நித்தி ஆயோக்

நிதிஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கமானது ஏ.டி.எல் டிங்க்கரிங் மாரத்தான் 2019 போட்டியின் தேசிய வெற்றியாளர்களை அறிவித்துள்ளது

Posted On: 05 AUG 2020 6:26PM by PIB Chennai

நிதிஆயோக்கின் அடல் புத்தாக்க இயக்கமானது (AIM) முன்னோடித் திட்டமான வருடாந்திர தேசிய புத்தாக்க மாரத்தான் போட்டியான ஏ.டி.எல் டிங்க்கரிங் மாரத்தான் 2019 போட்டியில் வெற்றி பெற்ற 150 வெற்றியாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.  நாடு முழுவதிலும் இருந்து 5000+ அடல் டிங்க்கரிங் ஆய்வகங்களில் இந்தப் போட்டி நடைபெற்று இருந்தது.  இந்த ஆண்டுக்கான போட்டியை அடல் புத்தாக்க இயக்கமானது MyGOV உடன் இணைந்து மைகவ் புத்தாக்க பிளாட்ஃபார்மில் நடத்தியது.

“ஆராய்ச்சி, கருத்தாக்கம், புத்தாக்கம், நடைமுறைப்படுத்துதல் – மிகச் சிறந்த நன்மைக்கான கவனத்துடன் கூடிய புத்தாக்கம்” என்ற மையக் கருத்திலான இந்த மாரத்தான் போட்டியை பிரத்யேகமாக மாணவர்களே வடிவமைத்தனர்.  போட்டியின் முதல் கட்டத்தில் மாணவர்கள் தாங்கள் இருக்கும் சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஒருங்கிணைந்து தீர்ப்பது உள்ளிட்டவை அடங்கி இருந்தன.  முதல் கட்டத்துக்கு 4300+ பதிவுகள் வந்தன.  கட்டம் IIஇல் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரச்சினைகள் மீது வாக்கெடுப்பது உள்ளிட்டவை அடங்கி இருந்தன.  தங்களை அதிகம் பாதிக்கச் செய்த பிரச்சினைகளை மாணவர்கள் தேர்ந்தெடுத்ததால் சுமார் 5000+ வாக்குகள் பெறப்பட்டன.  இந்த ஆண்டு மாரத்தான் போட்டியில் புத்தாக்கங்களுக்கு முன்பான ஆராய்ச்சிக்கு அதிக அளவில் கவனம் தரப்பட்டது.

கட்டம்-I மற்றும் கட்டம்-II ஆகியவற்றின் அடிப்படையில் நீடித்த நிலையான சுற்றுச்சூழல் மற்றும் நீதியை உருவாக்குதல், எதிர்பார்த்த விளைவைத் தரும் தரமான கல்வியை அளித்தல், சுகாதாரம் மற்றும் தூய்மையை அதிகரித்தல், அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் சமநிலைத்தன்மையை உறுதிப்படுத்துதல் என நான்கு வேறுபட்ட பிரச்சினைப் பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இந்த நான்கு பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் இருந்து மாணவர்கள் சமுதாயம் சார்ந்த சிக்கல்களை அடையாளம் கண்டு தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுத்தனர்.  பிறகு இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகச் செயல்படும் மூல மாதிரிகளை உருவாக்கினார்கள் அல்லது குறைந்தபட்சம் வெற்றிகரமாகச் செயல்படக் கூடிய பொருளை (MVP) தயாரித்தனர்.

தீர்வுகளை உருவாக்குதல் என்ற இறுதிக்கட்டத்துக்கு நாட்டில் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருக்கும் மாணவர்கள் 1191 பதிவுகளை அனுப்பி இருந்தனர்.  இவற்றை விரிவாக மதிப்பீடு செய்து தரவரிசையில் மேல் நிலையில் உள்ள 150 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.  இதில் வெற்றி பெற்ற குழுக்களில் 42 சதவீதம்  கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவை ஆகும்.  அதே பேன்று 57 சதவீதக் குழுக்கள் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவை. வெற்றி பெற்ற குழுக்களின் மாணவர்களில் 45 சதவீதம் பேர் மாணவிகள் ஆவர்.

*****


(Release ID: 1643746) Visitor Counter : 222