விவசாயத்துறை அமைச்சகம்

தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் சஹாகர் மித்ரா: தொழில் பயிற்சித் திட்டத்தை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்.

Posted On: 12 JUN 2020 4:01PM by PIB Chennai

உள்ளூர்த் தயாரிப்புகளுக்குக் குரல் கொடுக்கும், பிரதமர் நரேந்திர மோடியின், ஆத்மநிர்பார் பாரத் (சுயசார்பு இந்தியா) அழைப்பின் பேரில், சஹாகர் மித்ரா:

 

தொழில் பயிற்சித் திட்டம் (Scheme on Internship Programme - SIP), மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமரால் நேற்று முன்தினம் தொடங்கி வைக்கப்பட்டது. திட்டத்தை தொடங்கி வைத்து, திரு தோமர் பேசுகையில், தனித்துவமான கூட்டுறவுத்துறை மேம்பாட்டுக்கான நிதி அமைப்பான, தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் (National Cooperative Development Corporation - NCDC), கூட்டுறவுத்துறையின் மேம்பாட்டுக்காக, புதிய தொழில்முனைவோர்கள் வளர்ச்சிக்கு உகந்த சூழலுக்கு, திறன் மேம்பாடு, இளைஞர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய தொழில் பயிற்சி மற்றும் இளம் கூட்டுறவாளர்களுக்கு ஸ்டார்ட் அப் திட்டத்தின் கீழ் உறுதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கான கடன் என பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

 

கூட்டுறவுத் துறைக்குப் புதுமையான தீர்வுகளை வழங்குவதில் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் தொடர் முயற்சியில், சஹாகர் மித்ரா: தொழில்பயிற்சி திட்டம் என்ற புதிய திட்டம், இளம் தொழில் நிபுணர்கள் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற உதவும். நடைமுறைத் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ள இந்தப் பயிற்சி அவர்களுக்கு உதவும். மேலும், ஸ்டார்ட் அப் கூட்டுறவு நிறுவனங்களை ஊக்குவிக்கவும் தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஒரு சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புகள் (Farmers Producers Organizations - FPO) போன்ற கூட்டுறவு நடவடிக்கைகள் மூலம், தலைமைப்பண்பு மற்றும் தொழில்முனைவோர்களாக ஆகச் சிறந்த கல்வி நிறுவனங்கள் மூலம் சஹாகர் மித்ராவில் பயிற்சி அளிக்கப்படும்.

 

இளம் நிபுணர்களின் புதிய மற்றும் புதுமையான ஆலோசனைகளை கூட்டுறவு நிறுவனங்கள் பெற சஹாகர் மி்த்ரா திட்டம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பயிற்சியாளர்கள் பணியிடத்தில் பெறும் பயிற்சியாளனது அவர்கள் தன்னம்பிக்கை பெற உதவுகிறது. இது இரு தரப்புக்கும் வெற்றி என்ற சூழ்நிலையை கூட்டுறவு நிறுவனங்களும், இளம் தொழில்நிபுணர்களுக்கும் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இத்திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் துணைப்பாடங்களான ஐ.டி உள்ளிட்டவற்றில் தொழில்துறை பட்டம் பெற்றவர்கள், இப்பயிற்சிக்கு தகுதியானவர்கள் ஆவார்கள். வேளாண் வர்த்தகம், கூட்டுறவு, நிதித்துறை, சர்வதேச வர்த்தகம், வனத்துறை, கிராமப்புற மேம்பாடு, திட்ட மேலாண்மை ஆகிய பாடத்தில் எம்.பி.. பட்டம் பெற்றவர்கள் அல்லது படிப்பை முடித்தவர்களும் இப்பயிற்சிக்குத் தகுதி பெற்றவர்கள் ஆவர்.

 

ஊக்கத்தொகையுடன் கூடிய சஹாகர் மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுபவர்களுக்கு 4 மாத காலத்துக்கு நிதியுதவி கிடைக்கும். இதற்கான நிதியை தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ஒதுக்கி உள்ளது. இந்தப் பயிற்சிக்காக தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் இணைய தளத்தில் ஆன்லைனில் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான இணையதளப் பிரிவையும் மத்தி்ய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.



(Release ID: 1631216) Visitor Counter : 309