மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நீட், ஜேஇஇ புதிய தேர்வு தேதிகள்: மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அறிவிப்பு.

Posted On: 03 JUL 2020 8:51PM by PIB Chennai

தேசிய அளவில் மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி ஆகியவற்றுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கான புதிய தேதிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ்குமார் போக்ரியால் நிஷாங்க் இன்று (ஜூலை 3) அறிவித்தார்.

ஆன்லைன் வழியாக மாணவர்களிடம் பேசிய  அவர், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும், தரமான கல்வியை உறுதி செய்யவும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுரைப்படி தேர்வுகளைத் தள்ளி வைக்க தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) முடிவெடுத்துள்ளதுஎன்றார்.

இதன் படி, ஜேஇஇ (JEE) முதன்மைத் தேர்வு (Mains) வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில் நடைபெறும். முதன்மைத் தேர்வு (Advance) செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறும். நீட் (NEET) தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும்.

அமைச்சர் மேலும் பேசியதாவது:

தற்போது தொற்று பரவியுள்ள சூழ்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி நலம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. தொற்றினால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தேர்வுகள் நடத்தப்படும் போது, உள்துறை மற்றும் மக்கள்நல்வாழ்வு அமைச்சகங்களின் வழிகாட்டு நெறிகளைக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கிறோம்.

தேர்வு நடத்தப்படும் மையங்களில் தனிநபர் இடைவெளி உறுதியாகக் கடைப்பிடிக்கப்படும். அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தங்களது மனத்தில் எந்த வித மன அழுத்தமும் கொள்ளாமல், படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தேசியத் தேர்வு முகமை (NTA) அனைத்து மாணவர்களுக்கும் இதற்காகத் தனியாக தேர்வு செயலியை உருவாக்கியுள்ளது. மாணவர்கள் அதைப் பதிவிறக்கம் செய்து, உரிய வகையில் தங்களது தயாரிப்பை மேற்கொள்ளலாம்.

மாணவர்கள் அனைவரும் சிறந்த வகையில் தேர்வு எழுத மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அமைச்சர் கூறினர்.

*****



(Release ID: 1636393) Visitor Counter : 158