உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருவரும் 250 ஐசியூ படுக்கைகளுடன் கூடிய 1000 படுக்கை வசதிகள் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட்-19 மருத்துவமனையைப் பார்வையிட்டனர்
Posted On:
05 JUL 2020 7:33PM by PIB Chennai
தில்லி கண்டோன்ட்மன்ட் பகுதியில் உள்ள 250 ஐசியூ படுக்கைகளுடன் கூடிய 1000 படுக்கை வசதிகள் கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் கோவிட்-19 மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இருவரும் பார்வையிட்டனர். இந்த மருத்துவமனை மக்கள் நல்வாழ்வுக்கான மோடி அரசின் பொறுப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. மக்கள் நல்வாழ்வுக்கான உந்துதலை முன்னெடுக்கவும், கோவிட்-19 நோய்த்தொற்றை இல்லாமல் ஆக்கவும் அதிக அளவில் நோயாளிகளை குணப்படுத்தி காப்பாற்றவும் இந்த மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டிஆர்டிஓ, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இராணுவம் மற்றும் டாட்டா சன்ஸ் நிறுவனம் ஆகியன இணைந்து இந்த மருத்துவமனையை ஒரு சாதனையாக 12 நாட்களில் உருவாக்கி உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா இந்த தருணத்தின் போது சவால் மிகுந்த இந்த காலகட்டத்தில் தில்லி மக்களுக்கு உதவ வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி முழுமையான பொறுப்புணர்வுடன் உள்ளார் என்று தெரிவித்தார். அதனை வெளிப்படுத்தும் விதமாக இந்த கோவிட் மருத்துவமனையானது அமைந்துள்ளது. “இந்த நெருக்கடியான தருணத்தில், முனைப்புடன் இந்த நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக மருத்துவமனையை உருவாக்கிய டிஆர்டிஓ,டாட்டாஸ் மற்றும் நமது இராணுவப் படையின் மருத்துவ பணியாளரகளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்ததன், உள்துறை இணையமைச்சர் திரு. ஜி.கிஷண் ரெட்டி, டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கேஜரிவால் மற்றும் டிஆர்டிஓ தலைவர் திரு ஜி.சதீஷ் ரெட்டி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மோடி அரசாங்கத்தின் முயற்சியால் 1000 படுக்கை கொண்ட இந்த சர்தார் படேல் கோவிட் மருத்துவமனை குறுகிய காலத்தில் சாதனையாக உருவாக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் தற்போது கோவிட்-19 தொற்றுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதோடு மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகின்ற நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கோவிட்-19 நோயாளிகளுக்காக தற்போது டெல்லியில் உள்ள மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசரத் தேவை குறித்து உள்துறை அமைச்சகமும் பாதுகாப்புத்துறை அமைச்சகமும் இணைந்து 14 நாட்களுக்குள் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்குவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதித்திருந்தனர். மருத்துவமனையை உருவாக்குமாறு டிஆர்டிஓ-விடம் கேட்கப்பட்டது. மருத்துவமனையை இராணுவ மருத்துவச் சேவைகளைச் சேர்ந்த (AFMS) மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை பணியாளர்களைக் கொண்ட மருத்துவக்குழுவானது நிர்வகிக்கும். மருத்துவமனைக்கான இதர வசதிகளை டிஆர்டிஓ செய்யும். இதனோடு கூடுதலாக நோயாளிகளின் மனநலத்தைப் பராமரிக்க டிஆர்டிஓ நிர்வகிக்கும் பிரத்யேக உளவியல் ஆலோசனை மையமும் மருத்துவமனயில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கும் கோவிட்-19 நோயாளிகள் இங்கு சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். ஆபத்தானககட்டத்தில் உள்ள நோயாளிகள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவார்கள்.
12 நாட்களில் உருவாக்கப்பட்ட மருத்துவமனையானது 5 ஜுலை 2020ல் இருந்து செயல்படும். இந்த மருத்துவமனையை உருவாக்கியது என்பது தில்லியில் கூடுதலாக 11 சதவிகிதம் கோவிட்-19 படுக்கைகளை அதிகரித்து உள்ளதோடு, தற்போதைய நெருக்கடியான சூழலை சமாளிக்கவும் உதவும்.
(Release ID: 1636761)
Visitor Counter : 275