பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

உலக உயிரி எரிபொருள் தினத்தை முன்னிட்டு இணையக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.

Posted On: 10 AUG 2020 3:09PM by PIB Chennai

உலக உயிரி எரிபொருள் தினத்தை முன்னிட்டு, "தற்சார்பு இந்தியாவை நோக்கி உயிரி எரிபொருள்கள்" என்னும் தலைப்பில் இணையக் கருத்தரங்கு ஒன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் இன்று நடத்தப்பட்டது. மரபுசாரா எரிபொருள்களை மரபு சார்ந்த எரிபொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கவும், உயிரி எரிசக்தித் துறையில் அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளைக் குறித்து எடுத்துரைக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 10-ஆம் தேதி உலக உயிரி எரிபொருள் நாள் அனுசரிக்கப்படுகிறது. 2015-ஆம் ஆண்டில் இருந்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் உயிரி எரிபொருள் தினம் கொண்டாடப்படுகிறது.

 

இந்திய அரசின் தற்சார்பு பாரதம் இயக்கத்துக்கு வலுசேர்க்கும் வகையில் உயிரி எரிபொருள் திட்டம் அமைந்துள்ளது. அதற்கேற்றவாறே உலக உயிரி எரிபொருள் தினம் 2020-இன் நோக்கம் அமைந்துள்ளது.

 

நிகழ்ச்சியில் பேசிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகச் செயலாளர், திரு தருண் கபூர், இந்தியா ஒரு மிகப்பெரிய வேளாண் பொருளாதாரமாக இருப்பதால் விவசாய எச்சங்கள் அதிக அளவில் கிடைப்பதாகவும், இதன் மூலம் நமது நாட்டில் உயிரி எரிபொருள்கள் உற்பத்தி செய்யப்படும் சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதாகவும் கூறினார். எத்தனால், உயிரி டீசல் மற்றும் உயிரி வாயு என மூன்று முக்கியப் பகுதிகள் உயிரி எரிபொருள்களில் இருப்பதாக அவர் கூறினார். "இந்த மூன்றையும் நாம் முறையாகப் பயன்படுத்தினால், கச்சா எண்ணெய் மற்றும் உயிரி எரிவாயுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பதை நாம் வெகுவாகக் குறைக்கலாம்," என்று அவர் மேலும் தெரிவித்தார். சரியான தொழில்நுட்பங்கள், திறன் வாய்ந்த மற்றும் நிபுணத்துவம் மிக்க பணியாளர்களப் பயன்படுத்துதல் மற்றும் நிதி நிறுவனங்கள் நிதியை அளித்தல் ஆகியவை இந்த நோக்கத்துக்காகத் தேவைப்படுவதாக அவர் கூறினார். வேளாண் எச்சங்கள் மற்றும் நகர்ப்புற திடக் கழிவு அல்லது இதர வகையான கழிவுகளை சேகரித்து, சேமித்து, பராமரித்து எதிர்காலத்தில் அமையக்கூடிய ஆலைகளுக்கு  விநியோகிக்க வேண்டும் என்பதால் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இந்தத் துறைக்கு மிகப் பெரிய அளவில் தேவை என்று செயலாளர் கோரினார். கழிவுகளை உற்பத்தி செய்யும், ஆனால் பராமரிக்க வேண்டிய விதத்தில் அவற்றை பராமரிக்காமல் இருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் இது குறித்து எடுத்துரைக்குமாறு திரு. கபூர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் கழிவுகளை பயனுள்ள வகையில் மாற்ற முடியும்.

 

****


(Release ID: 1644843)