நிதி ஆணையம்

சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் நிதிஆணையம் கூட்டம் நடத்தியது.

Posted On: 13 JUL 2020 6:05PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர், டாக்டர். ஹர்ஷ் வர்தன் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளுடன் கீழ்கண்ட விஷயங்கள் குறித்து 15வது நிதி ஆணையம் கூட்டம் ஒன்றை இன்று நடத்தியது:

 

* கோவிட்-19 அனுபவத்தின் அடிப்படையில், அமைச்சகத்தின் மாநிலங்களுக்கான குறிப்பிட்ட முன்மொழிதல்களைத் திருத்துதல்.

 

* நிதி நெருக்கடியின் அடிப்படையில் பின் செலுத்துதலுக்கான சாத்தியத்தை ஆராய்தல்.

 

*  15வது நிதி ஆணையத்தின் உயர்மட்டக் குழுவின் சுகாதாரத்துக்கான ஆலோசனைகளை அமைச்சகம் பரிசீலித்தல்.

 

கூட்டத்தைத் தொடங்கிய 15வது நிதி ஆணையத்தின் தலைவர் திரு. என். கே. சிங், பெருந்தொற்றின் விசித்திரமான நிலையைக் கருத்தில் கொண்டு, அரசுக்கான தன்னுடைய இறுதி அறிக்கையில் சுகாதாரத்துக்கென்று தனி அத்தியாயத்தை ஒதுக்க ஆணையம் முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். மத்திய அரசின் ஒதுக்கீடுகள், நிலைமைகளைப் பொறுத்து துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் மூன்றாவது அடுக்குக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை சுகாதாரம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்புக்காக எவ்வாறு ஒதுக்கலாம் என்பது குறித்த அமைச்சகத்தின் எண்ணங்களை அறிந்து கொள்ள ஆணையம் விரும்பியது. இந்தியாவின் சுகாதாரத் துறையின் மேம்பாட்டுக்கான தன்னுடைய லட்சியத்தை எடுத்துரைத்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர், டாக்டர். ஹர்ஷ் வர்தன், இத்துறைக்கு மறுமுன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதற்காக ஆணையத்தைப் பாராட்டினார்.

 

ஆணையத்துக்கு விரிவான விளக்கக்காட்சி ஒன்றை வழங்கிய அமைச்சகம், தேசிய சுகாதாரக் கொள்கை 2017-இன் கீழ்கண்ட இலக்குகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தது:

 

* 2025-க்குள் படிப்படியாக பொது சுகாதாரச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்துவது.

 

* மொத்த சுகாதாரச் செலவில் பொது சுகாதாரச் செலவு மூன்றில் இரண்டு பங்காக இருக்க வேண்டும்.

 

* மாநிலத் துறையின் சுகாதாரச் செலவை அவர்களின் நிதி நிலை அறிக்கை மதிப்பீட்டின் 8 சதவீதத்துக்கும் அதிகமாக 2020-குள் உயர்த்துவது.

 

பொது சுகாதாரச் செலவில் மத்திய அரசால் தற்சமயம் 35 சதவீதமும், மாநில அரசால் 65 சதவீதமும் செய்யப்படுவதாக அமைச்சகம் தெரிவித்தது. பொது சுகாதாரத் துறை, கண்காணிப்பு மற்றும் பொது சுகாதார மேலாண்மை, தடுப்பு மற்றும் நகர்ப்புற சுகாதாரத்தின் மீது சிறப்பு கவனம் கொண்ட முன்னேற்ற சுகாதாரச் சேவை ஆகியவற்றை வலுப்படுத்துவதன் அவசியத்தை பெருந்தொற்று நிறுவியுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஒதுக்கீட்டை வருடாந்திர அடிப்படையில் அதிகரிக்கும் தேவை இருப்பதையும் அமைச்சகம் தெரிவித்தது.

 

கீழ்கண்ட முறையில் மாநிலங்களுக்கு குறிப்பிட்ட நிதிகளை அதிகரிக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சம் முன்மொழிந்தது.

