குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

எம்.எஸ்.எம்.இ.கள் தடைகளை உடைத்து சாம்பியன்களாக மாறுவதற்கான பாதையைக் காட்டுகிறது எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம்

Posted On: 26 JUN 2020 5:34PM by PIB Chennai

வரலாற்று முக்கியத்துவமான, துணிச்சலான முன்முயற்சியாக மற்றும் தடம் பதிக்கும் முடிவாக, மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.) அமைச்சகம், எம்.எஸ்.எம்.இ.களுக்குப் பதிவு செய்தல் மற்றும் வகைப்படுத்தலுக்கான வழிகாட்டுதல்கள் குறித்து ஒருங்கிணைந்த அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது. முதலீடு மற்றும் விற்றுமுதல் அடிப்படையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வகைப்படுத்துவதற்கான புதிய வரையறை குறித்து 2020 ஜூன் 1 ஆம் தேதி இந்த அமைச்சகம் ஓர் அறிவிக்கையை வெளியிட்டது நினைவுகூரத்தக்கது. அது 2020 ஜூலை 1 -இல் இருந்து அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, அடுத்த மாதத்தில் இருந்து புதிய நடைமுறைகளை அமல் செய்வதற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதற்காக, ஆலோசனைக் குழு, வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரி, மாநில அரசுகளின் அதிகாரிகள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்கள் உள்ளிட்ட இதில் தொடர்புடையவர்களுடன் ஜூன் மாதத்தில் இந்த அமைச்சகம் தொடர்ச்சியான ஆலோசனைகள் மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் 2020 ஜூன் 26-ல் விரிவான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

  • குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வகைப்படுத்த விரிவான வரையறைகளை இந்த அறிவிக்கை அளிக்கிறது. பதிவு செய்வதற்கான நடைமுறை மற்றும் இதற்காக அமைச்சகம் மேற்கொள்ளும் ஏற்பாடுகள் குறித்தும் இதில் விரிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வகைப்படுத்தல் அல்லது பதிவு தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகள் மீதும் மேலதிகாரம் கொண்டதாக  இது இருக்கும் என்பது இந்த அறிவிக்கையின் முக்கியமான மற்றொரு அம்சமாகும். இப்போது தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வகைப்படுத்தல் அல்லது பதிவு தொடர்பான விஷயங்களுக்கு இந்த அறிவிக்கையை மட்டும் மேற்கோள் காட்டினால் போதும்.
  • இனிமேற்கொண்டு, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உத்யம் (UDYAM) என்று அழைக்கப்படும். இது தொழில்நிறுவனம் என்ற வார்த்தைக்கு மிக நெருக்கமானதாக உள்ளது. அதற்கேற்ப பதிவு நடைமுறை உத்யம் பதிவு என கூறப்படும்.
  • தடம் பதிக்கும் மற்றொரு வரலாற்று முக்கியத்துவமான முடிவாக, பின்வரும் அறிவிக்கையை அமைச்சகம் வெளியிட்டுள்ளது :

சுய அறிவிக்கை அடிப்படையில் ஆன்லைன் மூலமாக உத்யம் பதிவுக்கு விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள், சான்றுகள் அல்லது ஆதாரங்கள் போன்ற எதையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

  • வருமான வரி, சரக்கு மற்றும் சேவை வரியுடன் முழுமையாக ஒருங்கிணைந்ததாக உத்யம் பதிவுக்கான நடைமுறைகள் இருப்பதால் இது சாத்தியமாகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆன்லைனில் நிரப்பும் தகவல்கள் பான் (PAN) எண் அல்லது GSTIN விவரங்களின் அடிப்படையில் சரிபார்க்கப்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அறிவிக்கையின் மற்ற முக்கிய அம்சங்களில் அடங்குபவை:

