சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொவிட்-19 பிளாஸ்மா கொடை இயக்கத்தை டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கினார்
Posted On:
19 JUL 2020 7:07PM by PIB Chennai
தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்சில், கொவிட்-19 பிளாஸ்மா கொடை இயக்கத்தை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று துவக்கி வைத்தார். தில்லி காவல் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில், கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்த 26 காவலர்கள் தன்னார்வத்துடன் ரத்த பிளாஸ்மா கொடை அளித்தனர்.
தில்லி காவல் துறையின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், கொரோனாவினால் சுமார் 12 தில்லி காவல் துறையை சேர்ந்தவர்கள் உயிரிழந்தது குறித்து துயருற்றதாகவும், இந்த இறப்புகள் நேரிட்டாலும் தொற்றுப் பரவல் மையங்கள் 200-லிருந்து 600 ஆக கூடியிருக்கும் நிலையில், தில்லி காவல் துறையினர் தமது காவலர்களை அனுப்பி தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மிகச் சிறந்த பணியாற்றி வருவதாகவும் அவர் பாராட்டினார்.
டாக்டர் ஹர்ஷ் வர்தன், பிளாஸ்மா கொடை அளித்த 26 காவலர்களுக்கு சான்றிதழ் அளித்து அவர்களது பங்களிப்புக்கு மரியாதை செலுத்தினார். இவர்களில் திரு. ஓம் பிரகாஷ் மூன்றாவது முறையாக பிளாஸ்மா கொடை அளிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தில்லி காவல் துறையின் பிளாஸ்மா கொடைப் பணியானது நாட்டு மக்களிடையே ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், அவர்களையும் பிளாஸ்மா கொடை அளிக்க ஊக்கமுடன் முன்வரச் செய்யும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். கொவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் ஒவ்வொரு கொடையாளரின் பங்கும் முக்கியமானது என்றும், இந்தத் தொற்றுக்கு உறுதியான பலனளிக்கும் சிகிச்சையோ, தடுப்பு மருந்தோ கண்டுபிடிக்கப்படும் வரை நமக்கு இன்னும் அதிகமாக இது போன்ற பிளாஸ்மா போராளிகள் தேவைப்படுகிறார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.
(Release ID: 1639875)
Visitor Counter : 225