சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
உரிமை கோரியவர்களுக்கு சமரசத் தீர்வு முறையில் விரைவில் தீர்வுகாண இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை
Posted On:
17 JUN 2020 5:15PM by PIB Chennai
தேசிய நெடுஞ்சாலைத்துறையில் நிலுவையில் உள்ள உரிமை கோரல்களுக்கு சமரச முறையில் விரைந்து தீர்வு காண்பதன் மூலம், பொறுப்புகளைக் குறைக்கும் விதமாக, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கென, தலா மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரமான நிபுணர்கள் அடங்கிய மூன்று சமரசத் தீர்வுக் குழுக்களை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதிகள், பொது நிர்வாகவியல் மூத்த வல்லுநர்கள், நிதித்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் தலைமையில் இந்த சமரசக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2015-ஆம் ஆண்டு சமரசத்தீர்வுச் சட்டம் மற்றும் இச்சட்டத்தில் 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் படி, அனைத்து சமரச முறையீடுகளுக்கும் 12 – 18 மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும். எனினும், இந்த முறையில் பல்வேறு நடைமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதால், 12 மாதங்களுக்குள் தீர்வு காண்பது மிகவும் குறைவாகவே உள்ளது. அதே வேளையில், கோரிக்கைகளுக்கு விரைவான முறையில், நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் தீர்வுகாண்பதை சமரசத் தீர்வுமுறை உறுதி செய்கிறது. சுதந்திரமான நிபுணர்கள் அடங்கிய சமரசக் குழுக்களிடம் முறையீடு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள், ஐந்து அமர்வுகளாகக் கூடி, ஒவ்வொரு கோரிக்கைக்கும், சமரச மற்றும் சுமூகத் தீர்வு காணப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக, 2015-ஆம் ஆண்டு மத்தியஸ்தம் மற்றும் சமரச (திருத்தச்) சட்டத்தின்படி, மிகுந்த ஆரோக்கியமான, மேலும் விரைவான முறையில், சமரசத் தீர்வை எட்டுவது என்பது, ஒரு நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்பு அல்லது நடுவர்மன்றத் தீர்ப்புக்கு இணையான சட்ட அங்கீகாரம் பெற்றதாகும்.
இதுவரை, சுதந்திரமான நிபுணர்கள் அடங்கிய சமரசக் குழுக்களிடம் வரப்பெற்ற ரூ.13,349 கோடி மதிப்பிலான 108 கோரிக்கைகளுக்கு, ரூ.3,743 கோடி அளவிற்கு வெற்றிகரமாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. அனைத்துக் கோரிக்கைகளுக்கும் சமரசத் தீர்வு முறையில் விரைந்து தீர்வுகாண இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடைமுறை, இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் சட்டப் பிரச்சினைகளைக் குறைப்பதோடு மட்டுமின்றி, முடங்கிக் கிடக்கும் பணம் விடுவிக்கப்படுவதன் வாயிலாக, தனியார் துறைக்கு புத்துயிரூட்டும் என கருதப்படுகிறது.
*****
(Release ID: 1632273)
Visitor Counter : 267