பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
இந்தியாவின் வளர்ச்சிக் கதையில் உள்ள மிகப் பெரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு திரு. தர்மேந்திர பிரதான் அழைப்பு
Posted On:
16 JUL 2020 10:47AM by PIB Chennai
வரும் 17 ஜூலை, 2020 அன்று நடைபெறவிருக்கும் இந்திய மற்றும் அமெரிக்க உத்திசார் எரிசக்தி கூட்டணியின் இரண்டாவது அமைச்சர்கள் கூட்டத்துக்கு முன்னதாக, அமெரிக்க-இந்திய வர்த்தக சபை புதன்கிழமை அன்று ஏற்பாடு செய்த தொழில் துறை அளவிலான உரையாடலுக்கு அமெரிக்க எரிசக்தி செயலாளர், மேன்மைமிகு டான் பிரவுல்லெட் உடன் இணைந்து மத்திய பெட்ரோலிய, இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர், திரு. தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். மேலும், அமெரிக்க-இந்திய உத்திசார் எரிசக்தி கூட்டணி ஏற்பாடு செய்த தொழில் துறை அளவிலான உரையாடலுக்கும் அமைச்சர் தனியாக தலைமை வகித்தார்.
பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக செயலாளர், திரு.தருண் கபூர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர், திரு. தரண்ஜித் சந்து, எரிசக்தி தொடர்பான இந்திய மற்றும் அமெரிக்க அரசுகளின் பல்வேறு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் மற்றும் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்த மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த உரையாடல்களின் போது, இந்தியாவின் புதிய வாய்ப்புகளில் தங்களை இணைத்துக் கொண்டு முதலீடு செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் அமைச்சர் திரு.பிரதான் அழைப்பு விடுத்தார். இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கிடையே இந்தத் துறையில் ஏற்கனவே சில கூட்டு முயற்சிகள் இருக்கும் போதும், அவர்களின் திறன்களுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைவே என்றார். அமெரிக்க-இந்திய எரிசக்தி கூட்டணியின் விரிதிறன் பற்றிக் குறிப்பிட்ட அவர், இந்திய-அமெரிக்க உத்திசார் கூட்டணியை தாங்கி நிற்கும் துண்களில் இதுவும் ஒன்று என்று கூறினார்.
இந்த சவாலான சமயங்களின் போது, உலகளாவிய எரிசக்தி சந்தைகளை நிலைப்படுத்துவதில் ஆகட்டும் அல்லது கொவிட்-19-ஐ எதிர்கொள்ளும் கூட்டு நடவடிக்கைகளில் ஆகட்டும், இந்தியா மற்றும் அமெரிக்கா நெருங்கி பணியாற்றுகின்றன. "இன்றைய குழப்பமான உலகில், நிலைத்து நிற்கும் மற்றும் என்றுமே நிலைத்து நிற்கப் போகும் ஒரே விஷயம் நமது இருதரப்பு கூட்டின் வலிமையே ஆகும்," என்று அவர் கூறினார்.
உத்திசார் எரிசக்திக் கூட்டைப் பற்றி பேசிய அமைச்சர், இயற்கை எரிவாயுத் துறை முன்னுரிமைப் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். திரவ இயற்கை எரிவாயு கிணறுகள், திரவ இயற்கை எரிவாயு ஐஎஸ்ஓ களன் தயாரிப்பு, பெட்ரோ ரசாயனங்கள், உயிரி-எரிபொருள் மற்றும் அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு போன்ற இந்திய எரிசக்தி துறையில் வரவிருக்கும் பல்வேறு புதிய வாய்ப்புகளைப் பற்றி அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்திய ஆய்வு மற்றும் உற்பத்தித் துறையில் தொலைநோக்குடன் தற்போது செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் பற்றியும், கொள்கை சீர்திருத்தங்கள் குறித்தும் திரு. பிரதான் பேசினார். வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய நாடு தயாராகி வரும் வேளையில், அடுத்த ஐந்து வருடங்களில் எரிவாயு விநியோக வலைப்பின்னல்களின் உருவாக்கம் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு ஆகியவற்றில் 118 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான முதலீட்டை இந்தியா பெறும் என்று அவர் தெரிவித்தார்.
*****
(Release ID: 1639020)
Visitor Counter : 212
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam