தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

மத்திய தொழிலாளர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சந்தாதாரர்களின் கோரிக்கைகளுக்கு விரைவான தீர்வு காணும் விதமாக, எந்த இடத்திலும் விண்ணப்பிக்கும் வசதியைத் தொடங்கியுள்ளது.

Posted On: 15 JUN 2020 5:42PM by PIB Chennai

நாடு முழுவதும் ஒரே சீரான சேவைத் தரத்தை உறுதிசெய்யும் விதமாகவும், கோவிட் -19 பெருந்தொற்று காலத்தில் பணியாளர்களின் சேவையை முழுமையாக பயன்படுத்தவும்,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான   இ.பி.எஃப்.ஓ. ,  எந்த இடத்திலும் வைப்புநிதியை திரும்பப்பெற விண்ணப்பிக்கும் வசதியை அன்மையில் தொடங்கியது.   இந்த வசதி, வைப்புநிதி அமைப்பின் எந்தவொரு  மண்டல அலுவலகத்திலும், சந்தாதாரர்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதித்திருப்பதன் மூலம்,  வைப்நி நிதி அலுவலக செயல்பாட்டில், பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.   வைப்புநிதி,  ஓய்வூதியம்,  பகுதி தொகையை திரும்பப்பெறுதல் மற்றும்  பணத்தை முழுமையாக திரும்பப்பெறுதல் மற்றும் கணக்கு மாற்றம் தொடர்பான  இணையவழி கோரிக்கைகளுக்கு,  இந்த புதிய வகை முன்முயற்சி மூலம் தீர்வு காணப்படும். 

 

கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் 135 மண்டல அலுவலகங்களின் செயல்பாடு, அவை செயல்படும் இடத்தில் நிலவும்  பாதிப்பு அடிப்படையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளது.   கோவிட் -19  பாதிப்பால்,  மும்பை,  தானே, ஹரியானா மற்றும் சென்னை மண்டலத்தின் பல்வேறு அலுவலககங்கள்,  மிக மிகக் குறைந்த அளவிலான பணியாளர்களுடன் செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.   அதேவேளையில், அன்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட  கோவிட் -19 முன்பணத் தொகையை பெற ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.  

 

வைப்புநிதித் தொகையை திரும்பப்பெறக்கோரி வரப்பெற்ற விண்ணப்பங்களை  நாடுதழுவிய அளவில் பரிசீலிக்கும்போது,  பணிச்சுமை குறைவதோடு,    தற்போது செயல்பாட்டில் உள்ள அந்தந்தப் பகுதி சார்ந்த கோரிக்கைகளுக்கு மட்டும் தீர்வு காண்பதற்குப் பதிலாக,  பல்வேறு இடங்களில் இந்தக் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாண புதிய நடைமுறை வழிவகை செய்யும் என கருதப்படுகிறது.   மேலும்,  குறைவான பணிச்சுமை உள்ள வைப்புநிதி அலுவலகங்கள்,  கோவிட் -19 கட்டுப்பாடுகள் காரணமாக, மனுக்கள் அதிகளவில் தேக்கமடைந்துள்ள அலுவலகங்களின் பணிச்சுமையை பகிர்ந்துகொள்ளவும் புதிய நடைமுறை உதவும்.    அத்துடன், நாடு முழுவதும் உள்ள அனைத்து மண்டல அலுவலகங்களிலும்,  தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பணியாளர்களை  தகுந்த முறையில் பயன்படுத்தி,  சந்தாதாரர்களின் கோரிக்கைகளக்கு விரைந்து தீர்வுகாணவும் இது உதவிகரமாக இருக்கும்.  

 

வைப்புநிதி சந்தாதாரர்களின் வாழ்க்கை நடைமுறை அனுபவங்களை எளிதாக்குவதற்கான இந்த முன்முயற்சி,  குறிப்பிட்ட காலத்தில் சாதனை படைத்துள்ளது.   இந்தத் திட்டத்தின் கீழ்,  முதற்கட்டமாக, பல்வேறு மண்டல அலுவலகங்களுக்குட்பட்ட சந்ததாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது,  குருகிராம் மண்டல அலுவலகத்தில் 10 ஜுன் 2020 அன்று தீர்வு காணப்பட்டுள்ளது.    வைப்புநிதி அமைப்பின் எந்தவொரு அலுவலகத்திலும்,  பிற  எந்தப்பகுதியையும் சேர்ந்த சந்தாதாரர்களின் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வசதி,  தொழிலாளர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.   தொழிலாளர்கள் நேரில் வராமலேயே,  வெளிப்படைத்தன்மை, செயல்துடிப்பு, போன்றவற்றுடன் கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடிய வகையிலான இந்த புதிய நடைமுறை, பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சிந்தனைக்கு செயல்வடிவம் அளித்து,  இணையவழி விண்ணப்பங்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும்  வகை செய்துள்ளது. 

 

கோவிட் -19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள்,  தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகங்களின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள போதிலும்,  அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடமையாற்றுதல் மற்றும் பல்வேறு புதுமைகளை புகுத்தியதன் காரணமாக,   1 ஏப்ரல் 2020 முதல் இதுவரை,  80,000 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, ஒவ்வொரு வேலை நாளிலும்,  ரூ.270 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.    எந்தவொரு அலுவலகத்திலும் விண்ணப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியதன் மூலம், 6 கோடிக்கு மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, சமூக பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான சேவையில் புதிய சாதனையைப் படைக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.  

                                                     *****



(Release ID: 1631760) Visitor Counter : 264