வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
தெருவோர வியாபாரிகளுக்கான சிறப்பு நுண்கடன் வசதி திட்டம் துவக்கம். தற்சார்பு இந்தியாவிற்கான முயற்சி
Posted On:
19 JUN 2020 1:07PM by PIB Chennai
பிரதமரின் தெருவோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமர் ஸ்வநிதி) திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரிகளுக்கு சிறப்பு நுண் கடன் வசதி அளிப்பதற்காக - இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகமையாக இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று புது தில்லியில், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) ஆகியவை கையெழுத்திட்டன. அமைச்சகத்தின் சார்பில் அமைச்சகத்தின் துணைச் செயலர் திரு சஞ்சய்குமார், சிட்பியின் துணை நிர்வாக இயக்குனர் திரு. வி.சத்திய வெங்கட்ராவ், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கான இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு. ஹர்தீப் எஸ் பூரியின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பிரதமர் ஸ்வநிதி திட்டத்தை சிட்பி நடைமுறைப்படுத்தும். கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு, குறு மற்றும் சிறு தொழில்களுக்கான கடன் உறுதி நிதி அமைப்பின் (CGTMSE) மூலமாக கடன் உறுதி ஏற்பாடு செய்வதையும் இந்த வங்கி நிர்வகிக்கும். வங்கி, துவக்கம் முதல் இறுதி வரையிலான அனைத்து சேவைகளையும் வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த இணையதளத்தையும் உருவாக்கி, பராமரிக்கும்..ஆவணங்களைப் பதிவு செய்வது முதல் அனைத்து வழிமுறைகளுக்குமான தளமாக இது இருக்கும். இதற்கான அலைபேசி செயலி ஒன்றையும் வங்கி உருவாக்கும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், கடன் வழங்கும் அமைப்புகள், டிஜிட்டல் பணப்பட்டுவாடா அமைப்புகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து தகவல்களும் கிடைக்கும் வண்ணம், இந்த இணையதளமும், செயலியும் உருவாக்கப்படும்.
அட்டவணை இடப்பட்ட வர்த்தக வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், நுண்கடன் நிதி வழங்கும் அமைப்புகள் கூட்டுறவு வங்கிகள், சிறு நிதி வங்கிகள், மண்டல கிராமப்புற வங்கிகள் போன்ற அனைத்து கடன் வழங்கும் அமைப்புகளும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் சிட்பி வங்கி இணைந்து செயல்படும்.
பயிற்சி அளித்தல், திறன் வளர்ப்பு, திட்ட நிர்வாகம், இணைய தள நிர்வாகம், தகவல் கல்வி, தகவல் தொடர்பு, வங்கி சார் நடவடிக்கைகள், வங்கி சாரா நிதிநிறுவன அமைப்பு பணிகள், நுண்கடன் வழங்கு நிறுவனங்கள் ஆகியவை தொடர்பான நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக, அந்தந்தத் துறைசார்ந்த நிபுணர்கள் கொண்ட திட்ட மேலாண்மை அமைப்பையும் சிட்பி ஏற்படுத்தும். இந்த அமைப்பு, பிரதமர் ஸ்வநிதி திட்டம் செயல்படுத்தப்படும் காலம் வரை - அதாவது மார்ச் 2022 வரை செயல்படும்.
------
(Release ID: 1632707)
Visitor Counter : 313
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam