ரெயில்வே அமைச்சகம்

உலகின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்று எனக் கருதப்படும் உதவி எஞ்சின் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான பணியாளர் சேர்க்கையை இந்திய ரயில்வே வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது

Posted On: 18 JUN 2020 1:19PM by PIB Chennai

உலகின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் ஒன்று எனக் கருதப்படும் பாதுகாப்பு மற்றும் இயக்கப் பணியிடங்களுக்கான ழியர்கள் சேர்க்கை செயல்முறைகளை நிறைவு செய்து ரயில்வே அமைச்சகம் வெற்றிகரமாக இப்பணியை முடித்துள்ளது. உதவி எஞ்சின் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பாளர் பதவி இடங்களுகு 03.02.2018 முதல் 31.03.2018 வரையிலான காலத்தில் எழுந்த ஒருங்கிணைந்த காலியிடங்கள் 64,371க்கு மத்திய வேலைவாய்ப்பு அறிவிக்கை எண் 01/2018 மூலம் ரயில்வே வாரியம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றது. மொத்தம் 47,45,176 ஆன்லைன் விண்ணப்பங்கள்  கிடைக்கப்பெற்றன.

 

பணியாளர் தேர்வு முறை 3 கட்டங்களைக் கொண்டது. கணிணி அடிப்படையிலான தேர்வு, மருத்துவப் பரிசோதனை (எஞ்சின் ஓட்டுநருக்கான தூரப் பார்வை, வண்ணங்கள் அறியும் பார்வை மற்றும் உஷார் நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டால் இது மிகக் கடுமையான மருத்துவப் பரிசோதனையாகும்.) மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவை இவை. சுமார் 47.45 லட்சம் பேர் இந்தப் பணியிடங்களுக்குப் பதிவு செய்திருந்தனர்.

64,371 பணியிடங்களில் 56,378-க்கு தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் (உதவி எஞ்சின் ஓட்டுனர்கள் 26,968 மற்றும் தொழில்நுட்பாளர்கள் 28,410) பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 40,420 விண்ணப்பதாரர்களுக்கு (உதவி எஞ்சின் ஓட்டுனர்கள் 22,223 மற்றும் தொழில்நுட்பாளர்கள் 18,197) பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 19,120 உதவி எஞ்சின் ஓட்டுனர்கள், 8,997 தொழில்நுட்பாளர்கள் ஆகியோருக்கு, கோவிட் 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தளர்வு செய்யப்பட்டவுடன், பயிற்சி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கும். உதவி எஞ்சின் ஓட்டுனர்களுக்கு 17 வார காலமும் தொழில்நுட்பாளர்களுக்கு 6 மாத காலமும் பயிற்சி வழங்கப்படும்.

முழு அடைப்புக்கு முன்னரே பணியில் சேருவதற்கான உத்தரவுகள் வழங்கப் பட்டுவிட்டன. எனினும் இந்த ஆணை பெற்ற சிலர் கொரோனா தொற்று காரணமாகவும் அதனைத் தொடர்ந்த முழு அடைப்பு காரணமாகவும் பணியில் சேரவில்லை.

 

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் உரிய நடைமுறையின்படி கட்டம் கட்டமாக பணி நியமனம் செய்யப்படுவார்கள். புதிய பணியாளர்களுக்கு பயிற்சி மிகவும் அவசியம். ஏனெனில் ரயில்வேத்துறை செயல்பாட்டு அடிப்படை அமைப்பாகும். ரயில் இயக்கத்தில் பாதுகாப்பு அம்சம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. பயிற்சியில், வகுப்பறைப்பாடம், களப்பயிற்சி, மற்றும் திறன் சோதனை ஆகியவற்றுக்குப் பின்னரே நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. பயிற்சிக்கான வகுப்பறை வசதிகள், தங்குமிட வசதி, நூலக வசதி, பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட
பணியாளர்களுக்கு பல்வேறு குழுக்களாக பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி ஆதாரங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படும் வகையில், பயிற்சி குழுக்கள் பகுக்கப்படுகின்றன.

 

கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டிய காரணத்தாலும், தொற்றைத் தடுப்பதற்காகவும் அனைத்து பயிற்சிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் பயிற்சிகள் மீண்டும் தொடங்கும்.

 

******



(Release ID: 1632324) Visitor Counter : 256