மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு காலஅட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் வெளியிட்டார்.

Posted On: 07 JUL 2020 2:40PM by PIB Chennai

கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த பல்கலைக்கழக மானியக் நல்கைக் குழுவின் (University Grants Commission - UGC) திருத்தப்பட்ட வழிமுறைகளையும், கல்வியாண்டு கால அட்டவணையையும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் “நிஷாங்க்” புதுதில்லியில் 6 ஜுலை 2020அன்று மெய்நிகர் முறையில் வெளியிட்டார்.  மாணவர்களுடைய ஆரோக்கியம், பாதுகாப்பு, பாரபட்சமற்ற நிலை மற்றும் சமவாய்ப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரு.பொக்ரியால் தெரிவித்தார்.  அதே சமயம் சர்வதேச அளவில் மாணவர்களுடைய கல்வித்தரம், பணிவாய்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது என்பதும் மிக முக்கியமானது ஆகும்.  கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியான காலகட்டங்களில் கூட கற்பித்தல், கற்றல், தேர்வுகள், கல்வியாண்டு கால அட்டவணை முதலான பல்வேறு அம்சங்களில் யுஜிசி தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருவதை அமைச்சர் பாராட்டினார்.

ஏப்ரல் 2020இல் தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு கால அட்டவணை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு நிபுணர் குழு ஒன்றை பல்கலைக்கழக மானியக்குழு அமைத்திருந்தது.  அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் 29-4-2020 அன்று யுஜிசி தேர்வுகள் மற்றும் கல்வியாண்டு கால அட்டவணை குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.  வழிகாட்டி நெறிமுறைகளை மீண்டும் பரிசீலனை செய்து, கோவிட் தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கையானது மேலும் அதிகரித்துக் கொண்டு வரும் இந்தச் சூழலில் புதிய கல்வியாண்டுக்கான பருவத்தை தொடங்குதல் மற்றும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகளில் தேர்வுகள் மற்றும் சேர்க்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு நிபுணர் குழுவை யுஜிசி கேட்டுக் கொண்டது.

6-7-2020 அன்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவானது, நிபுணர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு ”கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் குறித்த யுஜிசியின் திருத்தப்பட்ட வழிமுறைகள் மற்றும் கல்வியாண்டு காலஅட்டவணை” ஆகியவற்றை அங்கீகரித்துள்ளது. 

வழிகாட்டி நெறிமுறைகளின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன:

· இந்தியாவில் தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் சூழலின் அடிப்படையில் மாணவர்களின் ஆரோக்கியம். பாதுகாப்பு, பாரபட்சமற்றநிலை, நியாயம் மற்றும் சமவாய்ப்பு ஆகியவற்றை பாதுகாப்பது மிக முக்கியமானதாகும்.  அதே சமயம் சர்வதேச அளவில் மாணவர்களுடைய கல்வித்தரம், பணிவாய்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது என்பதும் மிக முக்கியமானது. எந்தவொரு கல்வி அமைப்பிலும் மாணவர்கள் கற்றுக் கொண்டதை மதிப்பீடு செய்வது என்பது மிக மிக முக்கியமான மைல் கல்லாகும்.  தேர்வில் வெற்றி பெறுவது என்பது மாணவர்களுக்கு நம்பிக்கையையும் திருப்தியையும் அளிக்கிறது.  சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்வதற்குத் தேவையான தகுதிறன், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை தேர்வு முடிவுகள் தான் தருகின்றன.

· இறுதிப்பருவம் / இறுதியாண்டுத் தேர்வுகளைப் பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்கள் செப்டம்பர் 2020 இறுதிக்குள் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்தது (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் நடத்தும்.

· இறுதிப்பருவம் / இறுதியாண்டு மாணவர்கள் முந்தையப் பருவத் தேர்வுகளின் பாடங்களில் தேர்ச்சி பெறாமல் இருந்தால் சூழலுக்கு ஏற்பவும், சாத்தியங்களின் அடிப்படையிலும் ஆஃப்லைன் (பேனா மற்றும் பேப்பர்) / ஆன்லைன் / இரண்டும் கலந்த (ஆன்லைன் + ஆஃப்லைன்) முறையில் தேர்வு நடத்தியே மதிப்பீடு செய்ய வேண்டும். 

· இறுதிப்பருவம் / இறுதியாண்டு மாணவர் ஒருவர் பல்கலைக்கழகம் நடத்தும் தேர்வை ஏதோவொரு காரணத்தால் எழுத முடியாமல் போனால் அந்த மாணவர் பாதகமான நிலைமைக்கு ஆளாகாமல் இருக்கும் வகையில் அந்தப் படிப்பு / தேர்வுத்தாளை பல்கலைக்கழகம் நடத்துகின்ற சிறப்புத் தேர்வின் போது எழுதுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இந்தச் சலுகையானது தற்போதைய கல்வியாண்டு பருவத்திற்கு 2019-20 மட்டுமே ஒரு முறை சலுகையாக செல்லுபடியாகும்.  

· இடையில் உள்ள பருவங்கள் / ஆண்டுத் தேர்வுகள் தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் ஏற்கனவே 29-4-2020 அன்று அறிவிக்கப்பட்டபடி மாற்றம் இல்லாமல் அப்படியே தொடரும். 

· 29 ஏப்ரல் 2020 அன்று வெளியிட்டுள்ள முந்தைய வழிகாட்டி நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை, தேவைப்பட்டால் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களது சேர்க்கைகள் மற்றும் கல்வியாண்டு அட்டவணை என்ற தலைப்பில் விவரமாக தனிப்பட வெளியிட்டுக் கொள்ளலாம். 

29 ஏப்ரல் 2020 அன்று வெளியிடப்பட்ட யுஜிசி வழிகாட்டி நெறிமுறைகளைப் பார்க்க https://static.pib.gov.in/WriteReadData/userfiles/UGC%20Guidelines%20on%20Examinations%20and%20Academic%20Calendar.pdf என்பதில் கிளிக் செய்யவும்.

 

******



(Release ID: 1637013) Visitor Counter : 216