பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப் படைக்கு சரியான நேரத்தில் பலம் சேர்ப்பதாக ரஃபேல் விமானங்கள் வந்துள்ளன என பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கருத்து

Posted On: 29 JUL 2020 5:34PM by PIB Chennai

ரஃபேல் போர் விமானங்களில் முதல் தொகுப்பாக ஐந்து விமானங்கள் இன்று அம்பாலா விமானப் படை தளத்தில் தரையிறங்கின. இதையொட்டி பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் இந்த நிகழ்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். ``இந்த விமானங்கள் இந்தியாவின் வான்வெளிக்குள் நுழைந்துள்ளன. அம்பாலாவில் அவை தரையிறங்கியதில் மகிழ்ச்சி!'' என்று அவர் கூறியுள்ளார்.

விமானங்களை நல்லபடியாகக் கொண்டு வந்து சேர்த்தமைக்காக இந்திய விமானப் படையினருக்கு திரு. ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார். ``17 ஸ்குவாட்ரன், கோல்டன் ஏரோஸ் ஆகியவை `உதயம் அஜஸ்ரம்' என்ற முழக்கத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்படும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்திய விமானப் படையின் தாக்குதல் திறன்களுக்கு சரியான நேரத்தில் உந்துதல் கிடைத்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

``ரஃபேல் விமானங்கள் இந்தியாவில் தரையிறங்கி இருப்பது நமது ராணுவ வரலாற்றில் புதிய யுகத்தின் தொடக்கமாக இருக்கும். பன்முக செயல்திறன்களைக் கொண்ட இந்த விமானம், இந்திய விமானப் படையின் திறன்களில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தும்'' என்று மற்றொரு ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.

இந்த விமானத்தின் செயல் திறன்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ள அவர், ``விண்ணில் பறக்கும் மேம்பட்ட செயல் திறன்களுக்கு அப்பாற்பட்டு, இதில் உள்ள ஆயுதங்கள், ரேடார் மற்றும் இதர சென்சார்கள் மற்றும் மின்னணு செயல்பாட்டு அடிப்படையிலான போர் உத்தி திறன்கள், உலகில் உள்ள சிறந்த தொழில்நுட்பங்களில் ஒன்றாக உள்ளது. நமது நாட்டுக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் வந்தாலும், அதை எதிர்கொள்வதற்கு இந்திய விமானப் படையின் பலத்தை அதிகரிப்பதாக இது இருக்கும்'' என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுத்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். ``நீண்டகாலம் நிலுவையில் இருந்த கொள்முதல் சிக்கல்களில் முன்னேற்றம் இல்லாத நிலையில், அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் பிரான்ஸ் நாட்டில் இருந்து இவற்றை வாங்குவது என்ற சரியான முடிவை பிரதமர் திரு. நரேந்திர மோடி எடுத்த காரணத்தால் தான் இந்த விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன'' என்றும் அவர் கூறியுள்ளார்.

பிரான்ஸ் அரசுக்கும், டசால்ட் விமான நிறுவனத்திற்கும், இந்த விமானம் மற்றும் அதற்கான ஆயுதங்களை உரிய காலத்திற்குள் அளித்த மற்ற பிரெஞ்சு நிறுவனங்களுக்கும் அமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கோவிட் நோய்ப் பரவல் காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் நிலவிய சூழலிலும் உரிய காலத்தில் இவற்றை அளித்ததற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

``இந்திய விமானப் படையின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்த நிலையில் தான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்தக் கொள்முதல் குறித்த, அடிப்படையற்ற புகார்களுக்கு ஏற்கெனவே பதில்கள் அளித்து, பிரச்சினை முடிக்கப்பட்டுவிட்டது'' என்றும் திரு. ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ``நமது எல்லையின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்த விரும்புபவர்கள் தான், இந்திய விமானப் படையின் இந்தப் புதிய பலம் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்கும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்திய வான்வெளியில் ரஃபேல் விமானங்கள் நுழைந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் திரு. ராஜ்நாத் சிங் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக இந்திய கடற்படைக் கப்பல் (ஐ.என்.எஸ்.) கொல்கத்தா கேப்டன், இந்தியப் பெருங்கடலில் ரஃபேர் ஏரோ லீடர் வருகையை வரவேற்றார். ``பெருமையுடன் நீங்கள் இந்த விண்ணைத் தொடுகிறீர்கள்'' என்று அவர் குறிப்பிட்டார். இரண்டு SU30 MKI விமானங்களின் பாதுகாப்புடன் இந்த ஐந்து ரஃபேல் விமானங்களும் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.

*****



(Release ID: 1642253) Visitor Counter : 173