பிரதமர் அலுவலகம்

உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு, திறன், மறுதிறன் மற்றும் திறன்மேம்பாடு ஆகியவை பற்றி இளைஞர்களுக்கு பிரதமர் அறிவுறுத்துகிறார்

உள்நாட்டிலும் உலக அளவிலும் வேலைவாய்ப்பை அணுகுவதற்கான வாய்ப்புகளை திறன் இந்தியா திட்டம் மேம்படுத்தியுள்ளது: பிரதமர்

திறமையான தொழிலாளர்களை ஒருங்கிணைக்க சமீபத்தில் தொடங்கப்பட்ட இணையதளத்தை பற்றி குறிப்பிடுகையில், தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள் ஆகியோருக்கு எளிதில் வேலை கிடைக்க இது உதவும் என பிரதமர் குறிப்பிட்டார்

திறமையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளவும், உலகளாவிய தேவைக்கு ஈடுசெய்யவும் நாட்டில் உள்ள விரிவான ஆற்றல்களை பிரதமர் சுட்டிக்காட்டுகிறார்

Posted On: 15 JUL 2020 11:33AM by PIB Chennai

உலக இளைஞர் திறன் தினம் மற்றும் 'திறன் இந்தியா' திட்டத்தின் 5ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடைபெற்ற டிஜிட்டல் திறன் மாநாட்டில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். வேகமாக மாறிக்கொண்டிருக்கும் வணிகச் சூழல் மற்றும் சந்தை நிலைகளுக்கேற்ப, இளைஞர்கள், திறமை, மறுதிறன் மற்றும் திறன்மேம்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் நாட்டின் இளைஞர்களை வாழ்த்திய பிரதமர் கூறுகையில், எல்லா நேரத்திலும் புதிய திறன்களைப் கற்றுக் கொள்ள வேண்டியிருப்பதால், இந்த  உலகம் இளைஞர்களுக்கானது என்றார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், திறன் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது என்றும், திறன், மறுதிறன் மற்றும் திறன் மேம்பாட்டுக்கான கட்டமைப்புகளை உருவாக்க இது வழிவகுத்ததாகவம், இதன் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அதிகரித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்களை நாடு முழுவதும் நூற்றுக்கணக்கில் திறக்கவும், ஐடிஐ.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், திறன் இந்தியா திட்டம் வழிவகுத்தது. இந்த ஒருங்கிணைந்த முயற்சிகள் காரணமாக, கடந்த 5 ஆண்டுகளில் 5 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.  திறமையான தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை ஒருங்கிணைக்க, சமீபத்தில் தொடங்கப்பட்ட இணையதளம் பற்றி குறிப்பிடுகையில், இந்த இணையதளம், புலம் பெயர் தொழிலாளர்கள் உட்பட, திறமையான தொழிலாளர்களுக்கு எளிதில் வேலை கிடைக்க உதவும் என்றார். உள்ளூர் பொருளாதாரத்தை மாற்றுவதில், புலம் பெயர் தொழிலாளர்களின் திறமைகள் உதவியாக இருக்கும் என பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

திறமைகள் என்பது, நமக்கு நாமே அளிக்கும் பரிசு என்றும், இந்த திறமைகள் நேரமற்றது, தனிச்சிறப்பானது, புதையல் போன்றது. இதன் மூலம் ஒருவருக்கு வேலை கிடைப்பது மட்டும் அல்லாமல், திருப்தியான வாழ்க்கையை நடத்துவதற்கும் உதவுகிறது என பிரதமர் விளக்கினார்.

புதிய திறன்களைப் பெறுவதற்கான ஈர்ப்பு ஒருவரின் வாழ்க்கையில் புதிய ஆற்றலையும் ஊக்கத்தையும் அளிக்கிறது என்று அவர் கூறினார். திறன்கள் வாழ்வாதாரத்திற்கான  வழிமுறையாக மட்டுமல்லாமல், நமது அன்றாட வாழ்வில், உயிரோட்டமாகவும், சுறுசுறுப்பாகவும் உணர காரணமாக இருக்கின்றன.

அறிவு மற்றும் திறன்களுக்கான வேறுபாட்டையும் தனது உரையில் பிரதமர் உதாரணத்துடன் விளக்கினார். சைக்கிள் எவ்வாறு இயங்குகிறது என்பதை தெரிந்து கொள்ளுதல் அறிவு, அதை ஓட்டுவது திறமை என பிரதமர் குறிப்பிட்டார். இந்த இரண்டுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டையும் அவற்றின் வெவ்வேறு சூழல்களையும் தாக்கங்களையும் இளைஞர்கள் உணர வேண்டியது அவசியம் என பிரதமர் விளக்கினார். திறமையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள, நாட்டில் உள்ள விரிவான ஆற்றல்களையும் பிரதமர் சுட்டிக் காட்டினார். சுகாதாரத்துறையில், உலகத் தேவையை ஈடுசெய்ய இந்தியாவின் திறமையான மனிதவளம் பயன்படுத்தப்படுவதையும் அவர் உதாரணமாகக் கூறினார். இந்தத் தேவையை ஈடுகட்ட, இந்திய தரத்தை பிறநாடுகளின் தரத்துடன் சீரமைக்க வேண்டியதின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். இதேபோல், நீண்ட கடல்சார் பாரம்பரியம் கொண்ட இந்திய இளைஞர்கள், இந்தத் துறையில் அதிகரித்து வரும் தேவை காரணமாக உலகெங்கிலும் உள்ள வணிக கப்பல்களில்  நிபுணர்களாகவும்,  மாலுமிகளாகவும் பணியாற்ற முடியும் என்று அவர் ஆலோசனை கூறினார்

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15ம் தேதி கொண்டாடப்படும், உலக இளைஞர் திறன் தினம், இந்தாண்டு இணையவழி மூலம் கொண்டாப்படுகிறது. மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சர் டாக்டர். மகேந்திரநாத் பாண்டே, இணையமைச்சர் திரு.ஆர்.கே.சிங் மற்றும் எல் அண்டு டி குழும தலைவர் திரு..எம்.நாயக் ஆகியோரும் இந்த மாநாட்டில் உரையாற்றினா். லட்சக்கணக்கான பயிற்சி பெறுபவர்கள் உட்பட, இத்துறை தொடர்பான பலரும் இந்த இணைய மாநாட்டில் பங்கேற்றனர்.

*****



 


(Release ID: 1638744) Visitor Counter : 237