சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்

சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் அலுவலகம் சார்பில் புதுடெல்லியில் முஸ்லிம் பெண்கள் உரிமை தினம்

Posted On: 31 JUL 2020 2:45PM by PIB Chennai

அரசின் நோக்கம் ``அரசியல் அதிகாரம் அளிப்பது தானே தவிர, அரசியல் ரீதியாக சுரண்டுவது அல்ல'' என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. முக்தர் அப்பாஸ் நக்வி இன்று புதுடெல்லியில்கூறினார். இந்த அரசு மேற்கொண்ட பல ``துணிச்சலான, பெரிய சீர்திருத்தங்கள்'' நல்ல பலன்களைத் தருவதாக அமைந்துள்ளன. இது, எங்களின் நேர்மையான மற்றும் செம்மையான முயற்சிகளை வெளிக்காட்டுவதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

``முஸ்லிம் பெண்கள் உரிமை தினத்தை'' ஒட்டி நடந்த இணையதளம் வழியிலான நிகழ்ச்சியில்,, மத்திய சட்டத் துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி ஆகியோருடன் அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியும் கலந்து கொண்டார். சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் திரு. மஞ்சித் சிங் ராய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

``முத்தலாக் என்ற கொடுமையில் இருந்து முஸ்லிம் பெண்கள் விடுதலை பெற்ற நாளாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி உள்ளது;  இந்திய வரலாற்றில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ``முஸ்லிம் பெண்கள் உரிமை தினமாக'' பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்ற வரலாற்றில் பொன்னான நாளாக ஆகஸ்ட் 1 ஆம் தேதி இருக்கும்'' என்று திரு. நக்வி கூறினார்.

முத்தலாக் முறையை கிரிமினல் குற்றமாக ஆக்கும் சட்டம், நாட்டில் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு, ``தற்சார்பு, சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கையை'' பலப்படுத்தி உள்ளது என்று திரு. நக்வி குறிப்பிட்டார். முத்தலாக் என்ற சமூக கொடுமைக்கு எதிராக சட்டம் இயற்றியதன் மூலம், முஸ்லிம் பெண்களின் பாலின சமத்துவத்தை பலப்படுத்தி, அரசியல்சாசன மற்றும் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை அரசு வலுப்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

முத்தலாக் நடைமுறையானது இஸ்லாமிய நடைமுறையில் கிடையாது என்றும், சட்டபூர்வமானது அல்ல என்றும் திரு. நக்வி தெரிவித்தார். உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது ``ஓட்டு வியாபாரிகளால்'' இந்தப் பிரச்சினை ``அரசியலாக்கப்பட்டது'' என்றார் அவர்.

ஷாபானு வழக்கில் 1986இல் உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவமான தீர்ப்பு அளித்த போதே முத்தலாக் என்ற சமூகக் கொடுமைக்கு முடிவு கட்டும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கலாம் என்று திரு. நக்வி குறிப்பிட்டார். ``545 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தார்கள். 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் அந்தக் கட்சிக்கு 159 உறுப்பினர்கள் இருந்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயலற்றதாக ஆக்கி, முஸ்லிம் பெண்களுக்கு அரசியல்சட்டப்படியான மற்றும் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு தங்கள் பலத்தை ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு பயன்படுத்திக் கொண்டது'' என்று அவர் விவரித்தார்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் பலவும், முத்தலாக் நடைமுறையை சட்டவிரோதமானது என்றும், இஸ்லாமிய முறைப்படி இல்லாத செயல் என்றும் நீண்ட காலத்துக்கு முன்பாகவே அறிவித்துவிட்டன என்று திரு. நக்வி சுட்டிக்காட்டினார். இந்த சமூகக் கொடுமையை எகிப்து நாடு தான் முதன்முதலில் 1929இல் ரத்து செய்தது. 1929இல் சூடான், 1956-இல் பாகிஸ்தான், 1972இல் வங்கதேசம், 1959இல் இராக், 1953இல் சிரியா, 1969இல் மலேசியா ஆகிய நாடுகள் முத்தலாக் நடைமுறையை ரத்து செய்தன. அத்துடன் சைப்ரஸ், ஜோர்டான், அல்ஜீரியா, ஈரான், புரூனே, மொராக்கோ, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளிலும் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த சமூகக் கொடுமை ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இந்த சமூகக் கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதற்கு இந்திய முஸ்லிம் பெண்கள் பல தசாப்த காலங்களாகப் போராட வேண்டியிருந்தது என்றும் அமைச்சர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்கும் சட்டத்தை அரசு உருவாக்கியது என்று அவர் தெரிவித்தார். இந்தச் சட்டம் நிறைவேற்றி ஓராண்டு ஆகிவிட்டது. அதன்பிறகு முத்தலாக் வழக்குகள் 82 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளன. அதுபோன்ற ஏதேனும் நிகழ்வு குறித்து தகவல் வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

            நிகழ்ச்சியில் பேசிய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் நடைமுறைக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர இந்தியாவுக்கு ஏன் 70 ஆண்டுகள் தேவைப்பட்டது என்று கேள்வி எழுப்பினார். இது ``பெண்களின் உரிமைகளுக்கும், சுய மரியாதைக்குமான சட்டம்'' என்று அவர் கூறினார். முஸ்லிம் பெண்களுக்கு டிஜிட்டல் அறிவை வளர்ப்பதற்கான ஆலோசனைகளை அமல் செய்யும் வகையில் தாம் முயற்சிகள் எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

            மில்லியன் கணக்கான முஸ்லிம் பெண்களுக்குப் பெரிய வெற்றியாக முத்தலாக் தடைச் சட்டம் அமைந்துள்ளது என்று அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி கூறினார். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ('Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas') என்பதற்கு ``உண்மையான அத்தாட்சியாக'' இது அமைந்துள்ளது என்றார் அவர்.

நாடு முழுவதிலும் இருந்து இணையதளம் மூலம் நிகழ்ச்சியில் பங்கேற்ற முஸ்லிம் பெண்கள் மத்தியில் அமைச்சர்கள் பேசினர். புதுடெல்லியில் உத்தம் நகர் மற்றும் பாட்லா இல்லம்; உத்தரப்பிரதேசத்தில் கிரேட்டர் நொய்டா, லக்னோ மற்றும் வாரணாசி, ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், மகாராஷ்டிராவில் மும்பை, மத்தியப் பிரதேசத்தில் போபால், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் முஸ்லிம் பெண்கள் இணையவழியில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

*****



(Release ID: 1642739) Visitor Counter : 1007