மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
முதலாவது ஆன்லைன் NISHTHA கல்வித்திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் மற்றும் அத்துறையின் இணை அமைச்சர் ஆகியோர் கூட்டாகத் தொடங்கி வைத்தனர். ஆந்திராவில் 1200 முக்கிய பயிற்சியாளர்களுக்கு இது தொடங்கப்பட்டது
Posted On:
16 JUL 2020 5:51PM by PIB Chennai
ஆந்திராவைச் சேர்ந்த 1200 முக்கிய பயிற்சியாளர்களுக்கான முதலாவது NISHTHA ஆன்லைன் கல்வித் திட்டத்தை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் `நிஷாங்க்' மற்றும் அத் துறையின் இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோட்ரே ஆகியோர் புதுடெல்லியில் இன்று மெய்நிகர் நிகழ்ச்சியில் கூட்டாகத் தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் சமக்ரா சிக்சா - என்ற உயர் சிறப்புள்ள கல்வித் திட்டத்தின் கீழ் தொடக்க நிலையில் செயல்படும் பள்ளிக்கூடத் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான மேம்பாட்டுக்கான தேசிய அளவிலான முன் முயற்சியாக NISHTHA இருக்கிறது என்று கூறினார். கற்றல் பயன்களை மேம்படுத்துவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.நேரடியாக சந்தித்து நடைபெறும் NISHTHA பயிற்சித் திட்டம் 2019 ஆகஸ்ட் 21ஆம் தேதி தொடங்கப்பட்டது என்று அமைச்சர் குறிப்பிட்டார். அதன் பிறகு 33 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தங்கள் பகுதிகளில் சமக்ரா சிக்சா என்ற மத்திய அரசு உதவியுடன் கூடிய திட்டத்தின் கூட்டுமுயற்சியில் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. 29 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மாநில அளவிலான பயிற்சிக் கல்வித் திட்டத்தை என்.சி.இ.ஆர்.டி. நிறைவு செய்துள்ளது. 4 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் (மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் மற்றும் பிகார்) மாநில அளவிலான பயிற்சிகள் இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இரண்டு மாநிலங்களில் இத் திட்டம் இன்னும் தொடங்கப்பட வேண்டியுள்ளது. 23 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மாவட்ட அளவிலான ஆசிரியர் பயிற்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
நேரில் சந்தித்து நடைபெறும் NISHTHA பயிற்சியில் இது வரையில் 23 ஆயிரம் முக்கிய பயிற்சியாளர்களும், 17.5 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூட தலைமை நிர்வாகிகளும் பயிற்சி பெற்றிருப்பதாக திரு. பொக்ரியால் தெரிவித்தார்.
கோவிட்-19 நோய்ப் பரவல் சூழ்நிலை காரணமாக, திடீரென முடக்கநிலை அமல் செய்யப்பட்டதால், நேரடி பயிற்சிகளை நடத்துவது சாத்தியமற்றுப் போனதாக அவர் குறிப்பிட்டார். எனவே மீதி 24 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக்கூட தலைமை நிர்வாகிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கு, ஆன்லைன் மூலம் NISHTHA பயிற்சியை அளிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது. என்.சி.இ.ஆர்.டி.யின் DIKSHA மற்றும் NISHTHA முனையங்கள் மூலம் இந்தப் பயிற்சிகள் நடத்தப்படும். ஆந்திராவில் தான் முதன்முறையாக NISHTHA ஆன்லைன் பயிற்சித் திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம் என்றும், NISHTHA முனையத்தின் மூலம் 1200 முக்கிய பயிற்சியாளர்கள் இதில் பயன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார். ஆந்திராவில் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க இவர்களின் சேவை பயன்படுத்திக் கொள்ளப்படும். அவர்கள் பிறகு DIKSHA மூலம் NISHTHA பயிற்சியைப் பெறுவார்கள்.
******
(Release ID: 1639250)
Visitor Counter : 238