பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

28 மாநிலங்களில் உள்ள 2.63 லட்சம் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.15,187.50 கோடி நிதியுதவியை ஜூலை 15, 2020-ல் நிதியமைச்சகம் விடுவித்துள்ளது; 2020-21—ம் நிதியாண்டுக்கான 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் வழங்கப்படும் நிபந்தனையுடன் கூடிய நிதியுதவியின் ஒரு அங்கமாக இது வழங்கப்பட்டுள்ளது

Posted On: 16 JUL 2020 8:17PM by PIB Chennai

மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர், துப்புரவுத் துறையின் பரிந்துரையின்படி, 28 மாநிலங்களில் உள்ள 2.63 லட்சம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியுதவியாக ரூ.15,187.50 கோடியை மத்திய நிதியமைச்சகம் 2020ஜூலை 15-ல் விடுவித்துள்ளது. 2020-21-ம் நிதியாண்டு காலத்துக்கு 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்துள்ள நிபந்தனையுடன் கூடிய நிதியின் (Tied Grant) ஒரு அங்கமாக இது வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியை குடிநீர் விநியோகம், மழைநீர் சேமிப்பு, நீர் மறுசுழற்சி, துப்புரவு மற்றும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலையை தொடரச் செய்தல் ஆகிய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் தகவலை வெளியிட்ட மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், “கோவிட்-19 பெருந்தொற்று சூழலால் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளிடம் இந்த நிதி இருப்பது, கிராமப்புற குடிமக்களுக்கு அடிப்படை சேவைகளை சிறப்பான முறையில் வழங்குவதை ஊக்குவிக்கும். மேலும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ள இடம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனுள்ள வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம், உள்ளாட்சி அமைப்புகள் மேம்படும். அதோடு, கிராமப்புற கட்டமைப்பை பயனுள்ள வகையில் விரிவுபடுத்தச் செய்யும்,” என்றார்.

கூடுதல் விவரங்களைத் தெரிவித்த திரு.தோமர், “பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில், நாட்டின் 28 மாநிலங்களில் உள்ள 2.63 லட்சம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதியாக ரூ.15,187.50 கோடி தொகையை மத்திய நிதியமைச்சகம், 2020 ஜூன் 17, அன்று விடுவித்தது. 2020-21-ம் நிதியாண்டு காலத்தில் 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, நிபந்தனை இல்லாத நிதியின் (Untied Grant) ஒரு அங்கமாக இது வழங்கப்பட்டுள்ளது. இதனை, குறிப்பிட்ட இடத்தின் தேவையைப் பொறுத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்று தெரிவித்தார்.

*****


(Release ID: 1639268)