேர்ப்பு விகிதத்தை 50 சதவீதமாக உயர்த்துவது உயர்கல்வியின் நோக்கமாகும். பாலினத்தை உள்ளடக்கிய நிதியம், சிறப்புக் கல்வி மண்டலங்கள், திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி தெரிவு போன்ற பிற முயற்சிகளும் உதவியாக இருக்கும்.

 

நண்பர்களே, அனைவருக்கும் எளிதில் கிடைப்பதாகக் கல்வி இருக்க வேண்டும் என்று நமது நாட்டின் மகத்தான கல்வியாளரும் இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியுமான பாபா சாஹேப் அம்பேத்கர் கூறுவார். இந்தக் கல்விக் கொள்கையும் அவரது சிந்தனைகளுக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.  இந்தக் கல்விக் கொள்கை வேலை தேடுபவர்களைவிட வேலை உருவாக்குகின்றவர்களை உருவாக்குவதற்கே முக்கியத்துவம் அளிக்கிறது. நமது மனோபாவத்தில், நமது அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான பாதையில் இதுவும் ஒரு முயற்சியாக இருக்கிறது. வேலை செய்வதற்கா, சேவை செய்வதற்கா, தொழில்முனைவர் ஆவதற்கா என்பதை முடிவுசெய்யும் திறன்கொண்ட தற்சார்பு இளைஞரை உருவாக்க இந்தக் கொள்கை கவனம் செலுத்துகிறது.

 

நண்பர்களே,

மொழி என்பது நமது நாட்டில் உணர்ச்சிகரமான தலைப்பாக எப்போதும் இருந்துவருகிறது. இதுவே உள்ளூர் மொழிகளை அதன் சொந்த முடிவுக்கே நாம் விட்டுவிட்டதற்கான பெருங்காரணங்களில் ஒன்றாகும். அவை வாழ்வதற்கும் வளர்வதற்கும் மிகக்குறைந்த வாய்ப்பே உள்ளது. இப்போது கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களால் இந்திய மொழிகள் முன்னேறும், மேலும் வளரும். இது இந்தியாவைப் பற்றிய ஞானத்தை அதிகரிப்பது மட்டுமின்றி இந்தியாவின் ஒற்றுமையையும் வலுப்படுத்தும். நமது இந்திய மொழிகளில் வளமான அம்சங்கள் பல இருக்கின்றன. பல நூற்றாண்டு கால ஞானத்தையும் அனுபவத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்; இவை அனைத்தும் மேலும் விரிவாக்கப்படும். இந்திய மொழிகளின் வளத்தை இது உலகுக்கு அறிமுகமும் செய்யும். தாங்கள் வளரும் அடிப்படை ஆண்டுகளில் தங்களின் தாய்மொழியில் கற்பது மாணவர்களுக்குப் பெரும் பயனைத்தரும். 

இத்துடன் தங்களின் திறமையை வளர்ப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் அவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கும். நிர்பந்தம் இல்லாமல் புதிய விஷயங்களைக் கற்பதற்கான வசதியையும் ஊக்குவிப்பையும் அவர்கள் பெறமுடியும்; கல்வியோடு இணைய இது வாய்ப்பளிக்கும். ஜிடிபி அடிப்படையில் உலகில் முதலிடத்தில் உள்ள 20 நாடுகளின் பட்டியலை நீங்கள் பார்த்தால் அந்த நாடுகளில் பெரும்பாலானவை அவற்றின் தாய்மொழியில் கல்வி வழங்கியதை நீங்கள் காணலாம்.

இளைஞர்கள் தங்களின் சொந்த மொழியில் சிந்தனையையும் புரிந்துணர்வையும் மேம்படுத்தும் இந்த நாடுகள், உலகத்துடன் தொடர்புகொள்ள மற்ற மொழிகளுக்கும்கூட  முக்கியத்துவம் அளிக்கின்றன. இதே கொள்கையும் அணுகுமுறையும் 21ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கப்போகிறது. மொழிகளின் வியத்தகு களஞ்சியத்தை இந்தியா கொண்டுள்ளது; இவற்றைக் கற்பதற்கு ஒரு வாழ்க்கை போதாது; இப்போது உலகம் கூட இதில் ஆர்வமாக உள்ளது.

