நிலக்கரி அமைச்சகம்

கோல் இந்தியாவின் வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் 3 புதிய சுரங்கங்களைத் திறந்துள்ளது.


ஊழியர்களையும், தொடர்புடையவர்களையும் டிஜிட்டல் மூலம் இணைக்க சம்வாத் செயலி தொடக்கம்.

சுரங்க நடவடிக்கைகளை வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் கண்காணிக்கும்.

Posted On: 06 JUN 2020 3:15PM by PIB Chennai
கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான வெஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் (டபிள்யூசிஎல்) மகாராஷ்டிரா ,மத்தியப்பிரதேசத்தில் மூன்று புதிய நிலக்கரிச் சுரங்கங்களை இன்று தொடங்கியுள்ளது. இந்தச் சுரங்கங்களின் மொத்த ஆண்டு உற்பத்தித் திறன் 2.9 மில்லியன் டன். இந்தத் திட்டங்களில், நிறுவனம் ரூ.849 கோடி மொத்த மூலதனச் செலவுத் தொகையை வழங்கியுள்ளதுடன், 647 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரா முதலமைச்சர் திரு.உத்தவ் தாக்கரே, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி ஆகியோர் சுரங்கங்களை காணொளி மூலம் துவக்கி வைத்தனர். ‘’ டபிள்யூசிஎல் நிறுவனம் 2023-2024 –ஆம் நிதியாண்டில் 75 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்யவுள்ளது. இந்த இலக்கை எட்டுவதற்கான முயற்சியில் , தொடங்கப்பட்டுள்ள புதிய சுரங்கங்கள் உதவும். மேலும் கோல் இந்தியா நிறுவனம் ஒரு பில்லியன் டன் உற்பத்தி இலக்கை 2023-2024 நிதியாண்டில் எட்டுவதற்கும் இது உதவும்’’,என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி இந்த நிகழ்ச்சியின் போது கூறினார். டபிள்யூசிஎல் திறந்துள்ள மூன்று சுரங்கங்கள், 1) அடாசா சுரங்கம், மகாராஷ்டிராவின் நாக்பூர் பகுதியில் பூமிக்கடியில் சுரங்கம், 2) கன்ஹன் பகுதியில் சாரதா நிலத்தடிச் சுரங்கம், 3) மத்தியப்பிரதேசத்தின் பெஞ்ச் பகுதியில் தன்காசா நிலத்தடி சுரங்கம். அடாசா சுரங்கத்தின் ஆண்டு நிலக்கரி உற்பத்தி 1.5 மில்லியன் டன். சாரதா மற்றும் தன்காசா சுரங்கங்களின் ஆண்டு உற்பத்தி முறையே 0.4 மில்லியன் டன் மற்றும் 1 மில்லியன் டன் நிலக்கரி. இந்த நிலக்கரிச் சுரங்கங்களின் செயல்பாட்டை டபிள்யூசிஎல் ஐ என்னும் கண்காணிப்பு முறையை நிறுவனம் துவங்கியுள்ளது. மேலும், சம்வாத் என்னும் செயலியை ஊழியர்கள் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புள்ளவர்களை இணைப்பதற்காக தொடங்கப்பட்டுள்ளது. டபிள்யூசிஎல் ஐ, நிறுவனத்தின் பெரிய சுரங்கங்களின் இயக்கத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும். நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தியில் 70 சதவீதத்தை இந்தச் சுரங்கங்கள் நிறைவு செய்கின்றன. நிலக்கரி இருப்பு, நிலக்கரி அளவு, ரயில்களில் ஏற்றுவதற்கான நிலக்கரி மீது கவனம் செலுத்துவது ஆகியவற்றைக் கண்காணிக்க இது உதவுவதுடன், பொறுப்புடமையை உறுதி செய்யும். சம்வாத் கைபேசி ,கணினிச் செயலி ஊழியர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கானது. யோசனைகள், ஆலோசனைகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு மெய்நிகர் தளமாக இது இருக்கும். துரித செயல்பாட்டு குழுக்கள், 7 நாட்களுக்குள் கேட்கப்படும் கேள்விகள், தெரிவிக்கப்படும் யோசனைகளுக்குப் பதில் அளிக்கும். கோல் இந்தியா நிறுவனத்தின் பல்வேறு துணை நிறுவனங்கள், கொவிட்-19 தொற்றுக்கு எதிராக மத்தியப்பிரதேச மாநிலத்தின் போராட்டத்துக்கு உதவ ரூ.20 கோடி வழங்கியுள்ளதாக திரு.ஜோஷி தெரிவித்தார். தொற்றுக்கு எதிரான போரில், நடவடிக்கைகளை வலுப்படுத்த, மகாராஷ்டிர மாநிலத்துக்கு ரூ.20 கோடியை இன்னும் ஓரிரு நாட்களுக்குள் கோல் இந்தியா நிறுவனம் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில், இலக்குகளை அடைவதற்கான 100 நாள் இயக்கம் என்னும் வழிமுறையை டபிள்யூசிஎல் துவங்கியுள்ளது. இந்த இயக்கம் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் நீண்ட கால இலக்குகளை எட்டுவதற்கு உதவும். இந்த நிதியாண்டில் நிறுவனத்தின் உற்பத்தி இலக்கு 62 மில்லியன் டன் ஆகும். ‘’இந்த 3 சுரங்கங்கள் திறந்திருப்பது, 20 புதிய திட்டங்களை 2023-2024-ஆம் நிதியாண்டுக்குள் தொடங்க வேண்டும் என்ற டபிள்யூசிஎல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில், மகாராஷ்டிராவின் 14 சுரங்கங்களும், மத்தியப்பிரதேசத்தில் ஆறு சுரங்கங்களும் அடங்கும். இந்தத் திட்டங்களுக்கு மொத்தம் ரூ.12,753 கோடியை முதலீடு செய்து, 14,000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்க உத்தேசித்துள்ளது’’, என்று திரு. ஜோஷி கூறினார். இந்த நிறுவனம் கடந்த ஆறு ஆண்டுகளில், ரூ.5300 கோடி முதலீட்டில் 20 புதிய மற்றும் விரிவாக்கத் திட்டங்களை ஏற்கனவே தொடங்கியுள்ளது. இத்திட்டங்களுக்கு நிலம் வழங்கிய 5250 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டபிள்யூசிஎல் நிறுவனம் 2019-2020-ஆம் நிதியாண்டில் 57.64 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. இது முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 8 சதவீதம் அதிகமாகும்.

(Release ID: 1629932) Visitor Counter : 295