 

இணைக்கப்படாத நிதிகளுக்காக:

 

* சுகாதாரத் துறைக்காக குறைந்தபட்சம் 10 சதவீதம் நிதியாவது ஒதுக்கப்பட வேண்டும், இதில் ஆரம்ப சுகாதாரத்துக்கு மூன்றில் இரண்டு பங்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

 

* மாநிலங்களில் ஆரம்ப சுகாதார சேவைக்கான நிதி ஒதுக்கீட்டில் உள்ள இடைவெளிகள் அளவுகோலாகப் பயன்படுத்த வேண்டும்- குறிப்பிடத்தக்க நிதித் தேவைகள் மற்றும் சுகாதாரப் பின்னடைவு இருக்கும் மாநிலங்களுக்கு இது உதவும், சுகாதாரத்தின் மீதான செலவை முன்னிலைப் படுத்தும்.

 

செயல்திறன் சார்ந்த ஊக்கத்தொகைகளுக்காக:

 

* வருடாந்திர அடிப்படையில் செயல்திறனை வெளிப்படுத்த மாநிலங்களை ஊக்கப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த சுகாதாரக் குறியீட்டை பயன்படுத்த வேண்டும் - செயல்திறன் சார்ந்த குழுவில் 20 சதவீத மதிப்பீடு அளிக்கப்பட வேண்டும்.

 

நிதித்தேவைக்கான திருத்தப்பட்ட முன்மொழிதலை நிதிஆணையத்திடம் அமைச்சகம் சமர்ப்பித்தது. நிதிஆணையத்தின் ஆதரவு தேவைப்படும் கீழ்கண்டவை உள்ளிட்டப் பகுதிகளை அது அடையாளப்படுத்தியது.

 

* ஆதரவுக்கான புதிய பகுதிகள் - நகர்ப்புற சுகாதாரம், அத்தியாவசிய மருந்துகள், DNB படிப்புகளைத் தொடங்குதல் மற்றும் கோவிட்டுக்குப் பின்பான சுகாதாரத் துறை சீர்திருத்தங்கள்.

* உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் பரிசீலிப்பது.

* நிதியைப் பகுதிகளாகப் பின் செலுத்துதல்.

* 15-வது நிதிஆணையம் அளித்துள்ள காலத்தின், அதாவது 2021-22 முதல் 2025-26 வரை, நிதித்தேவையை ரூ 4.99 லட்சம் கோடியில் இருந்து ரூ 6.04 கோடியாகத் திருத்துதல்.

 

15-வது நிதிஆணையத்தின் சுகாதாரத்துக்கான உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரைகளை உரிய முறையில் பரிசீலித்த அமைச்சகம், நிதிகளின் பகுதி அளவிலான பின் செலுத்துதலுக்குப் பிறகு, முன்பிருந்த தேவையான ரூ. 4.99 லட்சம் கோடியைத் திருத்தி ரூ 6.04 லட்சம் கோடியாக மாற்றியமைத்தது. தேசிய சுகாதாரக் கொள்கையின் இலக்கை அடைவதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதம் என்ற அளவுக்கு மாநிலங்களுக்கு கூடுதல் நிதியை அமைச்சகம் கோரியது. அமைச்சகத்தால் கண்டறியப்பட்ட அதிகரிக்கப்பட்ட ஆதரவுக்கான முக்கிய கூறுகள் பின்வருமாறு-

 

* மாவட்ட மருத்துவமனைகளுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல்.

 

* ஒன்றிணைந்த மருத்துவ சேவைக்கு 1.5 மில்லியன் திறன்வாய்ந்த பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல்.

 

* பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு பல்நோக்கு வளாகங்களை ஆரம்பித்தல்.

 

* ஆரம்ப சுகாதாரம் உள்ளிட்ட சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல்

 

அமைச்சர் மற்றும் அமைச்சகம் எடுத்துரைத்த அனைத்து விவரங்களையும் குறித்துக் கொண்ட ஆணையம், பொதுத்துறை சுகாதார செலவினத்தை அதிகரிப்பதற்கும், சுகாதாரப் பணியாளர்களின் தொழில்முறைப் படையை உருவாக்குவதற்கும் தேவை இருப்பதாக ஒப்புக்கொண்டது. இந்த நோக்கத்துக்காக, மாநிலங்களின் அதிகமான மற்றும் தொடர் செயல்பாட்டுக்கும், மூன்றாம் அடுக்குக்கும் தேவை இருக்கிறது. இன்றையக் கூட்டத்தில் எழுப்பப்பட்ட அனைத்து விஷயங்களும் தீவிரமாகப் பரிசீலிக்கப்படும் என்று ஆணையம் உறுதியளித்தது.

 

***
 



(Release ID: 1638399) Visitor Counter : 596