சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத்துறை அறிமுகப்படுத்திய இ-சஞ்சீவனி தொலை மருத்துவத் திட்டத்தை சிறந்த முறையில் பிரபலப்படுத்திய தமிழகத்திற்கு டாக்டர். ஹர்ஷ்வர்தன் பாராட்டு.
Posted On:
09 AUG 2020 5:38PM by PIB Chennai
மத்திய சுகாதாரத்துறையின் தொலைமருத்துவச் சேவையான இ-சஞ்சீவனி மற்றும் இ-சஞ்சீவனி புறநோயாளிகள் நோய் கண்டறியும் பிரிவு மூலம், தொலை மருத்துவ ஆலோசனை பெற்றவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடந்ததையடுத்து, மாநிலங்களில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்த ஆய்வுக் கூட்டம், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.ஹர்ஷ்வர்தன் தலைமையில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு.அஸ்வினி குமார் சவுபே பங்கேற்ற இக்கூட்டத்தில், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் காணொளிக்காட்சி மூலம் கலந்து கொண்டார்.
2019 நவம்பரில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திற்குள், இ-சஞ்சீவனி மற்றும் வீடியோ கலந்தாலோசனை மூலம் நோய் கண்டறியும் இ-சஞ்சீவனி புறநோயாளிகள் சேவை, இதுவரை 23 மாநிலங்களில் (நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 75 சதவீத மக்களைக் கொண்ட மாநிலங்கள்) இத்திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், எஞ்சிய மாநிலங்களில் இதனை செயல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு வரலாற்று சாதனையாக, தேசிய தொலைமருத்துவச் சேவை, 1,50,000 தொலை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டு, நோயாளிகள் தங்களது வீட்டிலிருந்தபடியே, நேரடியாக மருத்துவர்களிடம் தங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றதுடன், ஒரு மருத்துவர் மற்றொரு மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும் வழிவகை செய்துள்ளது.
இந்த சாதனைக்காக பாராட்டு தெரிவித்த டாக்டர்.ஹர்ஷ்வர்தன், “பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் நோக்கத்தை செயல்படுத்தும் விதமாக, ஆயுஷ்மான் பாரத் – சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் அகன்றகற்றை மற்றும் செல்போன்கள் வாயிலாக இத்திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. மாநில மற்றும் யூனியன்பிரதேச அரசுகளின் ஒத்துழைப்புடனும், தன்னலமற்ற, திறமைமிக்க மருத்துவர்கள் மற்றும் நிபுனர்கள் குழுவின் சிறப்பான சேவையாலும், இ-சஞ்சீவனி திட்டம் போன்ற தொலை மருத்துவ முறைகள் வாயிலாக நம்மால் சுகாதாரச் சேவைகளை வழங்க முடிகிறது. இது, கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நம் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை குறிப்பிடத்தக்க அளவிற்கு மேம்படுத்த உதவியுள்ளது” என்றும் தெரிவித்தார்.
தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கிய இரண்டாவது தொலை மருத்துவ ஆலோசனை சேவையான, இ-சஞ்சீவனி ஓ.பி.டி. எனப்படும், நோயாளிகள் மருத்துவரிடம் நேரிடையாக ஆலோசனை பெறக்கூடிய கட்டணமில்லா மின்னணு மருத்துவச் சேவை, 20 மாநிலங்களில் உள்ள மக்களிடம் வேகமாக பிரபலமடைந்ததுடன், மருத்துவமனைகளுக்கு மக்கள் நேரில் செல்லாமல் மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். இ-சஞ்சீவனி ஓ.பி.டி. பிரிவில், நாடு முழுவதும் 2,800 மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு இத்திட்டத்தில் பணியாற்றி வருவதோடு, ஊரடங்குக் கட்டுப்பாடுகள் பல்வேறு கட்டமாக தளர்த்தப்பட்டுவரும் போதிலும், தினந்தோறும் சுமார் 250 மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் மின்னணு மருத்துவச் சேவைகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது, நாடு முழுவதும் மொத்தம் 1,58,000 தொலை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் 67,000 ஆலோசனைகள், ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் உள்ள இ-சஞ்சீவனி பிரிவு மூலம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், நோயாளிகள் மருத்துவரிடமே ஆலோசனை பெறக்கூடிய இ-சஞ்சீவனி ஓ.பி.டி.முறையிலும் 91,000 ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இரண்டு முறைகளிலும் (இ-சஞ்சீவனி மற்றும் இ-சஞ்சீவனி ஓ.பி.டி) தோராயமாக, தினந்தோறும் சுமார் 5,000 ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
இ-சஞ்சீவனி மற்றும் இ-சஞ்சீவனி ஓ.பி.டி.ஆகிய இரண்டு முறைகளிலும், நாட்டிலேயே மிக அதிக ஆலோசனைகளை வழங்கிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 32 ஆயிரத்து 35 தொலைமருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, ஆந்திரபிரதேசம் (28,960), ஹிமாச்சலப் பிரதேசம் (24,527), உத்தரப்பிரதேசம் (20,030), கேரளா (15,988), குஜராத் (7,127), பஞ்சாப் (4,450), ராஜஸ்தான் (3,458), மகாராஷ்டிரா (3,284), மற்றும் உத்தராகண்ட் (2,596) என மொத்தம் 10 மாநிலங்கள் தொலை மருத்துவ ஆலோசனைகளை அதிகளவில் வழங்கிய மாநிலங்களாகத் திகழ்கின்றன.
மேலும், நோயாளிகள் மருத்துவர்களிடம் நேரிடையாக ஆலோசனை பெறக்கூடிய இ-சஞ்சீவனி ஓ.பி.டி முறையில் 32,035 ஆலோசனைகளை வழங்கி, இந்த முறையில் அதிக ஆலோசனைகளை வழங்கிய மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது.
ஆயுஷ்மான் பாரத் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்களில் மருத்துவர்களுக்கிடையே ஆலோசனை நடத்தும் இ-சஞ்சீவனி முறையில் ஆந்திரப்பிரதேசமும் (25,478), ஹிமாச்சலபிரதேசமும் (23,857) அதிக ஆலோசனைகளை வழங்கியுள்ளன.
தொலை மருத்துவ முறையில், இ-சஞ்சீவனி ஓ.பி.டி சேவைகளை அதிகளவில் வழங்கி சாதனை படைக்க ஒத்துழைப்பு வழங்கியமைக்காக, மத்திய சுகாதாரத் துறை மற்றும் மேம்பட்ட கணிப்பு மேம்பாட்டு மையத்திற்கும், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
*******
(Release ID: 1644651)
Visitor Counter : 513