நிதி அமைச்சகம்
பொருளாதாரத்தில் செலவினத்துக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 23 மத்திய பொதுத்டுறை நிறுவனங்களின் மூலதனச் செலவுகளை மீளாய்வு செய்யும் கூட்டத்தை நிதியமைச்சர் நடத்தினார்.
Posted On:
07 JUL 2020 7:12PM by PIB Chennai
மத்திய நிதி, நிறுவன உறவுகள் அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன், இன்று பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, மின்சாரம், நிலக்கரி, சுரங்கங்கள் ஆகிய அமைச்சகங்களின் செயலாளர்கள், அணுசக்தித் துறையின் செயலாளர் மற்றும் இந்த அமைச்சகங்களைச் சேர்ந்த 23 மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் தலைமை நிர்வாக இயக்குநர்களுடன் காணொளிக் காட்சியின் வாயிலாக ஆலோசனை நடத்தினார். நாட்டில் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கத்துடன் பல்வேறு தரப்பினருடன் நிதியமைச்சர் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான ஆலோசனைக் கூட்டங்களின் ஒரு பகுதியாக இந்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது.
2019-20 நிதியாண்டில் 23 மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு (Central Public Sector Enterprises - CPSEs) நிர்ணயிக்கப்பட்டு இருந்த மூலதனச் செலவு (Capital expenditures - CAPEX) இலக்கு ரூ. 1,64,822 கோடியைத் தாண்டி ரூ.1,66,029 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதாவது செலவு 101 சதவீதம் ஆகும். 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவு ரூ.26,320 கோடி (16%) மற்றும் 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் சாதனை அளவு ரூ.20,202 கோடி (12%) ஆகும். 2020-21ஆம் நிதியாண்டுக்கான மூலதனச் செலவு இலக்கு ரூ.1,65,510 கோடி ஆகும்.
மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை மீளாய்வு செய்த போது நிதியமைச்சர் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் கொடுப்பதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மிக முக்கியமான பங்கினை ஆற்றியுள்ளன எனக் குறிப்பிட்டார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடையும் வகையில் சிறப்பாகச் செயல்படுமாறும் 2020-21 ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மூலதனத் தொகையை முறையாகவும், உரிய நேரத்திலும் செலவழிப்பதை உறுதி செய்யுமாறும் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களை அமைச்சர் ஊக்கப்படுத்தினார். கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரம் பெரிய அளவில் மீள்வதற்கு மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகள் மிக உதவியாக அமையும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
2020-21 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான மூலதன ஒதுக்கீட்டில் மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் 50 சதவீத அளவிற்கு மூலதனச் செலவு செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிக்குமாறும் அதற்கான செயல்திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறும் செயலாளர்களிடம் நிதியமைச்சர் கேட்டுக்கொண்டார். தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்காக அவற்றை பொருளாதார உறவுகள் துறை / பொதுத்துறை நிறுவனங்களுக்கான துறையின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார்.
தொழிலாளர்கள் கிடைப்பதில் உள்ள பிரச்சினை, இறக்குமதியில் காலதாமதம் என்பிசிஐஎல் மற்றும் என்எல்சி போன்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள தொகையை டிஸ்காம்கள் செலுத்துவதில் தாமதம் போன்ற கோவிட்-19 பெருந்தொற்று நெருக்கடியால் ஏற்பட்ட தடைகள் குறித்து அமைச்சகங்களும், மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் விவாதித்தன. அசாதாரணமான சூழலைச் சமாளிக்க அசாதாரணமான முயற்சிகள் தேவை என்பதை சுட்டிக்காட்டிய திருமதி. நிர்மலா சீத்தாராமன் நாம் சிறப்பாகச் செயல்படுவதோடு இந்தியப் பொருளாதாரம் சிறந்த பலன்களை அடைய உதவவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
*****
(Release ID: 1637086)
Visitor Counter : 183