சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
குறைந்தபட்ச ஆதரவு விலை குறைக்கப்படும் என வெளியான செய்திக்கு திரு. நிதின் கட்கரி மறுப்பு.
प्रविष्टि तिथि:
13 JUN 2020 4:59PM by PIB Chennai
உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தாம் கூறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இத்தகைய செய்திகள் தவறானவை மட்டுமல்லாமல் விஷமத்தனமானவை என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக திரு.கட்கரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தாம் எப்போதும், நெல், கோதுமை, கரும்பு போன்ற பயிர்களுக்கு மாற்றுப் பயிர்களைப் பயிரிடுவது உள்ளிட்ட விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்கும் பல்வேறு வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்று உறுதியாக இருப்பதுடன், அதற்காக வலியுறுத்தியும் வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்ட போது, தாம் உடனிருந்ததாகவும், எனவே, அதைக் குறைக்க வேண்டும் என தாம் கூறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அமைச்சர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு சிறப்பான வருமானத்தை அளிக்க வேண்டும் என்பது எப்போதும் மத்திய அரசின் முன்னுரிமையாக இருந்துள்ளது என்று கூறியுள்ள அவர், அதே உணர்வுடன் தான் குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க, பயிர் சாகுபடி முறையை மாற்றும் வாய்ப்புகளைக் கண்டறிவது அவசியம் என அவர் மேலும் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக, இந்தியா சமையல் எண்ணெய் இறக்குமதிக்காக ரூ. 90,000 கோடி செலவிட்டு வருவதாகவும், அதனால், எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்தால், பிரகாசமான முன்னேற்றம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதேபோல, அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றிலிருந்து எத்தனால் தயாரிப்பது, விவசாயிகளுக்கு அதிக ஆதாயம் வழங்குவதுடன், இறக்குமதி செலவையும் வெகுவாகக் குறைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது தவிர, இத்தகைய உயிரி எரிபொருள்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை என்று திரு.கட்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.
(रिलीज़ आईडी: 1631413)
आगंतुक पटल : 282