பிரதமர் அலுவலகம்
உலக அளவிலான தடுப்புமருந்துக்கான மெய்நிகர் உச்சி மாநாடு 2020இல் பிரதமர் உரையாடினார்.
இந்த சவாலான காலத்தில் உலகத்துடன் ஒன்றிணைந்து உறுதியாக இந்தியா நிற்கிறது என்றார் பிரதமர்.
சர்வதேச ஒத்துழைப்புடன் கூடிய தடுப்பு மருந்துத் தயாரிப்புக் கூட்டமைப்பான காவி அமைப்புக்கு, இந்தியா 15 மில்லியன் US டாலர் அளிக்கவுள்ளது.
Posted On:
04 JUN 2020 7:30PM by PIB Chennai
தடுப்பு மருந்துகள் தயாரிப்பதற்கான, உலக அளவிலான கூட்டமைப்பான Gavi அமைப்புக்கு 15 மில்லியன் US டாலர் அளிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
இங்கிலாந்தின் பிரதமர் திரு. போரிஸ் ஜான்சன் ஏற்பாடு செய்த உலக அளவிலான தடுப்பு மருந்து மெய்நிகர் உச்சி மாநாட்டில் 50 நாடுகள் - வர்த்தகத் தலைவர்கள், ஐக்கிய நாடு அமைப்புகள், சிவில் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், அரசாங்க அமைச்சர்கள், மாநிலங்கள் மற்றும் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற - இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்த சவாலான காலத்தில், இந்தியா உலகுடன் ஒன்றிணைந்து உறுதியாக நிற்கிறது என்று கூறினார்.
உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று பார்க்க வேண்டும் என்று இந்திய நாகரிகம் கற்றுத் தருகிறது என்றும், இந்தப் பெருந்தொற்று காலத்தில் இந்தியா இதற்கேற்ப வாழ முயன்று வருகிறது என்றும் திரு. மோடி கூறினார். இந்தியா தன்னிடம் உள்ள மருந்துப் பொருள்களை 120 நாடுகளுக்கு பகிர்ந்தளித்தது; கோவிட்-19 நோய்க்கு எதிராக அண்டை நாடுகள் அனைத்தும் இணைந்து போராடும் பொதுவான உத்தி ஒன்றை ஏற்படுத்தி, தேவைப்படும் நாடுகளுக்கு குறிப்பிட்ட உதவி வழங்குவதையும் இந்தியா செய்து வருகிறது என்றும் கூறினார். மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இந்தியா, தனது மக்களைப் பாதுகாக்கும் அதேநேரத்தில் இவற்றையெல்லாம் செய்து வருகிறது.
சில வழிகளில் உலக அளவிலான ஒத்துழைப்பில் சில வரையறைகள் உள்ளன என்பதை கோவிட்-19 வெளிப்படுத்தியுள்ளது. வரலாற்றில் முதன்முறையாக மனிதகுலம் பொதுவானதொரு எதிரியை எதிர்கொண்டுள்ளது.
Gavi என்பது உலக அளவிலான கூட்டமைப்பு மட்டுமல்ல; உலக அளவிலான ஒற்றுமை உணர்வின், உறுதிப்பாட்டின் சின்னமாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நமக்கு நாமே உதவி செய்து கொள்கிறோம் என்பதை நமக்கு நினைவுபடுத்துவதாகவும் இது அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்தியாவில் பெருமளவிலான மக்கள் தொகை உள்ளது என்றும், வரையறைக்குட்பட்ட சுகாதார வசதிகளே உள்ளது என்றும், நோய் தடுப்புக்கான முக்கியத்துவத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமது அரசாங்கத்தால் முதன்முதலில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களில் ஒன்று மிஷன் இந்திரதனுஷ்.. இந்தத் திட்டம் இந்த மிகப் பெரும் தேசத்தின் தொலைதூரப் பகுதிகளில் உள்ளவர்கள் உட்பட, நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் கருவுற்ற பெண்களுக்கு முழுமையாக தடுப்பு மருந்து அளிப்பது என்பதை நோக்கமாகக் கொண்டது.
பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக மேலும் ஆறு புதிய தடுப்பு மருந்துகளை தேசிய நோய்த் தடுப்புத் திட்டத்தின் கீழ் கூடுதலாக இணைத்திருப்பதாக அவர் கூறினார்.
இந்தியா தனது முழுமையான தடுப்பு மருந்து வழங்கும் தொடரை டிஜிட்டல் மயமாக்கி உள்ளது என்பதை விவரித்த பிரதமர், மின்னணு தடுப்புமருந்து அறிவுத்திறன் நெட்வொர்க் ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் இதன் ஒருமுகத்தன்மை கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இதுபோன்ற புதுமையான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் கடைக்கோடியில் உள்ள மக்களுக்கும் சரியான நேரத்தில், சரியான அளவில், பாதுகாப்பான, திறமையான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்ய முடிகிறது என்றார் அவர்.
உலகிலேயே முதன்முதலில் தடுப்பு மருந்துகள் தயாரித்த நாடுகளில் ஒன்று இந்தியா என்று கூறிய பிரதமர், உலகத்தில் உள்ள குழந்தைகளில் 60 சதவிகிதம் பேருக்கு நோய்த்தடுப்பு வசதி செய்து கொடுப்பதற்கான நல்வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது என்றார்.
Gavi அமைப்பின் பணிகளை இந்தியா, அங்கீகரிப்பதோடு, மதிப்பளிக்கிறது என்றும்; அதனால்தான் Gavi அமைப்புக்கு இந்தியா நன்கொடையாளராக மாறியது என்றும்
இப்போதும் Gaviயின் ஆதரவுக்கு தகுதி உடையதாகவும் உள்ளது என்றும் கூறினார்.
இந்தியா Gavi அமைப்புக்கு அளிக்கும் ஆதரவு நிதி ரீதியிலானது மட்டுமல்ல; இந்தியாவின் மிகப்பெரிய அளவிலான தேவை, அனைவருக்குமே தடுப்பு மருந்துகளுக்கான உலக அளவிலான விலையைக் குறைக்க உதவுகிறது என்றும், கடந்த ஐந்தாண்டு காலத்தில் Gavi அமைப்புக்கு 400 மில்லியன் டாலர் சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இந்தியா உலகுடன், ஒன்றிணைந்து உறுதியாக நிற்கிறது என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார். குறைந்த செலவில் தரமான மருந்துகளையும், தடுப்பு மருந்துகளையும் உற்பத்தி செய்வதற்கான நிரூபிக்கப்பட்ட திறமை இந்தியாவிற்கு உள்ளது; விரைவாக விரிவடைந்து வரும் நோய்த்தடுப்பு உள்நாட்டு அனுபவங்களும் கணிசமான அறிவியல் ஆராய்ச்சித் திறன்களும் கொண்டுள்ளது இந்தியா என்றும் அவர் கூறினார்.
உலக அளவிலான சுகாதார நடவடிக்கைகளுக்குப் பங்காற்றும் திறன் கொண்டது மட்டுமல்ல; மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், மற்றவர்கள் மீது அக்கறையுடன் இருத்தல்; என்ற உணர்வுடன் அதைச் செய்வது என்பதற்கான மனத்திட்பம் இந்தியாவிற்கு உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
(Release ID: 1629577)
Visitor Counter : 251
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam