மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசியத் தேர்வுப் பயிற்சி அலைபேசிச் செயலியில் ஹிந்தி மொழியில் மாதிரித் தேர்வுகளை எழுதுவதற்கான அம்சங்களை தேசியத் தேர்வு முகமை அறிமுகப்படுத்தியுள்ளது

Posted On: 21 JUN 2020 3:31PM by PIB Chennai

தேசியத் தேர்வுகள் முகமை (National Testing Agency - NTA), தேசியத் தேர்வுப் பயிற்சி அலைபேசி செயலியில் ஹிந்தி மொழியிலான தேர்வுகளையும் நடத்தத் துவங்கியுள்ளது என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் இன்று அறிவித்தார். போட்டித் தேர்வுகளை ஹிந்தி மொழியில் எழுதும் மாணவர்கள், இனி தங்கள் அலைபேசி மூலமாகவே தேசியத் தேர்வுப் பயிற்சி அலைபேசி செயலியில் அளிக்கப்படும் மாதிரிப் போட்டித் தேர்வுகளை ஹிந்தி மொழியிலேயே பயிற்சி செய்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

 

JEE, NEET நீட் போன்ற போட்டிகளுக்கான தேர்வுகளை நடத்தும், தேசியத் தேர்வுகள் முகமை செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் செயலி ஒன்றை சென்ற மாதம் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் JEE மெயின் தேர்வுகள், நீட் தேர்வுகள் போன்ற போட்டித்தேர்வுகளை எழுதும் பொறியியல் மருத்துவத் துறை மாணவர்கள், இந்தச் செயலியின் துணையுடன் தங்கள் அலைபேசிகள் மூலமே தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ள முடியும். இதுவரை 16.5 லட்சம் மாதிரித் தேர்வுகளை, இந்தச் செயலி மூலம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்தச் செயலியை 9.56 லட்சம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்

 

போட்டித் தேர்வுகளை ஹிந்தி மொழியில் எழுத விரும்பும் மாணவர்கள், தாங்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதற்காக ஹிந்தி மொழியிலும் மாதிரித் தேர்வுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.தனைக் கருத்தில் கொண்டு, தேசியத் தேர்வுகள் முகமையின் அலைபேசி செயலியில் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் இப்போது ஹிந்தி மொழியில் தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், மாதிரித் தேர்வுகளை ஹிந்தி மொழியிலேயே எழுதிப் பயிற்சி பெற முடியும். முதல் மொழி ஆங்கிலமாக இல்லாத மாணவர்களும், ஹிந்தி மொழியின் மூலம் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு இந்த அம்சம் ஒரு வரப்பிரசாதமாகும். இது மேலும் பல மாணவர்களால் போட்டித் தேர்வுகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்பது உறுதி.

 

ஏற்கனவே இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்த மாணவர்கள், ஹிந்தி மொழியில் உள்ள மாதிரித் தேர்வுகளை உடனேயே எழுதிப் பயிற்சி பெறத் துவங்கலாம். செயலியை இதுவரை பதிவிறக்கம் செய்யாத மாணவர்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து கட்டணம் ஏதுமின்றி இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தச் செயலியை உபயோகிப்பதற்கான முறை, அறிவுரை, தேர்வை எப்படி எழுத வேண்டும் என்பன போன்ற பல விவரங்களையும் இந்தச் செயலி ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் வழங்குகிறது.

 

*****(Release ID: 1633202) Visitor Counter : 163