வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயலாளர் திரு வில்பர் ரோஸ் இருவரும் தொலைபேசி மூலம் கலந்துரையாடினர்

Posted On: 16 JUL 2020 6:53PM by PIB Chennai

இந்திய-அமெரிக்க சிஇஓ அமைப்பின் கூட்டம் 15-2-2020 அன்று நடைபெற்ற பிறகு ஒரு நாள் கழித்து 16-7-2020 அன்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் மற்றும் ரயில்வே அமைச்சர் திரு பியூஸ் கோயல் அமெரிக்காவின் வர்த்தகச் செயலாளர் திரு வில்பர் ரோஸ் இருவரும் தொலைபேசி மூலம் கலந்துரையாடினர்.

 

 வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு இருவரும் தங்களின் இரு நாடுகளிலும் தற்போது உள்ள கோவிட்-19 சூழல் குறித்து விவாதித்தனர்.  உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான குடியரசு நாடுகளான இந்தியா மற்றும் அமெரிக்கா இரண்டும் பெருந்தொற்றுப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் நட்புறவோடு ஈடுபட்டு வருவதை பரஸ்பரம் பாராட்டினர்.

 

 மேலும் இருவரும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தியா-யுஎஸ்ஏ வர்த்தக விவாதங்கள் குறித்துப் பேசியதோடு நிலுவையில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகள் பற்றி இருதரப்பிலும் ஏற்பட்டு வருகின்ற குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்குப் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர். இந்தத் தொடக்க நிலை வர்த்தக செயல் தொகுப்பை நிறைவு செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இந்தியா-யுஎஸ்ஏ இருதரப்பு வர்த்தகத்தின் சாதகமான சூழலை அங்கீகரித்ததோடு எஃப்.டி.ஏ உருவாக்குவதற்கான வாய்ப்பு குறித்தும் விவாதித்தனர்.

 

 டிவிபிஆர்ஏ (கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கான பாதுகாப்பு மறு உறுதி சட்டம்) பட்டியலில்  இந்தியாவின் வர்த்தகப் பொருட்களை (24 பொருட்கள்) அமெரிக்கா வைத்திருப்பதும் அவற்றை ”குழந்தைத் தொழிலாளர் பிரிவு”களின் கீழ் வைத்திருப்பதும் அதனால் யுஎஸ் அரசு நிறுவனங்களுக்கு விநியோகிக்கும் ஒப்பந்தங்களில் அவற்றுக்கு பங்கு பெறும் வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்தும் அமைச்சரின் குறிப்புக்குப் பதில் சொல்லும்போது செயலாளர் ரோஸ் இரு தரப்பிலிருந்தும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு இடையில் இது தொடர்பாக ஒரு கூட்டம் நடத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்தார்.

 

 அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு பிப்ரவரி 2020ல் வந்திருந்தபோது மேற்கொள்ளப்பட்ட யுஎஸ்-இந்தியா சமூகப்பாதுகாப்பு முழுமை ஒப்பந்தம் என்பதில் நிலுவையிலுள்ள விஷயங்களை அமைச்சர் திரு. கோயல் சுட்டிக் காட்டினார்.  இந்தியாவின் அக்கறையைப் பாராட்டிய  செயலாளர்,  இது தொடர்பான அமெரிக்காவின் சட்டபூர்வ நிபந்தனைகளை இந்தியா பூர்த்தி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.  மேலும் அவர் இதுதொடர்பாக சமூக பாதுகாப்பு நிர்வாகி மற்றும் சம்பந்தப்பட்ட இந்திய அதிகாரிகளுக்கு இடையில் கலந்துரையாடவும், சாத்தியமான தீர்வினை கண்டறியவும் ஒரு கூட்டம் நடத்தலாம் என்று  தெரிவித்தார்.

 

 இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், கடலிலிருந்து பிடிக்கப்படும் இறால்களை இறக்குமதி செய்ய அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டு உள்ளது குறித்து அமைச்சர் மேலும் பேசினார்.  கடல் ஆமைகளைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் நெறிமுறைகளுக்கு இசைவாக இந்தியாவினுடைய மீன்பிடி நடைமுறைகள்  இல்லை என்று கருதி அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. கடல் ஆமைகளைப் பாதுகாப்பதற்காக இந்தியாவின் கடலோர மாநிலங்கள் எடுத்து வருகின்ற பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைச்சர் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்தியாவின் அக்கறைகளைப் பாராட்டிய செயலாளரோ அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மற்றும் கடல் உயிர் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளோடு இந்தியாவின் மீன்வளத்துறை மற்றும் காடுகள் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தார்.

*****


(Release ID: 1639286) Visitor Counter : 209