வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

தொழில் ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர முறை விரைவில் அமைக்கப்படவிருக்கிறது.

Posted On: 27 JUL 2020 6:20PM by PIB Chennai

நாட்டிலுள்ள தொழில்களின் ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகளுக்கு ஒற்றைச் சாளர முறையை அரசு விரைவில் அமைக்கவிருக்கிறது. அரசு நிதியகங்கள், அயல்நாட்டு ஓய்வூதிய நிதிகள் மற்றும் இதர தரப்பினரிடம் இந்திய உள்கட்டமைப்புத் துறையில் தொழில் மற்றும் முதலீடுகள் செய்வது எளிதாக்கப்பட்டிருப்பதைப் பற்றிப் பேசிய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், உண்மையான ஒற்றைச் சாளரமாக இது இருக்கும் என்றும், தொடர்புடைய அனைத்து மாநில அரசுகளும், மத்திய அமைச்சகங்களும் இந்த அமைப்பில் உள்ளடக்கப் படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

நில வங்கி ஒன்றை அமைப்பதற்கு அரசு பணியாற்றி வருவதாகவும், ஆறு மாநிலங்கள் ஏற்கனவே தங்களது ஒப்புதலை இதற்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதன் மூலம், முதலீடு செய்ய விரும்புவோர் நில உரிமையாளர் முகமைகளுக்கு அடிக்கடி வந்து செல்லும் தேவையில்லாமல், தொலைவில் உள்ள தங்களது அலுவலங்களில் இருந்தே நில வங்கிகளை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.

 

தொழில்கள் மற்றும் முதலீடுகளின் ஒப்புதல்களை மேலும் எளிமையாக்குவது மற்றும் துரிதப்படுத்துவது குறித்து பேசிய அவர், பல்வேறு தொழில்களின் யோசனைகள் மற்றும் திட்டங்களின் மீது முடிவெடுப்பதற்காக, அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான செயலாளர்களின் அதிகாரம் பொருந்திய  குழுவை அமைக்க அமைச்சரவை எடுத்துள்ள சமீபத்திய முடிவுகளைப் பற்றிக் குறிப்பிட்டார். ஒவ்வொரு மத்தியத் துறையிலும் தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், முதலீடுகளைக் கொண்ட திட்டங்களின் வளர்ச்சிக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே ஒருங்கிணைப்புக்காகவும், இந்தியாவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அயல்நாட்டு முதலீடு உள்ளே வருவதை அதிகரிக்க திட்ட வளர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கவனம் செலுத்துவதற்காக 12 தொழில் துறைகளை அரசு முதலில் கண்டறிந்ததாக தெரிவித்த அமைச்சர், பின்னர் அது 20 ஆக அதிகரிக்கப்பட்டதாகக் கூறினார். முதலீடுகளை அதிகரிக்கவும், நாட்டின் போட்டியிடும் திறனை மேம்படுத்தவும் இது உதவும். நிலையான மற்றும் சிறப்பு சாமான்கள், குளிர் சாதனங்கள், தோல், காலணி, வேளாண்-ரசாயனங்கள், உண்ணத் தயார் நிலையில் உள்ள உணவுகள், எஃகு, அலுமினியம், செம்பு, ஜவுளி, மின்சார வாகங்கள், வாகன உதிரிபாகங்கள், தொலைக்ம்காட்சி செட்-டாப் பெட்டிகள், சிசிடிவிக்கள், விளையாட்டுச் சாமான்கள், எத்தனால் தயாரிப்பு மற்றும் உயிரி-எரிபொருள்கள், மற்றும் பொம்மைகள் ஆகிய துறைகள் இதில் அடங்கும். தற்சார்பு பாரதம் என்றால் உலகத்துக்கான தனது கதவுகளை இந்தியா மூடுவதாக அர்த்தமில்லை என்று கூறிய அவர், மாறாக, இந்தியப் பொருள்களின் தரம் மீதான கவனத்தோடும், இந்தியத் தயாரிப்பின் பொருளாதார அளவை அதிகரிக்கும் நோக்கத்துடனும், வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளுக்கான கதவுகளை விரிவுபடுத்தியிருப்பதாகத் தெரிவித்தார். வலிமையான நிலையில் இருந்து, அதிகப் போட்டித் திறனுடன், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி உலகத்தை இந்தியா கையாளும். செயற்கை நுண்ணறிவு, தகவல் பகுப்பாய்வு, மனித உருக்கொண்ட தானியங்கியல் ஆகியவற்றை தொழில்துறை கிரகித்துக் கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதென்பது வேலைவாய்ப்புகளை குறைப்பதாகாது என்று தெரிவித்த அவர், நாட்டின் தயாரிப்பு அதிகரித்தால் அதிக வேலைவய்ப்புகள் உருவாகும் என்றார்.

 

***


(Release ID: 1641594) Visitor Counter : 307