நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்

‘ஒரு நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தை செயல்படுத்தாத 14 மாநிலங்கள் , யூனியன் பிரதேசங்களில் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து திரு. ராம்விலாஸ் பாஸ்வான் காணொளிக் காட்சி மூலம் மாநில, யூனியன் பிரதேச உணவு அமைச்சர்களுடன் ஆலோசனை

Posted On: 18 JUN 2020 7:01PM by PIB Chennai

மத்திய உணவு, நுகர்வோர் நலன், பொது விநியோகத்துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் இன்று காணொளிக் காட்சி மூலம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் ‘’ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’’ என்னும் தேசியக் குடும்ப அட்டை மாறுதல் திட்டத்தின் அமலாக்க முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ‘’ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’’  திட்டத்தை எஞ்சிய 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அமல்படுத்துவதற்கான தற்காலிக கால அவகாசம், செயல்திட்டங்கள், தயார்நிலை ஆகியவை பற்றி தெரிந்து கொள்வதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். தமிழகம், அசாம், சத்தீஷ்கர், தில்லி, மேகாலயா ஆகிய ஐந்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். மற்ற மாநிலங்களின் உணவுத்துறை செயலர்கள் இதில் பங்கேற்றனர்.

கொவிட்-19 தொற்றுப் பரவல் நேரத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தேவைப்படுவோர், தங்களுக்கான உணவு தானியங்களைப் பெற்றுக் கொள்வதற்கு ‘’ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’’ திட்டம், பெரும் பயனுள்ளதாக அமைந்தது என திரு. பாஸ்வான் கூறினார். 2020 ஆகஸ்ட் மாதத்திற்குள், உத்தரகாண்ட், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங்கள் இந்த தேசியத் தொகுப்பில் சேரவுள்ளதாக அவர் கூறினார். இந்த ஆண்டுக்குள் எஞ்சிய மாநில்ங்களையும் இந்தத் திட்டத்தில் சேர்க்க தமது துறை தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார். போதுமான உணவு தானியங்கள் கையிருப்பில் உள்ளதாகவும், கொவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கலான காலத்தில் யாரும் உணவின்றி இருக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாகவும் திரு. பாஸ்வான் கூறினார். இதற்கிடையில், பிரதமர் ஏழைகள் நல்வாழ்வுத் திட்டத்தின் கீழ், மேலும் மூன்று மாதங்களுக்கு இலவச உணவு தானிய விநியோகத்தை நீட்டிக்குமாறு 10 மாநிலங்கள் அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருப்பதாக திரு. பாஸ்வான் தெரிவித்தார்.

மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சர் திரு. ராவ் சாகிப் பாட்டில் தன்வே-யும் , எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ‘’ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’’ திட்டத்தை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். கொவிட்-19 முடக்கக் காலத்தில், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’’ திட்டத்தின் பயனாக ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஒதுக்கீட்டு உணவு தானியங்களைப் பெற முடிந்தது என்று அவர் கூறினார்

திரு.பாஸ்வான் தமது நிறைவுக் கருத்தாக, நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும், பயனாளிகள் தங்களுக்கு உரிய மானிய விலை உணவு தானியங்களைப் பெறுவதற்கு வசதியாக, எஞ்சிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பயோமெட்ரிக் போன்ற அங்கீகார முறைகளை நடைமுறைப்படுத்துவதை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.

-----



(Release ID: 1632513) Visitor Counter : 191