மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

புதுமை, சுய-சார்பு எண்ணங்களை ஊக்கப்படுத்த 'சுயசார்பு இந்தியா இலச்சினை வடிவமைப்புப் போட்டியை' மைகவ் (MyGov) நடத்தவுள்ளது.

Posted On: 31 JUL 2020 6:14PM by PIB Chennai

மைகவ்.இன் (MyGov.in) இணையதளத்தில் நடத்தப்படவிருக்கும் 'சுயசார்பு இந்தியா இலச்சினை வடிவமைப்புப் போட்டியின்' மூலம் நாட்டு மக்களிடம் இருந்து படைப்பாற்றல் மிக்க மற்றும் புதுமையான உள்ளீடுகளைப் பெற்று, அதன் அடிப்படையில் ஒரு இலச்சினையை வடிவமைப்பதன் மூலம்  'சுயசார்பு இந்தியா திட்டத்துக்கு' ஒரு தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்க இந்திய அரசு விரும்புகிறது. படைப்புகளை 5 ஆகஸ்டு, 2020 இரவு 11.45 வரை அனுப்பலாம். வெற்றி பெறும் இலச்சினைக்கு ரூ 25,000/- ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

 

நாட்டின் ஆளுகை மற்றும் வளர்ச்சியில் இந்திய மக்கள் துடிப்புடன் பங்கேற்பதை ஊக்கப்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் ஈடுபாட்டுத் தளம் தான் மைகவ் ஆகும். பல்வேறு துறைகள் மற்றும் தூய்மை இந்தியா, நமது நாட்டைப் பாருங்கள், லோக்பால் போன்ற திட்டங்களின் இலச்சினைகளை மைகவ் மக்களிடம் இருந்து பெற்றிருக்கிறது.

 

பிரதமரின் சுயசார்பு இந்தியா லட்சியத்தின் கீழ், சோதனைகளை எதிர்கொள்ள நாடு எவ்வாறு எழுந்து நிற்கிறது மற்றும் அதன் முன்னுள்ள வாய்ப்புகளை எவ்வாறு பயன்படுத்துகிறது என்று இந்தியா செய்து காட்டியுள்ளது. வலிமையுடனும், சுய-சார்பு எண்ணத்துடனும் கோவிட்-19 நிலைமையை இந்தியா எதிர்கொண்டுள்ளது. மார்ச் 2020-க்கு முன் பூஜ்ஜியம் அளவில் இருந்த தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி எண்ணிக்கை, தற்போது தினசரி 2 லட்சமாக இருப்பதன் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். இது நிலையாக வளர்ந்து வருகிறது.

 

கூடுதலாக, பல்வேறு வாகனத் துறை தொழில் நிறுவனங்களை உயிர் காக்கும் சுவாசக் கருவிகள் உற்பத்தியில் இணைத்ததன் மூலம், சவால்களை எவ்வாறு அது எதிர்கொள்கிறது மற்றும் வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்துகிறது என்று இந்தியா நிரூபித்து காட்டியுள்ளது.

 

கேள்விகள் ஏதேனும் இருப்பின், தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:
connect@mygov.nic.in

                                                                    *****


 



(Release ID: 1642719) Visitor Counter : 197