சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
டாக்டர் ஹர்ஷ் வர்தன் தலைமையில் கோவிட்-19 தொடர்பான அமைச்சர்கள் குழுவின் 18வது கூட்டம்
Posted On:
09 JUL 2020 1:41PM by PIB Chennai
காணொலிக் காட்சி மூலமாக இன்று நடைபெற்ற கோவிட்-19 தொடர்பான உயர்நிலை அமைச்சர்கள் குழுவின் 18வது கூட்டத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்தன் தலைமை வகித்தார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். எஸ்.ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சௌபே, மத்திய ரசாயனங்கள், உரங்கள் மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் திரு மன்சூக் மண்டாவியா மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வினோத்பால் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் குழுவிடம் இந்தியாவின் தற்போதைய கோவிட்-19 நிலைமை குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது. உலக அளவில் மிகவும் அதிக அளவில் பாதிக்கப்பட்ட 5 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் 10 லட்சம் நபர்களுக்கு தொற்று ஏற்படுவோர் எண்ணிக்கையானது (538) மிகக் குறைவாகவும் அதேபோன்று 10 லட்சம் நபர்களுக்கு மரணம் ஏற்படும் எண்ணிக்கை (15) மிகக் குறைவாகவும் இருப்பது தெரிய வருகிறது. இவற்றின் சர்வதேச சராசரி எண்ணிக்கை என்பது தொற்றைப் பொறுத்தளவில் 1453 எனவும் இறப்பைப் பொறுத்தளவில் 68.7 எனவும் இருக்கிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 8 மாநிலங்களில் (மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, கர்னாடகம், தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்) மட்டுமே சுமார் 90 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர். அதேபோன்று 49 மாவட்டங்களில் மட்டுமே 80 சத தொற்றுள்ளவர்கள் உள்ளனர். இதுவரை ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 6 மாநிலங்களில் (மஹாராஷ்டிரா, தில்லி, குஜராத், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், மற்றும் மேற்குவங்கம்) ஏற்பட்ட மொத்த இறப்பு 86 சதம் ஆகும். மொத்த இறப்புகளில் 80 சத இறப்பு 32 மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளது. தொற்றுள்ளோரில் இறப்பு ஏற்படும் விகிதம் அதிகம் உள்ள பிராந்தியங்களில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர்கள் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் உள்ள கோவிட்-19 சுகாதார பராமரிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பேசும் போது இன்றைய தேதியில் 3,77,737 தனிமைப்படுக்கைகள், (ஐசியூ வசதி இல்லாமல்), 39,820 ஐசியூ படுக்கைகள், 20,047 வென்ட்டிலேட்டர்களுடன் 1,42,415 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் 3,914 மருத்துவமனைகளில் உள்ளன என்று அமைச்சர்களின் குழுவிற்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுகாதாரப் பராமரிப்பை பொறுத்தளவில் இதுவரை ஒட்டுமொத்தமாக 213.55 லட்சம் என்95 முகக்கவசங்கள், 120.94 லட்சம் பிபிஇ-க்கள் மற்றும் 612.57 லட்சம் ஹெச்.சி.கியூ மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வு 2.0 காலகட்டத்தில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் விதித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளுக்கு ஏற்ப கட்டுப்பாட்டு மண்டலங்களை பிரிப்பது உள்ளிட்ட தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கு தீவிர கவனம் செலுத்தும் வகையில் எதிர்கால நடவடிக்கைகள் இருக்கும். கட்டுப்பாட்டு மண்டலங்களை வலைத்தளங்களில் அறிவித்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களின் சுற்றளவை தீவிரமாகக் கண்காணித்தல் மற்றும் அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டுமே நடமாட்டத்தை அனுமதித்தல், தீவிரமாக தொடர்பு தடம் அறிதல், வீடு வீடாக ஆய்வு செய்தல் / கண்காணித்தல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ள புதிய தொற்றாளர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பஃபர் மண்டலங்களை அடையாளம் காணுதல் ஆகியனவும் எதிர்கால நடவடிக்கைகளில் தீவிர கவனம் பெறும்.
மத்திய அரசு மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஆகியவை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு பொதுசுகாதார நிபுணர்களைக் கொண்ட குழுவினர் தொடர்ச்சியாக வருகை புரிகின்றனர். இந்தக் குழுவினர் தொற்றை கட்டுப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மிகத் திறம்பட மேற்கொள்ள மாநிலங்களுக்கு உதவியாக இருக்கின்றனர். அமைச்சரவை செயலாளர் தலைமையில் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களோடு காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் கலந்துரையாடலில் தொற்றைத் தடுத்தல், பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், இறப்பைக் குறைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.
நாம் முன்னேறிச் செல்லும் போது நமது கவனம் கோவிட்-19 நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார். தீவிரமான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு; பரிசோதனை வசதிகளை முழுமையாகப் பயன்படுத்துதல்; ஏற்கனவே நோய் இருப்பவர்கள் மற்றும் முதியவர்களை கண்காணித்தல்; ஆரோக்கிய சேது போன்ற டிஜிட்டல் உபகரணங்களை பயன்படுத்தி எங்கு ஹாட்ஸ்பாட் உருவாகும் என்று முன்கூட்டியே கணித்தல்; சிரமமில்லாமல் நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதை உறுதி செய்தல்; உள்கட்டமைப்பு வசதிகளை (தீவிர சிகிச்சைக்கான படுக்கைகள், ஆக்சிஜன், வென்ட்டிலேட்டர்கள் மற்றும் வாகனங்கள்) தயார் நிலையில் வைத்திருப்பதில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றின் மூலம் கோவிட்-19 நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து தொற்றுள்ளோரை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்தல் மற்றும் திறம்பட மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் மூலம் தொற்றாளர்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைப்பதும் அதை குறைவாகவே பராமரிப்பதுமே நமது நோக்கமாகும் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அதிகாரம் அளிக்கப்பட்ட குழு 8-ன் (தகவல், தொடர்பியல் மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு குறித்த குழு) தலைவர் திரு. அமித் காரே தகவல் தெரிவித்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் இந்தக் குழுவிடம் பொய்ச்செய்திகள் குறித்து 6,755 விசாரணைகள் வந்ததாகவும் அவற்றில் 5,890 விசாரணைகளுக்கு நேரடியாக பதில் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் 17 வெளிநாட்டு ஊடகச் செய்திகளுக்கு மறுப்புரை வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 98 தினசரி கோவிட்-19 செய்தி அறிக்கைகள், 92 ஊடகவியலாளர் சந்திப்புகள் மற்றும் 2,482 பத்திரிக்கைச் செய்திகள் ஆகியவற்றை வெளியிட இந்தக் குழு ஒருங்கிணைந்து செயலாற்றி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.
******
(Release ID: 1637554)
Visitor Counter : 299