வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்

மோடி 2.0 ஆட்சியில் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் ஓராண்டு சாதனைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டு அதன் மின்னணு பதிப்பையும் அறிமுகம் செய்து வைத்தார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.


வளர்ச்சி, கொரோனா மேலாண்மையில் வடகிழக்குப் பிராந்தியம் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது.

2019-20 ஆண்டில் 100 சதவீத செலவினத்தை எட்டியதற்காக வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்துக்கு டாக்டர் சிங் பாராட்டு.

Posted On: 06 JUN 2020 5:08PM by PIB Chennai

வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் ஓராண்டு கால சாதனைகள் குறித்த புத்தகத்தை, வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலக அமைச்சக இணையமைச்சர், பணியாளர் நிர்வாகம், பொது மக்கள், ஓய்வூதியர் குறைகள் தீர்வு, அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று வெளியிட்டு, அதன் மின்னணு பதிப்பையும் அறிமுகம் செய்து வைத்தார். வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஷில்லாங்கில் இருந்து காணொளிக் காட்சி மூலம் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் என்.இ.சி. செயலர் மற்றும் இதர மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image001EA8E.jpg

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், ஒன்றுக்கும் மேற்பட்ட வகைகளில் வட கிழக்குப் பிராந்தியம் முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது என்று கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளில் வளர்ச்சிக்கான வெற்றிகரமான முன்மாதிரியாக உருவெடுத்த பிறகு, கொரோனா மேலாண்மையிலும் அந்தப் பிராந்தியம் முன்மாதிரியாக உருவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இயல்பு நிலைக்குத் திரும்பி இருப்பதன் மூலம், நாட்டின் பிற பகுதிகளிலும் பின்பற்றத் தக்க வகையில் முன்மாதிரிகளை அந்தப் பிராந்தியம் உருவாக்கியுள்ளது என்றார் அவர். கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அரசில் வட கிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்குக் கிடைத்த முன்னுரிமையும், அரவணைப்பும் தான் இதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.

2019-20 ஆம் ஆண்டில் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சகம் 100 சதவீத செலவினங்களை எட்டியிருப்பதற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். சாலை, ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து வசதிகளால் தொடர்பு வசதிகள் ஏற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், அந்தப் பிராந்தியத்தில் மட்டுமின்றி, நாடு முழுக்க சரக்குகள் மற்றும் மக்கள் போக்குவரத்து மேம்பட்டிருப்பதாக அவர் கூறினார். இதுவரையில் அந்தப் பிராந்தியத்துக்கு, பார்சல் சேவைகளைத் தவிர, 400 டன்களுக்கும் மேற்பட்ட சரக்குகள் விமானம் மூலம் வந்திருப்பதாக அவர் தெரிவித்தார். கோவிட் பாதிப்புக்குப் பிந்தைய காலத்தில் மூங்கில் வளர்ப்புக்கு விசேஷ உத்வேகம் கிடைக்கும் என்றும், இளம் தொழில்முனைவோர் இதை பல்வேறு வகைகளில் பயன்படுத்துவதை பார்க்கப் போகிறோம் என்றும் அவர் கூறினார்.

https://static.pib.gov.in/WriteReadData/userfiles/image/image002QHA7.jpg

 

வடகிழக்குப் பிராந்தியம் கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் இதர துறைகளில் கடந்த ஓராண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஜி.பி.எஸ்.-சில் குறைந்தபட்சம் 10 சதவீதம் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சிக்கு ஒதுக்க வேண்டும் என்ற அரசின் கொள்கையால் ரூ.53,374 கோடி வடகிழக்கு மாநிலங்களுக்கு, 55 விலக்கு அல்லாத துறைகள் மூலம் ஆர்.இ. நிலையில் வழங்கப்பட்டுள்ளன. ஜிபிஎஸ். உடன் கூடுதலாக ரயில்வே துறை ரூ.4745 கோடி ஒதுக்கியுள்ளது. ஜி.பி.எஸ். கீழ் ஒதுக்கீடு கணிசமாக உயர்ந்து வருவது, வடகிழக்குப் பகுதி மீது மாண்புமிகு பிரதமர் அதிக கவனம் கொண்டிருப்பது தெரிய வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

வடகிழக்குப் பிராந்தியத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, தொடங்கப்பட்ட அல்லது முடிக்கப்பட்ட சில முக்கியத் திட்டங்கள் மற்றும் அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 

