சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தில்லியில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு

Posted On: 27 JUN 2020 11:01AM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. தேசியத் தலைநகர் தில்லி பிராந்தியத்தில், கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி,, பராமரிப்பதற்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) பரிசோதனை கருவிகளை வழங்கியுள்ளது. தில்லியில் இதுவரை, 4.7 லட்சம் ஆர்டி-பிசிஆர் சோதனைகள், அங்கு இயங்கும் 12 சோதனைக் கூடங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்குத் தேவையான 1.57 லட்சம் ஆர்என்ஏ கண்டறியும் உபகரணங்களையும் அது வழங்கியுள்ளது. 2.84 லட்சம் விடிஎம்கள் (தொற்று கடத்தும் ஊடகம்), மாதிரிகள் சேகரிக்கப் பயன்படும் சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. திடீரென அதிக அளவில் கோவிட் பரவல் இருப்பதைத் தொடர்ந்து, ஆன்டிஜன் அடிப்படையிலான துரித சோதனைகளுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. மேலும், கோவிட் வெகு வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையிலான, இத்தகைய சோதனை செய்யும் கருவிகள் 50 ஆயிரத்தை தில்லி அரசுக்கு அது வழங்கியுள்ளது. இந்தச் சோதனைக் கருவிகள் அனைத்தையும் ஐசிஎம்ஆர் தில்லி அரசுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய நோய்த் தடுப்பு மையம், தில்லி அரசுக்கு தொழில்நுட்ப வழிகாட்டுதல் மூலம், கோவிட்-19 கண்காணிப்பு மற்றும் மீட்பு உத்திகளின் அனைத்து அம்சங்களிலும் ஆதரவு அளித்துள்ளது.

தேசிய நோய்த் தடுப்பு மையம் தில்லி முழுவதும் 2020 ஜூன் 27 முதல் ஜூலை 10-ஆம் தேதி வரை ஊநீரியல் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது. உடலில் ஆன்டி-பாடிஸ் எனப்படும் பிறபொருளெதிரிகள் உள்ளனவா என்பதைக் கண்டறியும் சோதனை, 20,000 பேரின் ரத்த மாதிரிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மத்திய அரசு தன் சொந்த முயற்சியில் கொள்முதல் செய்த 11.11 லட்சம் என்95 முகக்கவசங்கள், 6.81 லட்சம் பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு அங்கிகள், 44.80 லட்சம் ஹைடிராக்சி குளோரோ குவின் மாத்திரைகளை தில்லிக்கு வழங்கியுள்ளது. தில்லிக்கு 425 வென்டிலேட்டர்களும் ஒதுக்கப்பட்டு, அவை தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.

தில்லியில் கோவிட்-19 நோய்க்கென 34 பிரத்யேக மருத்துவமனைகள், 4 பிரத்யேக கோவிட் சுகாதார மையங்கள், 24 பிரத்யேக கோவிட் மையங்கள் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துக் கண்காணித்து வருகின்றன. இதன்படி, மொத்தம் 62 மருத்துவ வசதி கொண்ட அமைப்புகள், தில்லியில் கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த வசதிகள் தினசரி அடிப்படையில் அதிகரிக்கப்பட்டு வருகிறது.


(Release ID: 1634720) Visitor Counter : 225