சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நெருக்கடியை வாய்ப்பாக மாற்றுதல் – கோவிட்-19 நிர்வாகம் உள்ளிட்ட இருதரப்பு சுகாதார ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆஸ்திரேலியா சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்
Posted On:
14 JUL 2020 2:42PM by PIB Chennai
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆஸ்திரேலிய சுகாதார அமைச்சர் திரு.கிரிகோரி ஆன்ட்ரூ ஹன்டுடன் இருதரப்பு சுகாதார ஒத்துழைப்பு குறித்து காணொலிஙக காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சுகாதாரம் மற்றும் மருந்து துறைகளில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2017 ஏப்ரல் 10ல் கையெழுத்திட்டு இருந்தன. மலேரியா மற்றும் காசநோய் போன்ற தொற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை, மனநலம் மற்றும் தொற்றா நோய்கள், ஆன்ட்டிமைக்ரோபயல் எதிர்ப்புச் சக்தி, மருந்து தொழிலை நெறிப்படுத்துதல், தடுப்பு மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை டிஜிட்டல் மயமாக்குதல் போன்று இருதரப்புக்கும் பரஸ்பரம் பலன் அளிக்கும் அம்சங்கள் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் உள்ளன. மேலும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தற்போதைய கோவிட் பெருந்தொற்று பரவல் போன்ற பொதுசுகாதார அவசர நிலையை எதிர்கொண்டு சமாளிப்பதும் உள்ளடங்கி உள்ளது.
ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 5கி.மீட்டர் ஓட்டப்பந்தயம் போன்ற கருணை அடிப்படையிலான நிகழ்ச்சிகள் நடத்துதல் மற்றும் சிறுவர்களின் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அதிகரித்தல் நடவடிக்கைகளுக்காக டாக்டர் கிரிகோரி ஹன்டை டாக்டர் ஹர்ஷ் வர்தன் பாராட்டினார். இரு நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதன் தேவை குறித்து பேசும்போது டாக்டர் ஹர்ஷ் வர்தன், வளர்ந்த நாடுகளின் மிகச் சிறந்த சுகாதார பராமரிப்பு அமைப்புகளை ஆஸ்திரேலியா பெற்றிருக்கும் அதே வேளையில் இந்தியாவில் சுகாதாரப் பராமரிப்பு மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாகவும் அடுத்த 10 ஆண்டுகளில் இதன் மதிப்பு 275 பில்லியன் டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். சர்வதேச பொருளாதார நிலையில் ஏற்படும் எந்தவொரு குழப்பத்தையும் பொருட்படுத்தாமல் வளர்ச்சிக்கான உந்துசக்தி இயந்திரமாக இந்தியாவின் உள்நாட்டு தேவை அமைந்து உள்ளது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மற்றும் மருத்துவச் சுற்றுலா துறையில் இந்தியா எண்ணற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. ஆயுர்வேதம் மற்றும் யோகா போன்ற இந்தியாவின் பாரம்பரிய ஒருங்கிணைந்த மருத்துவ முறைகள், ஆஸ்திரேலியாவின் உடல்பருமன் மற்றும் அது தொடர்பான நோய்களைத் தீர்க்க உதவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் “சமூக இயக்கமான சுகாதாரம்” என்ற அணுகுமுறை குறித்து விரிவாகக் கூறும்போது டாக்டர் ஹர்ஷ் வர்தன், ”இந்தியாவில் அனைவருக்குமான சுகாதாரச் சேவை காப்பீடு (ஆயஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ்) 100 மில்லியன் குடும்பங்களுக்கு உதவுவதாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 10 மில்லியன் தனிநபர்கள் இதன் மூலம் பலன் அடைந்துள்ளனர். 2025ம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க இந்தியா உறுதி கொண்டுள்ளது; உயர்ரத்த அழுத்தம், மார்பகம், நுரையீரல், தொண்டை மற்றும் வாய் புற்றுநோய்கள் போன்ற தொற்றா நோய்கள் இருக்கின்றனவா என்று கண்டறிவதற்கு பெருந்திரளான மக்களிடம் முன்பரிசோதனை செய்வதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளது. சுகாதாரத் துறையை நவீனப்படுத்துவதற்காக டிஜிட்டல் சுகாதார வரைபடத்தை நடைமுறைப்படுத்த இந்தியா பெரிய அளவில் முயற்சிகளை எடுத்து வருகிறது. கடைசி குடிமகனுக்கும் சுகாதாரச் சேவைகளை அளிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கும் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. அம்ரித் திட்டத்தின் கீழ் (சிகிச்சைக்கு தேவையான குறைந்த செலவிலான மருந்துகள் மற்றும் நம்பகமான உடலுக்குள் பொருத்தும் கருவிகள்) ஏழையிலும் ஏழை மக்களுக்கு புற்றுநோய், இருதயநாள நோய்கள் ஆகியவற்றுக்கான மருந்துகளையும் இதயத்தில் பொருத்தும் கருவிகளையும் குறைந்த செலவில் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன” என்று கூறினார். பிரதமரின் “ஒட்டுமொத்த அரசாங்கம்” என்ற அணுகுமுறை 400 மில்லியன் மக்களையும் உள்ளடக்கிய நிதிச்சேவைக்கு வழிவகுத்து அவர்களின் சுகாதார சேவைகளின் தேவைகளையும் நிறைவேற்றி வருகிறது.
சர்வதேச சமுதாயத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு உள்ள நம்பிக்கையை தனது உரையில் வெளிப்படுத்திய திரு ஹன்ட் ஆஸ்திரேலியாவின் அனைவருக்குமான தொலைமருத்துவ வசதி இதுவரை 19 மில்லியன் நோயாளிகளுக்கு உதவி உள்ளதாகவும் தெரிவித்தார். மனநல மருத்துவ பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான அணுகுமுறையும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை உள்ளடக்கிய சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் ஆகியவையும் சிறந்த மாதிரிகளாக உருவாகி உள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார். உலக மருந்துகளில் 60% மருந்துகளை செலவில்லாத அடிப்படை மருந்துகளாக விநியோகம் செய்யும் இந்தியாவின் மிகப் பெரும் பங்கை அங்கீகரித்த அவர், மரபுச்சுவடு மற்றும் ஸ்டெம்செல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அரிதான நோய்களுக்கு புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் இந்தியா உதவக்கூடிய வாய்ப்புகளையும் எடுத்துரைத்தார்.
(Release ID: 1638532)
Visitor Counter : 286
Read this release in:
Punjabi
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Odia
,
Telugu
,
Malayalam