மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

சுயசார்பு இந்தியா செயலி புதுமைச் சவால்:6940 செயலிகள் வரப்பெற்றுள்ளன.

Posted On: 27 JUL 2020 7:15PM by PIB Chennai

சுயசார்பு இந்தியா செயலி புதுமைச் சவால் 4 ஜூலை 2020 அன்று, பிரதமர் திரு. நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்டது. இதற்குத் தொழில்நுட்ப தொழில்முனைவோர்களிடமிருந்தும், புதிதாகத் தொழில் துவங்கியுள்ள பல அமைப்புகளில் இருந்தும் நாடு முழுவதிலும் இருந்து மிக உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சவாலுக்கான இறுதி நுழைவுத் தேதி 26 ஜூலை 2020. மொத்தம் 8 பிரிவுகளின் கீழ் 6940 செயலிகள் வரப்பெற்றுள்ளன. இவற்றுள் 3939 தனியார்களிடமிருந்தும், 3001 அமைப்புகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்தும் வரப் பெற்றுள்ளன. தனியாரிடமிருந்து பெறப்பட்டுள்ளவற்றில் 1757 செயலிகள் உடனடியாக பயன்படுத்தப்படக் கூடியவை. மீதமுள்ள 282 செயலிகள் உருவாக்கத்தில் உள்ளன. அமைப்புகள் மூலமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள செயலிகளில் 1742 செயலிகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 1259 செயலிகள் உருவாக்கத்தில் உள்ளன. பல்வேறு பிரிவுகளின் கீழ் வரப்பெற்ற செயலிகளில் விவரங்கள்: வர்த்தகம் 1142, சுகாதாரம் உடல்நலம் 901, மின் கற்றல் 1062, சமூக வலைப்பின்னல் 1155, விளையாட்டுக்கள் 326, அலுவலகம்/ இல்லங்களிலிருந்து பணியாற்றுதல் 662, செய்தி 237, கேளிக்கை/பொழுதுபோக்கு 320. இப்பிரிவுகள் இல்லாமல் மற்றவை என்ற பிரிவில் சுமார் 1135 செயலிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலிகளில் சுமார் 271 செயலிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் 89 செயலிகள் 10 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்தச் செயலிகளை, நாட்டின் தொலைதூரப் பகுதிகளையும், சிறிய நகரங்களையும் சேர்ந்தவர்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சமர்ப்பித்துள்ளனர்

நம் நாட்டில் திறமை உள்ளது என்பதையே இது காட்டுகிறது. உலகில் இதற்கு இணையாக வேறு எங்குமே வளர்ச்சி இல்லை என்ற அளவிற்கு வளர்ச்சியைக் கொண்டு வருவதற்காக, இந்தியத் தொழில்நுட்பப் பொருள்களை உருவாக்குபவர்களுக்கும், தொழில்முனைவோர்களுக்கும், நிறுவனங்களுக்கும் சரியான ஒரு வாய்ப்பாக புதுமைச் செயலி சவால் அமைந்துள்ளது. மிகவும் செயல்திறன் கொண்ட, மேலும் மேம்படுத்தக்கூடிய, பாதுகாப்பான, அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையிலான, பயனாளிகளுக்கு அந்தச் செயலியை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்ற நினைப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு அனுபவத்தை அளிக்கக்கூடிய செயலிகளைக் கண்டறிவதே உண்மையான சவாலாகும். பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் சீராய்வுக்குழு அனைத்து செயலிகளையும் சீராய்வு செய்துவருகிறது.

 

செயலிகள் மூலம் நடைபெறும் பல ட்ரில்லியன் டாலர் கணக்கான பொருளாதாரத்தின் ஒரு பகுதி, இந்தியாவில் புதிதாகத் தொழில் துவங்க உள்ள தொழில்நுட்ப அமைப்புகளுக்குக் கிடைக்க உதவும் வகையில், அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சுயசார்பு இந்தியா செயலி சுற்றுச்சூழல் செயல்படும்.அதிகபட்சமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட அதிக அளவிலான செயலிகளைக் கொண்ட முதல் மூன்று நிறுவனங்கள், இந்தண்டு மொத்த சந்தையில் இரண்டு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத்தில் பங்கு வகிக்கிறது. மேலும் விரைவாக வளர்ந்து வருகிறது.

 

*****

 



(Release ID: 1641642) Visitor Counter : 261