 

நண்பர்களே,

புதிய கல்விக் கொள்கை இன்னொரு சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. உள்ளூர் மீது கவனம் செலுத்தும் அதே அளவு உலகத்துடனும் அதனை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது. உள்ளூர் நாட்டுப்புற கலைகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கும், செவ்வியல் கலை மற்றும் ஞானத்திற்கும் இயற்கையான இடத்தை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கும்போதே தலைசிறந்த உலகக் கல்விநிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் திறக்கவும்கூட அழைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது இளைஞர்கள் இந்தியாவில் உலகத் தரத்திலான வெளிப்பாட்டையும் வாய்ப்புகளையும் பெறுவது மட்டுமின்றி உலகளாவிய போட்டிக்கும் கூட அதிகம் தயாராவார்கள். இந்தியாவில் உலகத் தரத்திலான கல்விநிறுவனங்கள் அமையவும் உதவுவதோடு உலகளாவிய கல்வியின் குவிமையமாகவும் இந்தியாவை இது உருவாக்கும்.

 

நண்பர்களே, நாட்டின் இளையோர் சக்தியில் நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். நான் ஏன் அவர்களிடம் நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்பதை நாட்டின் இளைஞர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். அண்மையில் கொரோனாவை எதிர்த்துப் போராட முகக்கவசங்களின் தேவை அதிகரித்தது. இந்தத் தேவையை நிறைவேற்ற முப்பரிமாண(3டி) அச்சுத் தொழில்நுட்பத்துடன் பெருமளவு உற்பத்திக்கு நாட்டின் இளைஞர்கள் முன்வந்தார்கள். இளம் கண்டுபிடிப்பாளர்களும் இளம் தொழில்முனைவோரும் முன்வந்து முழுஉடல்கவச ஆடைகளையும் (பிபிஇ), இதர மருத்துவ சாதனங்களையும் உற்பத்திசெய்த விதம் எல்லா இடங்களிலும் விவாதிக்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஆரோக்ய சேது செயலியுடன் கொவிட்டைக் கண்டறிவதற்கு மகத்தான வழிமுறையை இளம் அறிவியலாளர்கள் உருவாக்கினர்.

 

நண்பர்களே, தற்சார்பு இந்தியாவின் இளைஞர்களுக்கு நீங்கள் அனைவரும் ஆதார வளமாக இருக்கிறீர்கள். வாழ்க்கையை எளிதாக்கும் நமது இலக்கை அடைவதற்கும் நாட்டின் ஏழைகளுக்கு சிறந்த வாழ்க்கையை அளிப்பதற்கும் அனைத்து இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. நமது இளைஞர்களால் எதிர்கொள்ள முடியாத , அவர்களால் தீர்வுகாண முடியாத எந்த சவாலையும் நாடு எதிர்கொண்டிருக்கவில்லை என்பதில் நான் எப்போதும் நம்பிக்கையோடு இருக்கிறேன். தேவை ஏற்படும் தருணத்தில் எல்லாம், நாடு அதன் இளம் கண்டுபிடிப்பாளர்களை எதிர்நோக்குகிறது, அவர்கள் ஏமாற்றம் அளித்ததில்லை.

 

பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் மூலம் கடந்த ஆண்டுகளில் வியத்தகு புதிய கண்டுபிடிப்புகளை நாடு பெற்றுள்ளது. இந்த ஹேக்கத்தானுக்குப் பிறகும் கூட இளம் நண்பர்கள் அனைவரும் நாட்டின் தேவையை உணர்வார்கள், தற்சார்புள்ள நாட்டை உருவாக்க புதிய தீர்வுகள் குறித்த பணிகளைத் தொடர்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

 

நீங்கள் மிகவும் சிறப்புற மீண்டும் ஒருமுறை நான் வாழ்த்துகிறேன்!

 

மிக்க நன்றி!

****



(Release ID: 1645267) Visitor Counter : 263