  • ஆதார் எண் அடிப்படையில் மட்டும் ஒரு நிறுவனத்துக்குப் பதிவு செய்யலாம். மற்ற விவரங்களை சுய அறிவிக்கை அடிப்படையில் அளிக்கலாம். எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க அல்லது பதிவேற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. எனவே, உண்மையிலேயே காகிதம் இல்லாத நடைமுறையாக உள்ளது;
  • ஏற்கெனவே அறிவிக்கை செய்துள்ளதைப் போல, `உற்பத்தி நிலையம் மற்றும் இயந்திரங்கள் அல்லது சாதனங்களில்' செய்யப்படும் முதலீடு மற்றும் `விற்றுமுதல்' ஆகியவை தான் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வகைப்படுத்தலுக்கு இப்போது அடிப்படை வரையறையாக இருக்கும்;
  • குறு, சிறு அல்லது நடுத்தர தொழில் நிறுவனம் என்ற பாகுபாடு இல்லாமல், எந்த நிறுவனமாக இருந்தாலும், விற்றுமுதல் கணக்கிடும்போது பொருள்கள் அல்லது சேவைகள் அல்லது இரண்டின் ஏற்றுமதிகளும் அதில் சேர்க்கப்படாது என்று இந்த அறிவிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.;
  • பதிவு நடைமுறைகளை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் செய்து கொள்ளலாம். இந்தப் புதிய நடைமுறை அமலுக்கு வரும் 2020 ஜூலை 1 ஆம் தேதியில் இந்த இணையதளம் பொது பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்.
  • குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான வசதிகளை செய்து தருவதற்கு வலுவான நடைமுறை ஒன்றை முதன்முறையாக எம்.எஸ்.எம்.இ. அமைச்சகம் உருவாக்கியுள்ளது. மாவட்ட மற்றும் பிராந்திய அளவில் ஒற்றைச்சாளர நடைமுறை வகையில் இது செய்யப்படும். ஏதாவது ஒரு காரணத்தால் உத்யம் பதிவு செய்ய முடியாமல் போகும் தொழில்முனைவோருக்கு இது உதவிகரமாக இருக்கும். மாவட்ட அளவில், தொழில்முனைவோருக்கு வசதிகள் அளிக்கும் பொறுப்பு மாவட்ட தொழில் மையங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சாம்பியன்கள் கட்டுப்பாட்டு அறைகள் என்ற அமைச்சகத்தின் சமீபத்திய முன்முயற்சி, இதுபோன்ற தொழில்முனைவோருக்கு பதிவு மற்றும் அதற்குப் பிந்தைய சேவை அளிப்பதில் சட்டபூர்வப் பொறுப்பாளியாக ஆக்கப்பட்டுள்ளது.
  • செல்லத்தக்க ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் பதிவுக்கான கோரிக்கை அல்லது அடையாளம், வங்கிக் கனக்குப் புத்தகப் புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமத்துடன் ஒற்றைச் சாளர நடைமுறையை அணுகலாம். ஆதார் எண் பெற்ற பிறகு, அவர்களுக்குப் பதிவு செய்வதற்கு ஒற்றைச் சாளர நடைமுறையில் வசதி செய்து தரப்படும்.

 

புதிய வழிகாட்டுதல்களை இன்று வெளியிட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, எம்.எஸ்.எம்.இ.கள் வகைப்படுத்தல், பதிவு செய்தல் மற்றும் வசதி ஏற்படுத்துதலுக்கான புதிய நடைமுறை, மிகவும் எளிமையாகவும், அதே சமயத்தில் விரைந்து செயல்படுவதாகவும், தடங்கல்கள் அற்றதாகவும், உலக அளவில் சிறப்பான செயல் முறையாகவும், தொழில் செய்வதை எளிமையாக்குவதை நோக்கிய முயற்சியில் புரட்சிகரமான நடவடிக்கையாகவும் இருக்கும் என்று கூறினார். இந்த காலக்கட்டத்தில் ஏராளமான சவால்களை எதிர்கொண்டிருக்கும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்குப் பக்க பலமாக அமைச்சகம் உள்ளது என்ற பலமான உறுதியை அளிப்பதாக இந்த நடவடிக்கைகளும், செயல் திட்டங்களும் இருக்கும் என்று அவர் கூறினார்.

 

 

****


(Release ID: 1634998) Visitor Counter : 302