பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

தனியார் மருத்துவர்களிடமிருந்து கோவிட் தொற்று குறித்த தகவல்களை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேட்டறிந்தார்.

Posted On: 19 JUN 2020 7:24PM by PIB Chennai

நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவர்களிடமிருந்து கோவிட் தொற்று குறித்த தகவல்களை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (வெள்ளிக்கிழமை, ஜூன் 19) கேட்டறிந்தார்.

 

ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இணையவழிக் கருத்தரங்கில் சென்னை, புது தில்லி, மும்பை, நாக்பூர், பாட்னா, கோடா, ஈரோடு ஆகிய நகரங்களைச் சேர்ந்த தனியார் மருத்துவர்கள், மருத்துவ வல்லுநர்கள் மத்திய அமைச்சருடன் கலந்துரையாடினர். அப்போது, கோவிட் குறித்த தகவல்களை மருத்துவ நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர்.

கூட்டத்திற்குத் தலைமை வகித்த டாக்டர் ஜிதேந்திர சிங் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போர்க்கால அடிப்படையில், இந்திய மருத்துவர்களும் நிபுணர்களும் அரும்பாடுபட்டு வருவதையும், தக்க தருணத்தில் உரிய வகையில் செயல்பட்டதையும் பாராட்டினார். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவில் உள்ள மருத்துவத் துறையினரும் சுகாதாரக் காப்பீட்டுக் கட்டமைப்பும் குறுகிய காலத்தில் தக்க வகையில் செயல்பட்டு தங்களது திறனையும் ஆற்றலையும் உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர். சமுதாயத்திற்கு தங்களது கடமைகளை உரிய வகையில் ஆற்றியுள்ளனர்.

மருத்துவ மேலாண்மையில் அதிதிறன் கொண்ட நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வருவதற்கு முன்பே 1970, 1980ஆம் ஆண்டுகள் வரையில் மருந்துகள் இல்லாமல் தூய்மை, சுகாதாரம் ஆகிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்திய மருத்துவர்கள் இத்தகைய தொற்று மற்றும் பரவக்கூடிய நோய்களைக் கையாள்வதில் மேலைநாட்டு மருத்துவர்களை விட  சிறந்து விளங்குகின்றனர்.

இந்த இணையவழிக் கருத்தரங்குக்கு நெறியாளராக தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் . முருகானந்தம் இருந்தார். அவர் பேசுகையில், ஆரோக்கியசேது குறித்து பரவலாகத் தெரிவிக்கப்பட வேண்டும். அதைப் போல், நோய்த் தடுப்பில் இந்திய வழிமுறைகளைப் பிரபலப்படுத்த வேண்டும். இந்தியாவில், குறிப்பாகத் தென்னகத்தில் உள்ள மருத்துவமனைகளில் கடைப்பிடிக்கப்படும் இந்திய மருத்துவக் காப்பீட்டு முறைக்கு ஊக்கம் அளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசுகையில், தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தற்போது கவனம் செலுத்த வேண்டியது நமது முன்னே உள்ள சவால். அத்துடன் எல்லாக் காலத்திலும் நோய்த்தொற்றை எதிர்கொள்ளத் தயார்நிலையும் தேவை என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்நிலையல், சிறப்பு மிக்க தனித்தன்மை கொண்ட ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றைச் சுட்டிக் காட்டிய அமைச்சர், இதை விரிவுபடுத்துவது குறித்தும், அனைத்தையும் உள்ளடக்கியதாக்குவது குறித்தும் சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு மருத்துவ நிபுணர்கள் தனியார் மருத்துவத் துறையில் ஒழுங்குமுறைகளைத் தளர்த்தலாம் என யோசனை கூறினர். அதைப் போல் உரிமம் பெறாத மருத்துவர்களையும் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று வலியுறுத்தினர். தேவையில்லாத சில நடைமுறைகளைக் கைவிடலாம் என்றும் அதன் மூலம் இளைய மருத்துவர்கள் தனியார்-அரசு கூட்டில் அமைந்த மருத்துவ கிளினிக்குகளை அமைக்க இளைய மருத்துவர்களுக்கு ஊக்கம் அளிக்கலாம் என்றும் யோசனை கூறினர்.


(Release ID: 1633104) Visitor Counter : 209