விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண்காடு வளர்ப்போரை தொழில்துறையுடன் இணைப்பதற்காக இணையதளக் கருத்தரங்கு
Posted On:
15 JUN 2020 1:20PM by PIB Chennai
வேளாண்காடு வளர்ப்போரை தொழில்துறையினருடன் இணைப்பதற்கான வழிவகைகளை விவாதிப்பதற்காகவும், சரியான பயிரினங்களை தேர்ந்தெடுப்பதற்கு இந்த விவசாயிகளுக்கு மாநிலங்கள் உதவ வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், இம்மாதம் 13-ம் தேதியன்று இணையதள கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய வேளாண் கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் செயலர் திரு சஞ்சய் அகர்வால், இதனைத் துவக்கி வைத்துப் பேசினார். விவசாயிகளுக்கு அதிக வருவாய் கிடைப்பதற்காக வேளாண் துறையில் கொண்டுவரப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்தங்கள் பற்றி அவர் எடுத்துரைத்தார். மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகத் தடைகளை அகற்றி, தமது சந்தையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை விவசாயிகளுக்கு அளிப்பதற்காகவும், வேளாண் விளைபொருட்களை மின்னணு வர்த்தக முறையில் விற்பனை செய்வதற்காகவும், வேளாண் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வணிக (மேம்பாடு மற்றும் வசதி) அவசரச் சட்டம் 2020 மற்றும் ரூ.1.63 லட்சம் கோடி செலவிலான திட்டம் குறித்தும் அவர் விளக்கினார். விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நாட்டுப் பண்ணைகள் மூலம் வாழ்வாதாரம், பசுந்தீவனம், பருப்பு வகைகளைப் பயிரிடுவதன் மூலம் உரத்தேவையைக் குறைப்பது, கார்பன் அளவைக் கட்டுப்படுத்தி பருவநிலை மாற்றத்தை சரி்செய்வது உள்ளிட்ட, வேளாண்காடுகளால் ஏற்படும் பல்வேறு பயன்களை திரு சஞ்சய் விவரித்தார்.
இந்தத் தொடரில் இது முதலாவது இணையதளக் கருத்தரங்காகும். தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் ஜெ எல் என் சாஸ்திரி, இந்திய பேப்பர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைமைச் செயலர் திரு ரோஹித் பண்டிட், ஐடிசி நிறுவனத்தின் முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் எச் கே குல்கர்னி, மத்திய பட்டு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், உறுப்பினர் செயலருமான திரு ரஞ்சித் ரஞ்சன் ஓகன்டியார் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் முக்கிய உரையாற்றினர்.
-----
(Release ID: 1631664)
Visitor Counter : 274
Read this release in:
Bengali
,
English
,
Urdu
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Telugu
,
Malayalam