தேர்தல் ஆணையம்
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெறும் இடைத்தேர்தல்களில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதியை வழங்க வேண்டாம் என இந்திய தேர்தல் ஆணையம் முடிவு, செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினை, போதிய பணியாளர்கள் இல்லாதது மற்றும் கோவிட்-19-ன் பாதுகாப்பு வழிமுறைகளைக் கருத்தில் கொண்டு நடவடிக்கை
Posted On:
16 JUL 2020 7:12PM by PIB Chennai
கோவிட்-19 பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, பேரிடர் மேலாண்மை சட்டம்-2005-ன் கீழ், பொதுமுடக்க வழிகாட்டி நெறிமுறைகளை நேரத்துக்கு நேரம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டு வருகிறது. பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-ன்கீழ் அமைக்கப்பட்ட தேசிய செயற்குழுவின் தலைவரான, மத்திய உள்துறைச் செயலாளர் மே 17, 2020-ல் வெளியிட்ட வழிகாட்டி நெறிமுறைகளின் 7-வது பத்தியில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
“பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள நபர்களுக்கான பாதுகாப்பு: 65 வயதுக்கும் மேற்பட்ட நபர்கள், வேறு தீவிர நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அத்தியாவசிய மற்றும் மருத்துவ நோக்கங்களுக்கு செல்வதைத் தவிர, மற்றபடி வீடுகளிலேயே இருக்கலாம்”
அதேநேரத்தில், கோவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்ட/சந்தேகத்துக்கு உரிய நபர்களை தனிமைப்படுத்துவதற்கான (வீடுகளில்/அரசு இடங்களில்) விரிவான வழிமுறைகள், ஏப்ரல் 5, 2020 மற்றும் மே 18, 2020—ல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு, 65 வயதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடிகள் மூலம் பாதிப்பு ஏற்படுவதை குறைக்கவும், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்களின் வாக்கு உரிமை பறிபோவதைத் தடுக்கவும், அவர்களுக்கும் தபால் வாக்கு வசதியை தேர்வுசெய்யும் உரிமையை நீட்டிக்க தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, திருத்தப்பட்ட விதிகளை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அறிவிக்கையாக ஜூன் 19, 2020-ல் வெளியிட்டது. இருந்தாலும், இந்த வழிமுறைகளை அமல்படுத்துவதற்கு முன்னதாக, தேர்தல் நேரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951-ன் 60(சி) பிரிவின் கீழ், உரிய அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த வழிமுறைகளை அமல்படுத்துவதற்கு முன்னதாக, கள நிலவரம் மற்றும் செயல்படுத்துவதற்கான வசதிகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து மதிப்பீடு செய்தது.
இந்த எதிர்பாராத சூழலில், அடுத்து வரவுள்ள இடைத்தேர்தல்கள் மற்றும் பிகார் சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கோவிட்-19 பெருந்தொற்று பரவும் சூழலில், எளிதாக வாக்களிக்க, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ள வாக்காளர்களைக் கவனத்தில் கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயிரம் பேர் வரை மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, மாநிலத்தில் கூடுதலாக 34,000 (தோராயமாக) வாக்குச்சாவடிகளை (45% கூடுதல்) உருவாக்க வேண்டியுள்ளது. இதன்மூலம், ஒட்டுமொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,06,000-ஆக அதிகரிக்கும். இதன் காரணமாக, பிகார் மாநிலத்தில் கூடுதலாக 1.8 லட்சம் வாக்குச்சாவடி பணியாளர்களை நியமிப்பது மற்றும் அதிக அளவிலான வாகனங்களை ஏற்பாடு செய்வது போன்ற கூடுதல் வசதிகளை செய்ய வேண்டியது என நடைமுறை சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. வரும் இடைத்தேர்தல்களிலும் இதே சவால்கள் இருக்கும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஆயிரம் பேர் வரை மட்டுமே வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் எழுந்துள்ள அனைத்து விவகாரங்கள், சவால்கள் மற்றும் தட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்தது. இதையடுத்து, பிகாரில் நடைபெறும் பொதுத் தேர்தல் மற்றும் விரைவில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் 65 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு தபால் வாக்கு வசதியை வழங்குவதற்கான அறிவிக்கையை வெளியிட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் முடிவுசெய்துள்ளது. எனினும், 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ள வாக்காளர்கள், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட/ சந்தேகத்தின்பேரில் தனிமைப்படுத்தப்பட்ட (வீடுகள்/அரசு இடங்களில்) வாக்காளர்களுக்கு தபால் வாக்கை தேர்வு செய்யும் வசதி, இந்தத் தேர்தல்களில் வழங்கப்படும்.
*****
(Release ID: 1639281)
Visitor Counter : 250