திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் 96,000-க்கும் மேற்பட்டோருக்கு யோகா பயிற்றுநர்கள், பயிற்சியாளர்களாக பயிற்சி

Posted On: 20 JUN 2020 7:06PM by PIB Chennai

மனஅழுத்தத்தைப் போக்கவும், முழுமையான உடல் மற்றும் மனநலனுக்காகவும் யோகாவை ஊக்குவிக்கும் வகையில், 6-வது சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதற்காக காணொளிக் கருத்தரங்கை திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் ஏற்பாடு செய்தது. அழகு மற்றும் உடல்நலன் பிரிவு திறன் கவுன்சிலின், “யோகா-வை ஆதரியுங்கள், நோயை விரட்டுங்கள்” என்ற கருத்துரு அடிப்படையில் காணொளிக் கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், யோகா கல்வி நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் ஹன்சாஜி யோகேந்திரா, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில், அச்ச உணர்வு மற்றும் மன அழுத்தத்தைப் போக்குவதில் யோகாவின் பங்கு குறித்து மக்களிடம் எடுத்துரைத்ததுடன், யோகா துறையில் இளைஞர்களுக்கு உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் கற்பிக்கப்பட்டது. யோகா துறையில் உள்ள பல்வேறு வேலைவாய்ப்புகளையும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக திறன் இந்தியா அமைப்பு தொடர் முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக, நாடு முழுவதும் 96,196-க்கும் மேற்பட்டோருக்கு பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், முன் கூட்டிய கற்றலுக்கு தொடக்க அங்கீகாரம் (primarily Recognition of Prior Learning - RPL), குறுகியகாலப் பயிற்சி (STT) மற்றும் சிறப்புத் திட்டங்களின் மூலம் யோகா பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களாக செயல்பட பயிற்சி அளிக்கப்பட்டது. யோகா-வுக்கு மூன்று விதமான சிறப்புப் பாடப் பிரிவுகள் உள்ளன. அதாவது, யோகா பயிற்றுநர் (NSQF 4), யோகா பயிற்சியாளர் (5-வது மட்டம்) மற்றும் முதுநிலை யோகா பயிற்சியாளர் (6-வது மட்டம்). அமைச்சகமும், அழகு மற்றும் உடல்நலன் பிரிவு திறன் கவுன்சிலும் இணைந்து இந்த அற்புதமான மைல் கல்லை அடைவதற்கு வாழும் கலை, பதஞ்சலி ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்த கூட்டாளிகளாக செயல்பட்டன. அதிக எண்ணிக்கையிலான திறன்பெற்றவர்களைக் கொண்ட மாநிலங்களாக உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒடிசா, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவை உள்ளன. 2020-21-ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு முதல் யோகா தொழில்கல்வி வகுப்புகளை அழகு மற்றும் உடல்நலன் பிரிவு திறன் கவுன்சில் நடத்த உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் உள்ள அனைவருக்கும் கல்வித் திட்டப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு யோகா பயிற்றுநர் பணிகள் உள்ளன.

நாட்டில் யோகா பயிற்றுநர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் தேவை குறித்து எடுத்துரைத்த மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் டாக்டர் மகேந்திர நாத் பாண்டே, உலகுக்கு அழகு மற்றும் உடல்நலன் பிரிவு திறன் கவுன்சில் வழங்கிய மதிப்பில்லாத பரிசாக யோகா திகழ்கிறது என்று தெரிவித்தார். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் செயல்பாட்டு அமைப்பான தேசியத் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் உள்ள, அழகு மற்றும் உடல்நலப் பிரிவு திறன் கவுன்சில், யோகா பணிக்கான திறன் பெற்றவர்களை கண்டறிவதற்காக பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறது. CIDESCO இன்டர்நேஷனல், வொயிட் லோட்டஸ் போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச யோகா கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. இந்திய இளைஞர்களிடையே யோகா திறனை மேம்படுத்த டாக்டர் ஹெச்.ஆர்.நாகேந்திரா, டாக்டர் ஹன்சாஜி ஆகியோர் முன்னிலையில், தி யோகா இன்ஸ்டிடியூட்டுடன் அழகு மற்றும் உடல்நலன் பிரிவு திறன் கவுன்சில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

*******


 


(Release ID: 1633141) Visitor Counter : 218