  1. அனைத்து எட்டு மாநிலங்களையும் உள்ளடக்கி 1656 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்திரதனுஷ் எரிவாயு தொகுப்புத் திட்டத்திற்கு ரூ. 9265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வடகிழக்குப் பிராந்தியத்துக்குத் தூய்மையான எரிசக்தியை அளித்து, மாசு ஏற்படுத்தாத தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு உதவும். வட கிழக்குப் பிராந்திய சுற்றுச்சூழலில் தூய்மையான அம்சத்தைப் பாதுகாப்பதில் இது பெருமளவுக்கு உதவுவதாக இருக்கும்.
  2. அருணாச்சலப் பிரதேசத்துக்கு இணைப்பு வசதி ஏற்படுத்தித் தரும் வகையில், பசுமைவெளி ஹோலோங்கி விமான நிலையத்துக்கான பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. ரூ.955.67 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் 2022 டிசம்பரில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  3. தெற்கு திரிபுரா மற்றும் வங்கதேசத்தில் சட்டோகிராம் துறைமுகத்துக்கு  இணைப்பு வசதியை ஏற்படுத்தித் தரும் பெலோனியா - சப்ரூம் (39.12 கிலோ மீட்டர்) ரயில் பாதை அமைக்கும் பணியை ரயில்வே நிறைவு செய்துள்ளது.  புதிய ஜல்பைகுரி - லும்டிங் திட்டத்தில் 25.05 கிலோ மீட்டர் நீளம் உள்ள ஹவாய்பூர் - லும்டிங் இரட்டிப்புப் பாதை திட்டமும் முடிக்கப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட புதிய திட்டங்களில் (i) ரூ.2042.51 கோடி மதிப்பீட்டில்  போங்கா்கானில் இருந்து ராங்கியா வழியாக அக்ஹிரி வரையில் பாதை இரட்டிப்பு (142 கிலோ மீட்டர்); (ii) முறையே ரூ.888 கோடி மற்றும் ரூ.3512 கோடி மதிப்பீட்டில் பிரம்மபுத்ரா மீது சராய்காட் மற்றும் தேஜ்பூர் சில்காட் பகுதிகளில் பாலங்கள் கட்டும் பணி; (iii) ரூ.2293 கோடி மதிப்பீட்டில் வட கிழக்குப் பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 2352 கிலோ மீட்டர் நீளம் அகல ரயில் பாதையை மின்சாரப் பாதையாக மாற்றுதல்.

  1. சாலைகள் துறையில், ரூ.7707.17 கோடி மதிப்பீட்டில் 536 கிலோமீட்டர் நீளத்துக்கான 35 தேசிய நெடுஞ்சாலைகள் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் 3 திட்டங்களின் பணிகள் (66 கிலோ மீட்டர் நீளம்) முடிக்கப்பட்டுள்ளன.
  2. கொல்கத்தா மற்றும் ஹால்டியா துறைமுகங்களில் இருந்து இந்திய-வங்கதேச புரொட்டோகால் (IBP) வழித்தடம் மற்றும் NW2 (பிரம்மபுத்ரா) வழியாக சரக்கு மற்றும் சரக்குப் பெட்டகங்களை அதிக அளவில் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. இந்த நீர் வழித்தடங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டதால், செலவுகள் பெருமளவுக்குக் குறையும். IBP வழித்தடம் வங்கதேசத்தில் ரூ.305.84 கோடி மதிப்பீட்டில் மேலும் மேம்படுத்தப்பட்டு வருகிறது
  3. 2020-21 மத்திய பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட கிரிஷி உடான் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. பைனாப்பிள், இஞ்சி, கிவி, ஆர்கானிக் விளைபொருள்கள் போன்ற வேளாண் விளைபொருள்கள் பக்டோரா, குவஹாட்டி மற்றும் அகர்தலா விமான நிலையங்களில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன
  4. அருணாச்சலப் பிரதேசத்தில் சுபான்சிரி நீர்மின் திட்டத்திற்கு இருந்த அனைத்துத் தடைகளும் (சட்ட, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல்) நீக்கப்பட்டுள்ளன. 2000 மெகாவாட் திறன் (2011இல் திட்டமிட்டபடி) உள்ள அந்தத் திட்டத்தின் பணி தொடங்கப்பட்டுள்ளது. 2023இல் இது நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஓராண்டில் இந்த அமைச்சகத்தின் செலவினங்கள் ரூ.2803 கோடியாக இருந்தது என்று தெரிவித்த மாண்புமிகு அமைச்சர், எந்த ஒரு ஆண்டிலும் விட இது அதிகபட்ச தொகை என்று குறிப்பிட்டார். 2019-20 நிதியாண்டில் அமைச்சகத்தின் செலவு ரூ.2670 கோடியை எட்டி, வட கிழக்குப் பிராந்தியத்துக்கான ஒதுக்கீட்டை 100 சதவீதம் செலவு செய்திருப்பதும், எந்தவொரு நிதியாண்டைக் காட்டிலும் அதிகபட்ச அளவு என்றார் அவர். குறிப்பிடத்தக்க மற்ற சாதனைகள் விவரம்:

