சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்
Posted On:
17 JUL 2020 6:11PM by PIB Chennai
மாநில / யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்றி வரும் ``பரிசோதனை செய், தடமறிந்திடு, சிகிச்சை கொடு'' என்ற மத்திய அரசின் உத்தி, கோவிட்-19 நோய்த் தொற்று பாதிப்பைக் கையாள்வதற்குப் பொருத்தமான உத்தி என நிரூபிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குணம் பெறுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 22,942 பேர் சிகிச்சை முடிந்து, குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து இதுவரையில் கோவிட் பாதிப்பு ஏற்பட்டு குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,35,756 ஆக உயர்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 63.33 சதவீதம் ஆகும்.
ஆரம்ப கட்டத்திலேயே நோய் பாதிப்பைக் கண்டறிதல், பரவலாக மற்றும் எளிதில் கிடைக்கும் பரிசோதனைகள் மூலம் இதைக் கண்டறிதல், தடமறிதல் செயல்பாடுகளைத் தீவிரமாக கவனித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் நோய் பரவலைத் தடுப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மற்றும் இடைமுகப் பகுதிகளில் அமல் செய்யப்படும் நோய்த் தடுப்பு உத்திகளின்படி வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தல், SARI/ILI போன்ற தீவிர மூச்சுக் கோளாறு உள்ள நோயாளிகளைக் கண்காணித்தல், அதில் முதியவர்கள் மற்றும் வேறு பாதிப்புகள் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்துதல் ஆகிய செயல்பாடுகள் பின்பற்றப்படுகின்றன. இதன் காரணமாக உரிய காலத்தில் கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு, நோய்த் தாக்கத்தின் தன்மைக்கு ஏற்ப வீடு அல்லது மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோய் கண்டறியும் பரிசோதனைகளை நடத்தும் திறன்களை அதிகரிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தினமும் 3 லட்சம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 3,33,228 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 1,30,72,718 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், பத்து லட்சம் பேருக்கு 9473 பேருக்கு இந்தப் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
2020 ஜனவரியில் ஒரு பரிசோதனை நிலையம் மட்டுமே இருந்த நிலையில், இப்போது நாட்டில் 1244 பரிசோதனை நிலையங்கள் உருவாகியுள்ளன. இதில் 880 அரசு பரிசோதனை நிலையங்களும், 364 தனியார் பரிசோதனை நிலையங்களும் உள்ளன.
• Real-Time RT PCR அடிப்படையிலான பரிசோதனை நிலையங்கள்: 638 (அரசு: 392 + தனியார்: 246)
• TrueNat அடிப்படையிலான பரிசோதனை நிலையங்கள்: 504 (அரசு: 452 + தனியார்: 52)
• CBNAAT அடிப்படையிலான பரிசோதனை நிலையங்கள்: 102 (அரசு: 36 + தனியார்: 66)
(Release ID: 1639444)
Visitor Counter : 242