பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு பழங்குடியின மக்கள் ஆற்றிய தியாகங்கள் மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களை பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகம் உருவாக்கி வருகிறது.
Posted On:
11 AUG 2020 3:00PM by PIB Chennai
பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களை அமைப்பது தொடர்பாக, 15 ஆகஸ்ட் 2016இல் நடைபெற்ற சுதந்திரதின உரையில் பிரதம மந்திரி குறிப்பிட்டு இருந்தார். அதனைச் செயல்படுத்தும் வகையில் பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகமானது சுதந்திரப் போராட்டத்திற்குப் பங்களிப்பு செய்த இந்தியாவின் பழங்குடியின மக்களுக்கான ”பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களை” அமைத்து வருகின்றது. ”பழங்குடியினர் வாழ்ந்த, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட, அவர்களுக்கு அடிபணிய மறுத்த மாநிலங்களில் நிரந்தரமான அருங்காட்சியகங்களை அமைப்பதற்கு அரசு விரும்புகிறது, அதற்காகத் திட்டமிட்டும் வருகிறது. இத்தகைய அருங்காட்சியகங்களைப் பல்வேறு மாநிலங்களிலும் அமைப்பதற்கு அரசு ஏற்பாடு செய்யும். அப்போது தான் வருங்காலத் தலைமுறையினர் தியாகங்கள் செய்வதில் நமது பழங்குடியின மக்கள் எவ்வாறு முன்னணியில் இருந்தனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்”, என்று பிரதம மந்திரி தனது உரையில் தெரிவித்திருந்தார்.
பிரதம மந்திரியின் அறிவுறுத்தலின்படி அனைத்து அருங்காட்சியகங்களும் மெய்நிகர் எதார்த்தம், இணைப்பு எதார்த்தம் மற்றும் 3-டி / 7-டி ஹாலோகிராஃப்பிக் புரஜெக்ஷன் ஆகிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.
தங்களது வாழ்வுரிமைக்காக பழங்குடியின மக்கள் போராடிய மலைப்பகுதிகள், காடுகள் வழியாக அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்த அருங்காட்சியகங்கள் பழங்குடியின மக்களின் வரலாற்றை முன்னிறுத்தும். அதனால் இருக்கும் இடத்திற்கு அப்பாலான கண்காட்சியானது வாழிடம் தொடர்பான பாதுகாப்புடன் இணைந்து மறுபிறப்பு எடுக்கும். இந்த அருங்காட்சியகங்கள் பொருள்கள் மற்றும் கருத்துகள் ஆகிய இரண்டும் அடங்கியதாக அமையும். நாட்டின் உயிரியல், கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதற்கான பழங்குடியினரின் போராட்டங்கள் தேசியக் கட்டுமானத்திற்கு எவ்வாறு உதவின என்றும் இந்த அருங்காட்சியகங்கள் விளக்கிக் காட்டும்.
பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகம் இது தொடர்பாக மாநிலங்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. பழங்குடியின மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளரைத் தலைவராகக் கொண்டு தேசிய அளவிலான குழுவானது அமைக்கப்பட்டுள்ளது. பெறப்படும் முன்மொழிவுகளை இந்தக் குழுவானது பரிசீலித்து அனுமதிப்பதோடு, பணியின் முன்னேற்றம் குறித்தும் கண்காணிக்கும். அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகங்களின் கருத்தாக்கம், வடிவமைப்பு ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு தருணங்களில் மாநில அரசுகளுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் உள்ள விராசத்-இ-கல்சா அருங்காட்சியகம், போபாலில் உள்ள மானவ்சங்ரஹலாயா ஆகிய இடங்களுக்கு மாநில அரசு அதிகாரிகள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு கதைத் தொடர்ச்சியோடு அருங்காட்சியகத்தை வடிவமைப்பது குறித்தும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. மிக விரிவான ஆய்வுக்குப் பிறகு இப்போது குஜராத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அதிநவீனப் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அருங்காட்சியகங்களை அமைப்பதற்கு அமைச்சகமானது மேலும் 8 மாநிலங்களுக்கும் அனுமதி அளித்துள்ளது.
அனுமதி அளிக்கப்பட்ட 9 பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர்கள் அருங்காட்சியகங்களில், 2 அருங்காட்சியகங்களின் பணிகள் முழுமை அடைய உள்ளன. மீதி உள்ள 7 அருங்காட்சியகங்கள் கட்டுமானப் பணியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அனைத்து அருங்காட்சியகங்களும் 2022ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Release ID: 1645157)