ரெயில்வே அமைச்சகம்

ஹூப்ளியில் ரயில்வே அருங்காட்சியகத்தை, மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலும், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷியும் இணைந்து நாட்டுக்கு அர்ப்பணித்தனர்

Posted On: 09 AUG 2020 7:10PM by PIB Chennai

ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே அருங்காட்சியகத்தை, மத்திய ரயில்வே, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி ஆகியோர், இன்று காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். மத்திய ரயில்வேத்துறை இணை அமைச்சர் திரு சுரேஷ் சி அங்காடி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உயர் அதிகாரிகளும்,  பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

     வடக்கு கர்நாடகாவில் அமைக்கப்பட்டுள்ள முதல் ரயில் அருங்காட்சியகம் இதுதான்.  தென்மேற்கு ரயில்வே வட்டாரத்தி்ல், மைசூருக்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகம் ஹூப்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.  

     இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், “ரயில்வேத் துறை நம் அனைவருடனும் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளது.  இது நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது வாழ்க்கையில் பல்வேறு காலக்கட்டங்களில், தனிப்பட்ட பயணங்களுக்கு சாட்சியாகவும் உள்ளது” என்று குறிப்பிட்டார்.  ரயில்வண்டிகளில் பயணம் செய்து இந்தியாவை புரிந்து கொள்வதையே மகாத்மா காந்தி விரும்பினார் என்றும் ரயில்வேத்துறை மாபெரும் மாறுதல்களை அடைந்து வந்திருக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.  இந்த மாற்றங்களுக்கு பெருமை சேர்க்கும் நினைவகமாக அருங்காட்சியகம் திகழ்வதாகவும், நமது நாட்டின் வரலாற்றையும், பண்பாட்டையும் குறித்து சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  இது உதவும் என்றும் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.     முடக்கக் காலத்தில் மிகச் சிறந்த பணியாற்றியதற்காக  ரயில்வே அதிகாரிகளை அவர் பாராட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு பிரகலாத் ஜோஷி, வரலாற்றுபூர்வமாக மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கும் ஹூப்ளியில் அருங்காட்சியகம் அமைத்திருப்பது மிகப் பொருத்தமானது என்றும் இந்தப் பிராந்தியத்தில், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலமாக இது விளங்கும் என்றும் கூறினார்.

-------



(Release ID: 1644774) Visitor Counter : 137