உள்துறை அமைச்சகம்
தில்லியில் கோவிட்-19ஐ கட்டுப்படுத்த, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமையில், ஜுன் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு.
முடிவுகள் அனைத்தும் சுமூகமாகவும், குறித்த காலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், தில்லியில் கோவிட்-19ஐ கட்டுப்படுத்துவதற்கான திட்டமும் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது .
தில்லியில் கோவிட்-19 பெருமளவு பரவியுள்ள இடங்கள் உட்பட, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மறுவரையறை செய்யும் பணி, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா நிர்ணயித்த காலக்கெடுவான ஜுன் 26-க்குள் நிறைவடையும்
மத்திய உள்துறை அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தில்லியில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களைக் கணக்கெடுக்கும் பணி, தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் மற்றும் தில்லி அரசால் ஜுன் 27 அன்று கூட்டாகத் தொடங்கும்
Posted On:
26 JUN 2020 4:10PM by PIB Chennai
தில்லியில் கோவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா தலைமையில், ஜுன் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் செயல்படுத்தப்படுவது குறித்து, மத்திய உள்துறை செயலாளர் ஜுன் 25 அன்று ஆய்வு செய்தார். நிதிஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால், எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத் தலைமை இயக்குநர் டாக்டர் பல்ராம் பார்கவா மற்றும் தில்லி அரசின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மத்திய உள்துறை செயலாளர் நடத்திய இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது, முடிவுகள் அனைத்தும் சுமூகமாகவும், குறித்த காலத்திலும் நடைபெற்று வருவது தெரியவந்ததுடன், தில்லியில் கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்கான செயல்திட்டமும் இறுதி செய்யப்பட்டது. கோவிட்-19 தொடர்பான பணிகளை மேற்கொள்ள மாவட்ட அளவிலான குழுக்களும் அமைக்கப்பட்டன.
தில்லியில் கோவிட்-19 பரவியுள்ள அனைத்துப் பகுதிகளிலும், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களை மறுவரையறை செய்யும் பணி, மத்திய உள்துறை அமைச்சர் நிர்ணயித்த காலக்கெடுவான ஜுன் 26-க்குள் நிறைவடையும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வீடு வீடாகச் சென்று சோதனை செய்யும் பணியும் ஜுன் 30-க்குள் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா-வின் வழிகாட்டுதலுக்கேற்ப, தில்லியில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதுடன், இந்தப் பணியை தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் மற்றும் தில்லி அரசு இணைந்து மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பு ஜுன் 27 தொடங்கும் எனவும், இதற்கான பயிற்சி, சம்பந்தப்பட்ட கணக்கெடுப்பு பணியாளர்களுக்கு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.
மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில், எதிர்காலத்தில் கோவிட்-19 பரவுவதைக் கண்டறிய ஆரோக்கிய சேது மற்றும் இதிஹாஸ் செயலிகளைப் பயன்படுத்துவதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த இரு செயலிகளையும் கூட்டாகப் பயன்படுத்துவது குறித்து, தில்லி அரசின் மாவட்ட அளவிலான குழுக்களுக்கு, தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தால் நேற்று பயிற்சியளிக்கப்பட்டது.
*****
(Release ID: 1634990)
Visitor Counter : 175