அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 பாதிப்புகள், சுயசார்பு இந்தியாவை அடைய வேண்டியதன் அவசியத்தை தெளிவாக உணர்த்தியுள்ளதாக டாக்டர் ரகுநாத் மஷேல்கர் தெரிவித்துள்ளார்

Posted On: 03 JUL 2020 2:12PM by PIB Chennai

சுயசார்பு இந்தியாவை அடைவதற்காக, நாட்டிலுள்ள ஒவ்வொருவரும், நமக்கு நாமே மீண்டும் கட்டியெழுப்பவும், மீட்டெடுக்கவும்,  மீண்டும் கற்பனை செய்ய வேண்டியதன் அவசியத்தை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளதாக பத்ம விபூஷன் டாக்டர் ரகுநாத் ஆனந்த் மஷேல்கர் தெரிவித்துள்ளார்.   

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் கவுன்சிலின் கோடைகால ஆராய்ச்சி பயிற்சித் திட்டத்தின்கீழ், வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த,  “தன்னம்பிக்கையுடன் சுயசார்பு இந்தியாவை உருவாக்குவோம்“ என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார்.   

தன்னம்பிக்கை  அல்லது சுயசார்பு இந்தியா என்ற நிலையை அடைய வேண்டும் என்ற நமது குறிக்கோளில்,  உலகிலிருந்து நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்றும், சர்வதேச விநியோகச் சங்கிலியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் டாக்டர் மஷேல்கர் குறிப்பிட்டார்.  சுயசார்பு இந்தியாவை உருவாக்க, வாங்குதல், தயாரித்தல்,  தயாரிப்பை மேம்படுத்த வாங்குதல்,  வாங்குவதை அதிகரிக்க சிறந்தவற்றைத் தயாரித்தல்,  மற்றும் ஒருங்கிணைந்து தயாரித்தல் (அரசு-தனியார் ஒத்துழைப்புகளை உருவாக்குதல்) ஆகிய அம்சங்கள்,  5 தூண்களாகக் கருதப்படுகின்றன என்றார்.  நாட்டின் இளைஞர் சக்தி மீது அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிய அவர், அந்த இளைஞர் சக்தியை, நம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப பின்னணியுடன் கூர்மைப்படுத்தி, நாட்டை செழிப்புறச் செய்ய வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். 

இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம் என்பது, உதிரிப்பாகங்களை ஒருங்கிணைப்பதாக மட்டும் அமைந்துவிடாமல்,  இந்தியாவிலேயே புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பதாகவும் அமைய வேண்டும் என டாக்டர் மஷேல்கர் தெரிவித்தார்.   உதிரிப்பாகங்களை இணைத்து  பொருட்களைத் தயாரிப்பது வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றாலும்,  அது ஒரு மாற்றாக அமைந்துவிடாது என்றும்,  ஆராய்ச்சிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்வது அவசியம் என்றும் தெரிவித்தார்.  ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர்,  ஆராய்ச்சிக்காக செலவிடப்படும் பணம், அறிவாற்றலாக மாறுவதுடன்,  புதிய கண்டுபிடிப்புகள் அறிவாற்றலை பணமாக மாற்றும் என்பதால்,  நாடு வளம்பெற இரண்டையும் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.  நம்மிடம் திறமையும், தொழில்நுட்பத் திறனும் இருப்பதாகக் கூறிய அவர்,  நமது திறமைகள் மீது நாம் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

                                                                 *****


(Release ID: 1636158) Visitor Counter : 183