அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்க இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்
Posted On:
16 JUL 2020 7:21PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு, அதாவது 2020-2025 காலப்பகுதி வரை, நீடிக்க இந்திய- ஐரோப்பிய ஒன்றியத்தின் 15வது உச்சி மாநாட்டில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டன.
காணொலி வழியாக நடைபெற்ற இந்த மெய்நிகர் உச்சி மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமை வகித்தார். ஐரோப்பிய ஒன்றியக் குழுவிற்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐரோப்பிய கமிஷனின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயென் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிப்பது என்ற விஷயம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் பரஸ்பர நலன்கள் என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிய துறைகளில் மேலும் ஒன்றிணைந்து செயல்படுவது என இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒப்புக் கொண்டன. 2001ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் 2001ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டு கடந்த மே 17 அன்று முடிவுக்கு வந்திருந்தது.
“உரிய நேரத்தில் (ஒப்பந்தத்தை) புதுப்பிக்கும் செயல்முறையை தொடங்குவது, ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் துறைகளில் கடந்த 20 ஆண்டுகளாக நிலவிய தீவிரமான ஒத்துழைப்பை அங்கீகரிப்பது என்பதில் இரு தரப்பும் உறுதியோடு உள்ளன” என இத்தருணத்தில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கை தெரிவித்தது.
நீர், மின்சக்தி, சுகாதாரம், விவசாய தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பொருளாதாரம், ஒருங்கிணைந்த இணையவழி மற்றும் நிலையான அமைப்புகள், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள், நுண் அணு தொழில்நுட்பம், தூய்மையான தொழில்நுட்பங்கள் போன்ற பலதரப்பட்ட துறைகளில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் உதவி செய்யும். ஆராய்ச்சி நடவடிக்கைகளில் நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்புகள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், புதிய தொழில்முயற்சிகள் பரிமாற்றம், கூட்டாக அறிவைப் பெருக்குவதற்கான வள ஆதாரங்களில் கூட்டு முதலீட்டைக் கவர்ந்திழுப்பது ஆகியவற்றையும் இது வலுப்படுத்தும்.
இதற்கு முன்பாக, இந்தியாவில் இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, உயிரியல் தொழில்நுட்பத் துறை, புவிசார் அறிவியல்கள் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய அமைப்புகளுடன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், புவிசார் அறிவியல்கள் ஆகிய துறைகளுக்கான மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான இந்திய- ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தம் குறித்த பரிசீலனையை மேற்கொண்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான இந்திய- ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது என இந்த பரிசீலனைக் கூட்டம் ஆலோசனை கூறியதுடன் கடந்த ஐந்து ஆண்டுகளில் 73 கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதையும், இதன் விளைவாக கூட்டாக 200 ஆராய்ச்சிக் கட்டுரைகள் பதிப்பிக்கப்பட்டுள்ளதையும், ஒரு சில காப்புரிமைகள் பதிவாகியுள்ளதையும் நினைவு கூர்ந்தது. மேலும் இக்காலப்பகுதியில் பரிமாற்ற அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் 500 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தக் காலப்பகுதியில் அறிவு உருவாக்கம், மனித திறன் மேம்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு, நீர், சுகாதாரம், (நுண் அணு அறிவியல் உள்ளிட்ட) பொருட்கள் மற்றும் உயிரியல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் தொழில்நுட்பங்களை ஈடுபடுத்தல் ஆகியவற்றுக்கான கூட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
------
(Release ID: 1639278)
Visitor Counter : 270