பிரதமர் அலுவலகம்

வெள்ள நிலைமை குறித்து ஆறு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆய்வு கூட்டம்


வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை முறையை முன்னேற்ற புதுமையான தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்த பிரதமர் வலியுறுத்தல்

முன்கூட்டியே எச்சரிக்கும் உள்ளூர் நடைமுறைக்கு முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும் என பிரதமர் அறிவுரை

வெள்ள நிலைமை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர்கள் விளக்கம்; மக்களை மீட்கும் தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மத்திய முகமைகளின் உரிய நேரப் பணிக்கு பாராட்டு

Posted On: 10 AUG 2020 3:10PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய ஆறு மாநில முதலமைச்சர்களுடன் காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை  நடத்தினார். நாட்டில், தென்மேற்குப் பருவமழை தீவிரத்துக்கான முன்னேற்பாடுகள், தற்போதைய வெள்ள நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில், பாதுகாப்பு அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், உள்துறையின் இரு இணையமைச்சர்கள், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளம் குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட நிரந்தர முறையை ஏற்படுத்துவது பற்றி, அனைத்து மத்திய, மாநில முகமைகள் இடையே சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம் என பிரதமர் வலியுறுத்தினார். வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை முறைக்கு புதுமையான தொழில்நுட்பங்களை விரிவான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளாக, இந்திய வானிலை மையம் , மத்திய நீர் ஆணையம் போன்ற நமது முன்னறிவிப்பு முகமைகள் ஒருங்கிணைந்த வகையில் செயல்பட்டு, வெள்ள எச்சரிக்கைகளை சிறந்த முறையில் விடுத்து வருவதாக பிரதமர் கூறினார். அந்த முகமைகள், மழைப்பொழிவு, ஆறுகளின் நீர்மட்டம் ஆகியவற்றைப் பற்றி மட்டும் முன்னறிவிப்பு செய்யாமல், எந்தெந்தப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் என்ற தகவலையும் அளித்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு போன்ற புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் முன்மாதிரி முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு மாநிலங்கள் தேவையான தகவல்களை அளிக்க வேண்டும். அப்போதுதான், உள்ளூர் பகுதிகளுக்கு உரிய நேரத்தில் தகவல்களைப் பரப்ப முடியும்.

 

உள்ளூரை மையப்படுத்தும் முன்னறிவிப்பு முறைகளுக்கு முதலீட்டை அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். அப்போதுதான், குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு, அந்தப் பகுதியில், ஆற்றின் கரைகள் உடைப்பெடுக்கும் அபாயம், வெள்ளம் சூழ்வதற்கான வாய்ப்பு, இடி, மின்னல் எச்சரிக்கை போன்றவற்றை சரியான நேரத்தில் விடுக்க முடியும்.

 

கோவிட் சூழலைக் கருத்தில் கொண்டு, மீட்பு முயற்சிகளில் ஈடுபடுபவர்கள், முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி பயன்படுத்தி கைகழுவுதல், போதிய இடைவெளியைப் பராமரித்தல் ஆகிய அனைத்து சுகாதார விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் போது, கை கழுவும் கிருமி நாசினிகள், முகக்கவசங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து வழங்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்த விஷயத்தில், மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்டிர், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும்.

மாநிலங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் வலுவான முறையிலும், இயற்கைப் பேரிடர்களை எதிர்த்து நின்று, பின்விளைவுகளைக் குறைக்கும் வகையிலும், உறுதி செய்ய வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

அசாம், பீகார், .பி., மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிங்களின் முதலமைச்சர்களும், கர்நாடக உள்துறை அமைச்சரும், தங்கள் மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலைமை, மீட்பு முயற்சிகள் ஆகியவை பற்றிய தற்போதைய தகவல்களைத் தெரிவித்தனர்தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட மத்திய முகமைகள் உரிய நேரத்தில் ஈடுபடுத்தப்பட்டு, மக்களை மீட்டதற்காக அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதற்கான குறுகிய கால, நீண்டகால நடவடிக்கைகள் பற்றி அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கினர்.

 

மாநிலங்கள் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அமைப்புகளின் மூத்த அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார். பல்வேறு இயற்கைப் பேரிடர்களைச் சமாளிக்கும் திறனை வலுப்படுத்தும் வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று பிரதமர் உறுதியளித்தார்.

***


(Release ID: 1644849) Visitor Counter : 243