உள்துறை அமைச்சகம்

நாட்டில் பருவமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய முக்கிய ஆற்றுப்படுகைகளில் வெள்ள நிலவர முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் உயர்மட்டக் கூட்டத்தில் ஆய்வு.

Posted On: 03 JUL 2020 8:02PM by PIB Chennai

மத்தியஉள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா இன்று உயர்மட்டக் கூட்டம் ஒன்றை புதுதில்லியில் நடத்தினார். நாட்டில் பருவமழை காரணமாக வெள்ளம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ள முக்கிய ஆற்றுப்படுகைகளில், அதனைச் சமாளிக்கும் வகையில் முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். வெள்ள அபாயத்தைக் குறைக்கவும், உயிருக்கும் உடைமைகளுக்கும் ஏற்படும் சேதத்தைக் குறைக்கவும் சிறப்பான திட்டத்தை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு திரு.ஷா உத்தரவிட்டார்.     

வெள்ளம் குறித்த முன்னறிவிப்பு, நாட்டின்முக்கிய மழைப்பிடிப்பு மண்டலங்கள்/பகுதிகளில் வெள்ளமட்டம் உயர்வு பற்றி அறிவிக்க நிரந்தரமான முறையை ஏற்படுத்துவதற்கு முகமைகளுக்கு இடையில் சிறப்பான ஒருங்கிணைப்பு அவசியம் என மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.

பீகார், உத்தரப்பிரதேசம், வடகிழக்கு மாநிலங்களில் வழக்கமாக ஏற்படும் வெள்ளப்பாதிப்பு பிரச்சினைகளுக்கு நிரந்தரத்தீர்வு அளிக்க முன்னுரிமைப் பகுதிகளில் செயல்திட்டங்களை மேற்கொள்ளவேண்டும் என திரு.ஷா வலியுறுத்தினார்.

வெள்ளத்தடுப்பு நடவடிக்கையாக, சரியான நேரத்தில் தண்ணீரைத் திறந்து விடும் வகையில், முக்கிய அணைகளில் நீர்இருப்பு நிலவரம் குறித்த தரவுகளை மதிப்பிடுமாறு ஜல்சக்தி அமைச்சகம், மத்திய நீர்ஆணையம் ஆகியவற்றுக்கு மத்திய உள்துறை அமைச்சர் உத்தரவிட்டார்.

நீர்வளம், நதிமேம்பாடு, கங்கை புத்துயிரூட்டல் துறைச்செயலர், வீடியோ மூலம் விளக்கவுரை நிகழ்த்தினார். நாட்டில் ஏற்பட்ட பெருவெள்ளம் பற்றிய தகவல்கள் அதில் இடம்பெற்றன. அணைகள் மேலாண்மை, நீர்த்தேக்கங்கள், நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், வெள்ளப்பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அமைப்பு நடவடிக்கைகள், வெள்ளப் பாதிப்பு மண்டலங்கள், வெள்ள முன்னறிவிப்பு, கங்கை, பிரம்மபுத்ரா படுகைகளில் வெள்ளப் பாதிப்பைக் குறைப்பது போன்ற அமைப்பு சாரா நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கினார். தேசிய பேரிடர் மீட்புப்படை, இந்திய வானிலைத் துறை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் படக்காட்சிகள் மூலம் விளக்கங்களை அளித்தனர்.

இந்தியாவில் மொத்தம் 40 மில்லியன் ஹெக்டேர் பரப்பு வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகும். இதில், கங்கை, பிரம்மபுத்ரா படுகைகள் முக்கிய வெள்ளப்பாதிப்பு பகுதிகளாகும். அசாம், பீகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் ஆகியவை பாதிப்புக்குள்ளாகும் மாநிலங்கள் ஆகும்.

வெள்ளத்தின் சீற்றத்தால் பயிர்கள், உடைமைகள், வாழ்வாதாரம், விலைமதிப்பற்ற குடிமக்களின் உயிரிழப்பு என லட்சக்கணக்கான மக்களின் பாதிப்பைக் குறைக்க நீண்டகால அடிப்படையிலான முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு.நித்யானந்தராய் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் முகமைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

*****



 https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image00140PA.jpg

 


 


(Release ID: 1636392)