  1. ரூ.2800 கோடி மதிப்பில் 215 எண்ணிக்கையிலான திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம்/ என்.இ.சி.யின் பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2286 கோடி மதிப்பில் 152 எண்ணிக்கையிலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  2. கோவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகள். நிதியமைச்சகம் அளித்த ரூ.7923.78 கோடி மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அளித்த ரூ.235.59 கோடி நிதி தவிர, MDoNER/NEC மூலம் கட்டுப்படுத்தல் இல்லாத ரூ.25 கோடி நிதியும் வழங்கப்பட்டுள்ளது. மிசோரம், மேகலயா, அருணாச்சலப்பிரதேசம் மற்றும் மணிப்பூரில் சுகாதாரக் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவதற்கு NESIDS மூலம் வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகம் ரூ.152.18 கோடி வழங்கியுள்ளது. அசாம் குவஹாட்டி, பூமிஹட் சிபிடிசி ஹாஸ்டல் பிளாக் மற்றும் புதுடெல்லி என்.இ.சி. இல்லம் என இரு இடங்களில் தனிமைப்படுத்தல் வசதிகள் அளிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.
  3. வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் NERLP மற்றும் NERCORMP வாழ்வாதார திட்டங்களின் கீழ் வடகிழக்குப் பிராந்தியத்தில் 6 மாநிலங்கள், 15 மாவட்டங்கள் பயன்பெறும். இதில் அந்தப் பிராந்தியத்தில் 4,12,644  குடும்பங்களுக்குப் பயன்கள் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ் 36561 சுய உதவிக் குழுக்கள், 1506 சுய உதவிக் குழு கூட்டமைப்புகள், 1599 சமுதாய வளர்ச்சி குழுக்கள், 2899 இயற்கை ஆதாரவள மேலாண்மைக் குழுக்கள் (NaRMG) மற்றும் 286 NaRMG சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
  4. வட கிழக்குப் பிராந்தியத்தில் எம்.எஸ்.எம்.இ., குறு நிதித்துறைகளை ஊக்குவிப்பதற்கு NEDFi மூலம், அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம்  2019 ஜூன் முதல் 2020 மே மாதம் வரையில் ரூ.47.02 கோடி தொகை அளிக்கப்பட்டுள்ளது. BFC-களின் மொத்தம் 539 தொழில்முனைவோர்களின் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு இது உதவிகரமாக அமைந்துள்ளது. 77 தொழில்முனைவோருக்கு கடன் தொடர்பு வசதி அளிக்கப்பட்டுள்ளது.
  5. மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் குவஹாட்டியில் நடைபெற்ற என்.இ.சி. உயர்நிலை கூட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை அமைச்சகமும், NEC, NEHHDC, CBTC போன்ற அதன் அமைப்புகளும் நடத்தியுள்ளன; வடகிழக்குப் பிராந்தியத்தில் சுற்றுலா, கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களை ஊக்குவிக்க உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மற்றும் பிகாரின் அருகில் உள்ள பகுதிகளில் வட கிழக்குப் பிராந்தியம் நோக்கிய பார்வை என்ற நிகழ்ச்சி;  அய்ஸ்வாலில் வடகிழக்கு கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி;  ஜம்மு காஷ்மீரில் பிரம்பு மற்றும் மூங்கில் பயிலரங்கம் மற்றும் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.

 

2019-20 காலத்தில் 100 சதவீத செலவினம் எட்டியதற்காக அமைச்சகத்தின் குழுவினருக்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். கோவிட்-19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவைப்படும் கட்டமைப்புகளை வடகிழக்கு மாநிலங்களில் உருவாக்க அமைச்சகம் மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார். மத்திய அமைச்சகங்கள் / துறைகளின் தலையீடுகள் தேவைப்படும் பல விஷயங்களில், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மத்திய அமைச்சகங்கள் / துறைகளுடன் ஒருங்கிணைப்பு செய்ததையும் அவர் பாராட்டினார். இதே செயல்வேகத்தை தொடர்ந்து பராமரித்து, சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

===============



(Release ID: 1629941) Visitor Counter : 258