தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவரின் மூன்றாண்டுகள் பணி நிறைவை முன்னிட்டு “இணைதல், தொடர்புகொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற இ-புத்தகத்தை மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்

Posted On: 11 AUG 2020 1:16PM by PIB Chennai

இந்தியக் குடியரசுத் துணைத்தலைவர் மூன்றாண்டுக் காலம் தனது பணியை நிறைவு செய்ததை முன்னிட்டு “இணைதல், தொடர்பு கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல்” என்ற மின்னணு வடிவிலான புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்.  இந்த மின்னணு புத்தகத்துடன் சேர்ந்து அச்சுவடிவிலான காஃபி டேபிள் புத்தகத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.  இந்த நிகழ்ச்சி புதுதில்லியில் உள்ள உப-ராஷ்டிரபதி நிவாசில் நடைபெற்றது.

குடியரசுத் துணைத் தலைவரின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டுப் பயணங்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை சொற்கள் மற்றும் படங்கள் வழியாக வெளிப்படுத்தும் 250 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தை மத்திய அரசின் புத்தக வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டுள்ளது. இந்தப் புத்தகமானது விவசாயிகள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், இளைஞர்கள், நிர்வாகிகள், தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் கலைஞர்கள் முதலானவர்களிடம் குடியரசுத் துணைத்தலைவர் நிகழ்த்திய கலந்துரையாடல்களை எடுத்துக்காட்டுகிறது.

குடியரசுத் துணைத்தலைவரின் அயல்நாட்டுப் பயணங்கள், உலகத் தலைவர்களுடனான அவருடைய கலந்துரையாடல், பல்வேறு நாடுகளில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் அவர் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றோடு தொடர்புடைய நிகழ்வுகள் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மக்களுடன் தொடர்பியல் மூலம் இணைந்து இந்தியாவை மாற்றுதல் என்பது குறித்து இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது என்று இ-புத்தகத்தை வெளியிட்டு பேசிய திரு ஜவடேகர் குறிப்பிட்டார். குடியரசுத் துணைத்தலைவரின் உரைகளைப் பின்பற்ற விரும்பும் மாணவர்களுக்கு மூன்றாம் ஆண்டின் இந்தப் புத்தகம் பெரும் புதையலாக இருக்கும்.  அவரது உரைகள் சிந்தனைகளும், உணர்வுகளும் நிரம்பப் பெற்று ஆற்றொழுக்கான மொழி நடையில் நிகழ்த்தப்பட்டு இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர் காஃபி டேபிள் புத்தகத்தையும் அதன் மின்னணு வடிவப் புத்தகத்தையும் வெளியிட்ட புத்தக வெளியீட்டுப் பிரிவுக்கு தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மேடைப் பேச்சு என்பது ஒரு கலை என்றும் குடியரசுத் துணைத்தலைவர் தனது இதயத்தில் இருந்து பேசுவதாகவும் அவரது உரைகள் அவரின் சிந்தனைகளையும் உணர்வுகளையும் பிரதிபலிப்பவையாக உள்ளன என்றும் குறிப்பிட்டார். ஒரு சிறந்த புத்தகம் என்பது ஒரு தலைமுறை தனக்கு அடுத்து வரும் தலைமுறைக்கு வழங்குகின்ற மிகப்பெரிய பரிசாகும்.  வாசகர்கள் இந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் படிப்பார்கள் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்த பாதுகாப்பு அமைச்சர் இந்தத் தொகுப்பு நூலை வெளியிட்டதற்காக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தார்.  குடியரசுத் துணைத்தலைவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற 3-C என்ற வழிகாட்டிப் பாதையான இணைதல், தொடர்பு கொள்ளுதல் மற்றும் மாற்றத்தை உருவாக்குதல் (Connecting, Communicating and Changing) என்பதையே நூலின் தலைப்பாக வைத்தது மிகப் பொருத்தமானது என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் துணைத்தலைவர் இந்தப் புத்தகமானது தன்னுடைய குறிக்கோள்கள் மற்றும் விளைவுகளை வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.  கடந்த ஓராண்டின் முதல் கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பொது நிகழ்ச்சிகளில் தான் கலந்து கொண்டதாகவும், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பால் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறைந்து விட்டதாகவும் தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர் முதல் கட்டத்தில் ஒரு மாதத்திற்கு சராசரியாக 20 பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக குறிப்பிட்டார்.  இதில் 14 பட்டமளிப்பு விழாக்களும் 70 பொது நிகழ்ச்சிகளில் உரையாற்றியதும் உள்ளடங்கும். அவர் முதன்மையாக விவசாயிகள், இளைஞர்கள், நிர்வாகிகள், தொழில்துறை தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் இந்திய வம்சாவழியினர் ஆகியோருடன் உரையாற்றியிருந்தார்.

இந்தப் புத்தகம் அச்சு வடிவிலும், மின்னணு வடிவிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. ரூ.1,500 விலையுள்ள இந்த அச்சு வடிவப் புத்தகத்தை நாடு முழுவதிலும் உள்ள புத்தக வெளியீட்டுப் பிரிவின் விற்பனை நிலையங்கள் மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் இருந்து வாங்கிக் கொள்ளலாம்.  மின்னணுப் புத்தகத்தை பாரத்கோஷ் இணைய முகப்பு மற்றும் புத்தக வெளியீட்டுப் பிரிவின் இணையதளத்தின் மூலமாக வாங்கிக் கொள்ளலாம்.  மின்நூலின் விலை ரூ.1,125 (அச்சு வடிவப் புத்தகத்தின் விலையில் 75%) ஆகும்.  அமேசான், கூகுள்பிளே ஆகிய மின்னணு வர்த்தக பிளாட்ஃபாரம்களிலும் இந்த மின்நூல்களை வாங்கிக் கொள்ளலாம்.

அச்சு வடிவப் புத்தகத்திற்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்:

http://www.publicationsdivision.nic.in/index.php?route=product/product&product_id=3693

மின்னணுப் புத்தகத்திற்கு தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்:

https://www.publicationsdivision.nic.in/index.php?route=product/product&product_id=3694

கூகுள் புத்தக இணைப்பிற்கு இங்கே கிளிக் செய்யவும்:

https://books.google.co.in/books/about/CONNECTING_COMMUNICATING_CHANGING_ENGLIS.html?id=w2n2DwAAQBAJ&redir_esc=y

 

 

                                                                        *****



(Release ID: 1645051) Visitor Counter : 223