வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பரஸ்பர அடிப்படையில் இந்தியப் பொருள்களுக்கு இதர நாடுகளை அடைவதற்கான நியாமான அணுகுதல் தேவைப்படுகிறது
प्रविष्टि तिथि:
10 AUG 2020 5:18PM by PIB Chennai
ஐந்து நாட்களுக்கு நடைபெற இருக்கும் வேகமாக விற்பனையாகக் கூடிய நுகர்வோர் பொருள்களின் முதல் விநியோகச் சங்கிலிக் கண்காட்சியை வணிகம், தொழில்கள் அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு. கோயல், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய உண்மை நிலவரத்தை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும் என்றார். உலகம் மாறிவிட்டது. இந்த கோவிட் அனுபவத்தில் இருந்து உலகம் புதிதாகக் கற்றுக் கொள்ளும், ஏற்கனவே கற்றவற்றை புறந்தள்ளும். "சுகாதாரமான முறையில் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும், தொழில்நுட்பத்தைத் திறன்மிக்க முறையில் பயன்படுத்த வேண்டும். நமது தொழில் நடவடிக்கைகளில் இன்னும் புத்திசாலித்தனமாக, கவனமாக மற்றும் எச்சரிக்கையாக இருக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். புதுயுக உலகத்தில் இருக்கும் அனைத்து புதிய விஷயங்களும் இந்தியாவின் எதிர்காலத்தை மாற்றியமைக்கவும், இன்னும் அதிகப் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்கவும், சமுதாயத்தின் நலிவுற்ற பிரிவினருக்காக அக்கறை கொள்ளவும் நமக்கு உதவும் என்று திரு. கோயல் மேலும் கூறினார்.
உள்நாட்டுத் தொழில்களுக்கு ஆதரவளித்து இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சிலர் விமர்சிப்பது குறித்து பேசிய திரு. கோயல், நமது தொழில்களுக்கு நியாயமான களம் மற்றும் அணுகுதல் கிடைக்க நமது தொழில்களைப் பாதுகாக்க விரும்புகிறோம் என்றார்.
இன்னும் போட்டித்திறன் மிக்கதாகவும், உலகத்தோடு சமமான மற்றும் நியாயமான விதத்தில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவும் முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கும் தொழில்துறையினரோடு நமது அரசு தோளோடு தோள் நிற்கும் என்று திரு. கோயல் கூறினார்.
சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் பிரிவினரின் வாழ்க்கைத் தரத்தை பெரிதும் மேம்படுத்துவதற்காக கடந்த ஆறு வருடங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது முயற்சிகளையும், கவனத்தையும் செலுத்தினார் என்று திரு. கோயல் மேலும் கூறினார். 11 கோடி கழிவறைகளைக் கட்டியதும், அகண்ட அலைவரிசையை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்றதும் மற்றும் இதர நலம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகளும் ஒன்றிணைந்து தேசிய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கி, உலகம் இதுவரை பார்த்திராத மோசமான பெருந்தொற்றை எதிர்த்துப் போராட இந்தியாவைத் தயார்படுத்தின.
தற்சார்பு இந்தியாவுக்கான உண்மையான எண்ணத்தோடு, இந்திய வர்த்தக மற்றும் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பின் (FICCI) இந்த முயற்சி உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ஒரு தளத்தில் நடைபெறுகிறது என்று திரு கோயல் தெரிவித்தார். பெருந்தொற்றால் வந்துள்ள மாற்றங்கள் நிறைய நேர்மறை விஷயங்களை உண்டாக்கி இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் வளர்ச்சியை எடுத்து செல்ல எங்களுக்கு உதவும் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள மக்களை ஈடுபடுத்துவதால் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் நம்பிக்கை மிக்க பகுதியாக நம்மை மாற்றும் என்று அவர் மேலும் கூறினார்.
இந்தியப் பொருளாதாரம் புத்தாக்கப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்த திரு கோயல், பல்வேறு குறியீடுகள் மூலம் இது தெரிவதாகக் கூறினார். ரயில் சரக்குகளும், மின்சார உபயோகமும் கடந்த ஆண்டின் அளவுகளை எட்டியுள்ளன, கடந்த வருட அளவுகளில் 91 சதவீதமாக இந்த ஆண்டு ஜூலை மாத ஏற்றுமதிகள் உள்ளன. இறக்குமதிகளும் 79 சதவீதம் என்னும் அளவுக்கு உள்ளன.
ஒன்றாகப் பயணிக்கவும், ஒருவரை ஒருவர் ஆதரிக்கவும், வளமான இந்தியாவை நோக்கிப் பணிபுரியவும், வருங்கால சந்ததியினருக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவக்கவும் இந்தியத் தொழில்களுக்கு திரு. கோயல் அழைப்பு விடுத்தார்.
****
(रिलीज़ आईडी: 1645000)
आगंतुक पटल : 281